மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலத்திலிருக்கும் பச்சைக்கல் சுரங்கம் ஒன்றில், இன்று காலை மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்தச் சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். சுமார் 100 சுரங்கப் பணியாளர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹப்கண்ட் என்னும் பகுதியிலுள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து உள்ளூர்க் காவலர்கள் கூறுகையில், ``விடியற்காலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு இந்த விபத்தில் ஒருவர் இறந்துவிட்டார். தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. சுமார் 100 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே நிலவரம் தெரியும்" என்றனர்.
மியான்மரின் கச்சின் மாகாணத்தில் பச்சைக்கல் சுரங்கங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்தச் சுரங்கங்களை நம்பியே ஏராளமான கிராம மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திவருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தச் சுரங்கங்களில் இப்படிப்பட்ட நிலச்சரிவுகளும், கோர விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, கச்சின் மாகாணத்தின் ஹப்கன்ட் பகுதியில் சுரங்கங்கள் அரைகுறையாகத் தோண்டப்படுவதே இத்தகைய விபத்துகள் அதிக அளவில் நிகழக் காரணம் என்று கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில், சென்ற வருடம் ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 174 பேர் உயிரிழந்தனர். மேலும், 54 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மீட்புப் பணி; விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்; 12 மணி நேரம் நீந்தி உயிர்பிழைத்த மடகாஸ்கர் அமைச்சர்!
source https://www.vikatan.com/news/international/1-dead-100-feared-missing-after-landslide-at-myanmar-jade-mine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக