எனக்குத் திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன. இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு குழந்தை வேண்டாம் என்ற முடிவிலிருக்கிறேன். கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது, காப்பர் டி உபயோகிப்பது- இரண்டில் எது சரி? முதல் குழந்தையைத் தள்ளிப்போட்டால் பிறகு கருத்தரிப்பதில் சிக்கல் வரலாம் என்று சிலர் சொல்வது உண்மையா?
- பிருந்தா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
``இந்த விஷயத்தில் உங்கள் இருவரின் வயதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நீங்கள் அதைக் குறிப்பிடாததால் பொதுவான விளக்கத்தையே தர முடியும்.
ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி இருக்கிறது. இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று நினைப்பதால் நீங்கள் கருத்தடை மாத்திரைகளையோ, காப்பர் டி போன்ற கருத்தடை முறையையோ உபயோகிக்கலாம். கருத்தடை மாத்திரைகளைப் பொறுத்தவரை அவை பலனளிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு. நாள் தவறாமல் எடுத்துக்கொண்டால் பீரியட்ஸிலும் பிரச்னை இருக்காது. கர்ப்பமும் தரிக்காது. கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதை நிறுத்திய பிறகும் கருத்தரிப்பதற்கான தன்மை எந்தவகையிலும் குறைந்திருக்காது.
Also Read: Doctor Vikatan: கர்ப்பப்பை வாயில் போடப்பட்ட தையல் பிரிந்தால் என்ன செய்வது?
அதாவது, கருத்தரிக்கும் இயல்பானது, கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதற்கு முன் எப்படியிருந்ததோ மாத்திரைகளை நிறுத்திய பிறகும் அப்படியேதான் இருக்கும். கர்ப்பம் தரிப்பதை அது எந்த வகையிலும் பாதித்திருக்காது.
அடுத்து காப்பர் டி... முன்பெல்லாம் ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி விட நினைத்தவர்களுக்கு காப்பர் டி பரிந்துரைக்கப்பட்டது. இப்போது முதல் குழந்தையைத் தள்ளிப்போட நினைப்பவர்களுக்கும் காப்பர் டி பரிந்துரைக்கப்படுகிறது. சிலருக்கு முதல் இரண்டு, மூன்று பீரியட்ஸின்போது முறையற்ற சுழற்சியும், அதிக ப்ளீடிங்கும் இருக்கலாம். அந்தப் பிரச்னைகளை மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம்.
Also Read: Covid Questions: அடுத்த மாதம் பிரசவம்; பிறக்கும் குழந்தைக்கு தொற்று வராமல் எப்படிப் பாதுகாப்பது?
குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரும்போது காப்பர் டியை எடுத்துவிடலாம். அதை நீக்கிய பிறகும் கருத்தரிக்கும் தன்மை அப்படியேதான் இருக்கும். கருத்தடை மாத்திரைகளோடு ஒப்பிடும்போது காப்பர் டியில் அதன் பலன் தோல்வியடைய சிறிய சதவிகிதம் வாய்ப்புண்டு. உங்கள் இருவரின் வயது, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கேற்ப, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உங்களுக்கான கருத்தடை முறையைத் தேர்வு செய்யுங்கள்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/what-is-the-best-contraceptive-method-to-avoid-pregnancy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக