கல்வி - எல்லோரும் விரும்பும் பெரிய சொத்து ஆனால் படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை, குடும்பச் சூழ்நிலையால் பலருக்கு அது பாதியில் தடைபட்டு நிராசையாகப் போய்விடுகிறது, அதுவும் கொரோனா காலத்தில் இதன் சதவிகிதம் இன்னும் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. பிள்ளைகளின் படிப்பைவிட பிள்ளைகளின் வருமானம் வந்தால்தான் வாழ முடியும் என்கிற நிலை இங்கே பல குடும்பத்தில் இருப்பது கசக்கும் நிஜம்.
பலவித கஷ்டங்களுக்கு நடுவிலும் தன்னை படிக்க வைக்கும் பெற்றோர்களின் அருமையை பிள்ளைகள் உணர்ந்து கொள்ளும் விதமாகவும் மேலும் அது போன்ற பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வளர்ந்து கொண்டே இருந்தது.
பெரம்பூரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலை அரசு பள்ளியில் படிக்கும் சுமார் 2800 மாணவிகளில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் 26 மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுடனும் அவர்களின் பெற்றோர்களுடனும் மிதுலாவின் இந்த வருட பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம்.
குடும்ப வறுமையிலும் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் கிடைப்பது வரம், இருபத்தியாறு மாணவிகளின் உன்னதமான அந்த பெற்றவர்களை பள்ளிக்கு வரவழைத்து பிள்ளைகளின் கைகளால் அவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்தோம். "உங்கள் மகள் உங்களின் கஷ்டம் உணர்ந்து இனி இன்னும் பொறுப்புடன் படித்து நல்ல நிலைக்கு உயர்வாள், உங்களைப் பெருமைப்படுத்துவாள், இது ஒரு சின்ன ஆரம்பம்தான்" என்று நாங்கள் மனதார சொன்ன வார்த்தைகளில் அவர்கள் மனம் குளிர்ந்து போனார்கள்.
மனதுக்கு இதமாகவும் மிகவும் இனிதாகவும் நடந்த அந்த நிகழ்ச்சியிலிருந்து சில ஹைலைட்ஸ்:
நமது எண்ணத்தை சொன்னவுடன் அதன் நோக்கத்தை புரிந்துகொண்டு மனதார பாராட்டியது மட்டுமில்லாமல் உடனே ஒரு ஆசிரியர் குழு அமைத்து மாணவிகளை தேர்ந்தெடுக்கும் பணியை துரிதமாக செய்துமுடித்த தலைமை ஆசிரியர் திருமதி செல்வகுமாரி அவர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
மிதுலா பிறந்த அதே தேதியில் பிறந்த விளிம்புநிலை மாணவிகள் பற்றிய விவரங்களைக் கேட்டிருந்தேன், அதே தேதியில் பிறந்த 56 மாணவிகள் இருப்பதாகவும் அதிலிருந்து 26 மாணவிகளை தேர்வு செய்து எனக்கு பட்டியலிட்டு அனுப்பி இருப்பதாகவும் எனக்கு தகவல் வந்தது. உடனே போனில் அழைத்து நன்றி சொல்லிவிட்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொன்னபோது அவர்கள் குரலில் ஒரு தயக்கமிருப்பதை உணர்ந்தேன். விசாரித்ததில் தயங்கியபடியே அவர்கள் சொன்னது:
"ஸார்.. இந்த லிஸ்ட்ல இருக்கிற மாணவிங்க எல்லாம் ஏழைங்கதான் ஆனா, இவங்களவிட ரொம்ப கஷ்டபடற வேற சில மாணவிங்க இங்க இருக்காங்க ஆனா அவங்கெல்லாம் நீங்க சொன்ன தேதியில் பிறக்கல" என்றார்கள்.
"மேடம், தேதிங்கிறது ஒரு சம்பிரதாயத்துக்குதான், அந்தப் பணம் கஷ்டபடறவங்களுக்கு கொடுக்கிறதுதான் சரி. சிரமம் பார்க்காம உடனே லிஸ்ட மாத்தி கொடுங்க, பிளீஸ்..." என்றேன். "ரொம்ப தேங்ஸ் ஸார்.. " என்றவரின் குரலில் சந்தோஷம் தெரிந்தது.
திருத்தப்பட்ட பட்டியலில் வேறுவேறு தேதியில் பிறந்த மாணவிகள் இருந்தார்கள் அப்படியும் மிதுலா பிறந்த அதே தேதியில் மூன்று மாணவிகள் இருந்தார்கள். அது சரியா என இன்னொரு முறை உறுதி செய்து கொண்டேன்.
மாலை சுமார் மூன்றரை மணியளவில் அழகான ஒரு முன்னுரையுடன் தலைமை ஆசிரியர் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள். அதைத் தொடர்ந்து மிதுலாவின் நலனுக்காக இரண்டு நிமிடம் கண்மூடி எல்லோரும் கூட்டு பிரார்த்தனை செய்து பின் அவளின் இந்த அன்புச் செயலுக்கு தங்களது பாராட்டை பலத்த கை தட்டலில் தெரிவித்தார்கள்.
பிறகு மிதுலாவும் மற்ற மூன்று மாணவிகளும் தங்கள் பிறந்தநாளை ஒன்றாகச் சேர்ந்து கேக் வெட்டி, கொண்டாடி மகிழ்ந்தார்கள். பள்ளியின் சார்பாக மிதுலாவிற்கு ஒரு நல்ல புத்தகம் பரிசளிக்கப்பட்டது, நன்றியுடன் பெற்றுக் கொண்டாள்.
கொரோனா ஆரம்ப காலத்திலிருந்தே மிதுலா மாதம் ஒருமுறை உணவு பொட்டலங்கள் சிலவற்றை வாங்கி ஏதாவது ஒரு ஏரியாவுக்கு போய் கண்ணில் படும் எளிய மக்களுக்கு கொடுத்துவிட்டு வருவது வழக்கம்.
அந்த 26 பேரில் ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு கவரை கொடுத்து உடன் வந்திருந்த அவளின் அம்மாவுக்கு பரிசளிக்க சொன்ன போது...
"அக்கா.. நீங்க HM ரூமுக்குள்ள வரும்போதே உங்களை நான் கண்டுபிடிச்சிட்டேன், ஒருவாட்டி எங்களுக்கு நீங்க சாப்பாடு வாங்கி கொடுத்தீங்களே..." என்றாள். எப்போதோ வாங்கி தந்த ஒரு உணவுப் பொட்டலத்தை அந்த சிறுமி ஞாபகம் வைத்திருந்து குறிப்பிட்டதில் நெகிழ்ந்து போய் கண்களில் நீர் துளிர்க்க மிதுலா அவளை ஆசையுடன் கட்டி அணைத்துக் கொண்டாள்.
எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி சொல்லி, எங்கள் எண்ணம் நல்லபடியாய் நிறைவேறியதில் மன நிறைவுடன் வீடு வந்து சேர்ந்தாலும் மனதை ஏதோ ஒன்று பாரமாய் அழுத்திக் கொண்டே இருந்தது.
- பாலகுமார்
source https://www.vikatan.com/oddities/education/birthday-celebration-at-school
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக