2030-ம் ஆண்டுக்குள் தொண்டை மண்டலத்தை முழுமையான இயற்கை வேளாண் மண்டலமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் C.K.அசோக்குமாரிடம் பேசினோம். ``இந்திய சாஷே புரட்சியின் முன்னோடி சின்னி கிருஷ்ணன் என்னுடைய தந்தை. என்னுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள். நான் வழக்கறிஞராகப் படித்துள்ளேன். ஏதாவது புதுமை படைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருக்கும். பொதுவாக இன்ஜினீயரிங் முடித்த இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்பு இன்றி கஷ்டப்படுகிறார்கள். அதுபோன்றே இளைய சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தொழில்முனைவோராக மாற்றினால் நன்றாக இருக்கும், நமது நாட்டை வலுவான நாடாக மாற்ற முடியும் என எனக்கு தோன்றியது. அது போன்றதான ஒரு சமயத்தில்தான், எங்கள் கல்லூரியில் பொறியியல் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு வந்தனர். `நீங்கள் ஏன் தொழில்முனைவோராக ஆகக் கூடாது?' என்று கேட்டேன். `எங்களுக்கு அனுபவம் ஏதுமில்லை' என்றார்கள். உடனே கடலூரில் உள்ள எங்களுடைய வெட்டிவேர் பண்ணையில் பயிற்சி அளித்தோம். பின்னர், அவர்களுக்கு மும்பையைச் சேர்ந்த நபரிடம் வெட்டிவேர் கான்ட்ராக்ட் கிடைத்தது. அவர்கள் இப்போது தொழில்முனைவோராக மாறியுள்ளனர். அது எனக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விஷயமாக இருந்தது.
Also Read: இயற்கை உணவு... உடற்பயிற்சி... நடிகர் வேல ராமமூர்த்தியின் ஃபிட்னஸ் சீக்ரெட்..!
அண்மையில் நாங்கள் வெளிநாடுகளுக்குப் போகும்போது அங்குள்ள பல தமிழர்களைச் சந்தித்தோம். `நாங்க இந்தியாவுக்கு வர்றப்ப எல்லாம் ஒரு சுற்றுலா பயணி போல பார்த்துட்டு வந்துடுறோம். நாங்க மொழியை இழந்துட்டாலும், தமிழர்களின் கலாசாரத்தோடு இணைந்து வாழ நெனைக்கிறோம்' என்றனர். எனவே, நமக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்... மூன்று வருடங்களுக்கு முன்னர் `முதல் உலக மூத்தகுடி' (First world community) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினோம். இது வருவாய் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட நிறுவனம் அல்ல. இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு நிறுவனமாகத்தான் இதை உருவாக்கியுள்ளோம். குறிப்பாக, இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்ற வேண்டும். தன் வாழ்க்கையில் நல்ல அனுபவங்களைப் பெற்ற நபர்கள், அவர்களுடைய அறிவையும் அனுபவத்தையும், ஞானத்தையும் இளைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள செய்ய வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
சிறு, குறு தொழில்கள் வளரும்போதுதான் நம் நாடு வல்லரசாக மாறமுடியும். அதற்கான பாதையாக விவசாயம், மருத்துவம், கல்வி ஆகிய மூன்று வழிகளைத் தேர்ந்தெடுத்தோம். உலகத்துக்கே தெரிந்த முதல் தொழில் விவசாயம்தான். காலப்போக்கில் தொழில் புரட்சி வந்தது, டிஜிட்டல் புரட்சி வந்தது. இவை வந்த பின்னர் விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. புதுவை கூனிச்சம்பட்டு எனும் பகுதியில் வீரப்பன் (35) எனும் இயற்கை விவசாயி `யாழினி' என்ற பெயரில் ஒருங்கிணைந்த பண்ணை வைத்துள்ளார். பழைய தமிழர்களின் குணாதிசயங்களை அவரிடம் நான் பார்த்தேன். `மாசம் ரூ.40,000 வரை சம்பாதிக்கிறேன். ஆனால், நான் விவசாயி என்பதால் யாரும் பெண் கொடுக்க மாட்டேங்குறாங்க' என்றார். விவசாயத்தை மதிக்காத ஒரு சமூகமாகத்தான் இன்றைய நிலைமை உள்ளது. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, `விவசாயி இந்த உலகுக்கே உணவு கொடுக்கிறார். அவர்களை இந்தச் சமூகம் மதிக்க மாட்டேங்கிறதே' என்ற ஆதங்கம்.
Also Read: ``உரத் தட்டுப்பாட்டுக்கு எப்போதுதான் நடவடிக்கை எடுப்பீங்க?" - உதவி எண்ணில் கொந்தளித்த விவசாயி
எனக்கு இப்போது 65 வயது ஆகிறது. இன்றைய நாள்களில் நோய் அதிகமுள்ள ஒரு சமூகத்தைதான் நாம் பார்க்கிறோம். காரணம் என்னவென்றால் இயற்கையை விட்டு நாம் விலகி வந்துவிட்டோம். இயற்கை விவசாயத்துக்கு நாம் திரும்புவதன் மூலம் இவற்றை நாம் மீட்டெடுக்க முடியும். அதன்படிதான், `தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு' (THOFA) உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 13 மாவட்டத்திலுள்ள இயற்கை விவசாயிகளை இந்தத் தொண்டை மண்டலத்துக்குள் வருவார்கள். திருவாண்ணாமலையை மையமாகக் கொண்டு THOFA செயல்படும். `நஞ்சில்லா உணவு செய்வோம்! நோயில்லா உலகை படைப்போம்!' என்பதுதான் THOFA-வின் முக்கிய நோக்கம்.
இன்று சிறு, குறு விவசாயிகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சந்தைப்படுத்துவதுதான். அதனால் கிடைக்கும் விலைக்கே அந்த விவசாயி, தான் விளைவித்த பொருள்களைக் கொடுத்துவிடுகிறார். அதை வாங்கி விற்பனை செய்யும் இடைத்தரகர் அதிக லாபம் ஈட்டுகிறார். எனவே, THOFA மூலமாக விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை அவர்களே மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கு பயிற்சி கொடுப்போம். அதுமட்டுமன்றி சிறு, குறு இயற்கை விவசாயிகளை `விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின்' (FPO) கீழ் ஒன்றிணைத்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவோம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்போம். எங்களுக்கு சுமார் 20 நாடுகளுடன் வியாபார வர்த்தக நெட்வொர்க் உள்ளது. அது இப்பணியை மேலும் சுலபமாக்கும். இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தையும் மக்களுக்கு எடுத்துரைப்போம்.
அதேபோல, இயற்கை விவசாயிகளின் விளைபொருள்களுக்கான நேரடி விற்பனை மையத்தைத் தொடங்குவது, நாட்டு இன மாடுகளைப் பாதுகாத்து பால் உற்பத்தியைப் பெருக்குவது, விளையாத நிலங்களை கண்டறிந்து விவசாயம் செய்ய ஆர்வமுள்ள இளைஞரிடம் கொடுத்து விவசாயத்தை அதிகரித்து தொழில் வாய்ப்பை அதிகப்படுத்துவது போன்றவை THOFA-வின் முக்கிய நோக்கங்களாகவும் செயல்பாடாகவும் இருக்கும். 2030-ம் ஆண்டுக்குள் இந்தத் தொண்டை மண்டலத்தை முற்றிலும் இயற்கை விவசாயம் நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம்.
இந்தியாவிலேயே சிக்கிம் மாநிலம்தான் இயற்கை முறை விவசாயத்துக்கு முற்றிலும் மாறியுள்ளது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் டாக்டர்.அன்பழகன். அவர் நமது THOFA-வுக்கு ஆலோசகராக வருகிறார். ரசாயனம் இல்லாத விவசாயத்தை முன்னெடுத்து செய்தவர் நம்மாழ்வார். அவர் காலம் சென்றதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான இளைஞர்கள் இயற்கை விவசாயத்துக்கு வந்துள்ளனர். ஒரு பசுமைப் படையே உருவாகியுள்ளது. இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று லட்சங்களில் இயற்கை விவசாயிகளை உருவாக்க வேண்டும். எனவே, இயற்கை விவசாயிகளை ஒன்றிணைக்கும் `தொண்டை மண்டல இயற்கை வேளாண் திருவிழா' வரும் ஜனவரி மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.
Also Read: இயற்கை வேளாண்மைக்குத் தனிப்பிரிவு... நம்மாழ்வார் ஆராய்ச்சி மையம்... தமிழக வேளாண்மை பட்ஜெட் 2021-22
அன்றைய தினங்களில், விதை பரிமாற்றம், உணவு திருவிழா; பாரம்பர்ய விளையாட்டு, 24 வகையான தொல்நூட்ப முறைகள், இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு, கண்காட்சி போன்றவை நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சி பசுமை விகடன் இதழில் ஊடக ஆதரவு அளிப்பது எங்களுக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.
இதற்கு முன்பாக நம்மாழ்வாரின் நினைவு நாளையொட்டி வரும் 31 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி 1-ம் தேதிகளில் கடலூரில் `உழவர்கள் சங்கமம்' நடைபெற உள்ளது. பாரம்பர்ய உணவு மற்றும் விதைகள் பகிர்வு திருவிழாவாக அது இருக்கும். உழவுக்கரங்கள் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வீரத்தமிழன் தலைமையில் நடைபெறுகிறது. உழவர்களுக்கு தோள் கொடுக்கும் தோழனாக நிச்சயம் THOFA இருக்கும்" என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/thofa-to-conduct-organic-farming-event-next-month-in-thiruvannamalai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக