ஐந்து வருடங்களுக்கு முன் பித்தப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அதிலிருந்து எனக்கு செரிமானம் சீராக இல்லை. வயிற்றெரிச்சல் இருக்கிறது. பித்தப்பையை நீக்கியதுதான் பிரச்னையா?
- சங்கரி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்.
``உங்களுக்கு எந்தக் காரணத்துக்காக பித்தப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்தார்கள் என்று தெரிய வேண்டும். பெரும்பாலானவர்களுக்கும் பித்தப்பையில் கற்கள் சேரக் காரணமே அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதுதான். கொழுப்பை செரிக்கவைப்பதுதான் பித்தப்பையின் வேலையே. அளவுக்கதிகமான கொழுப்பு சாப்பிடும்போது பித்தப்பை வீங்கி, கற்கள் உருவாகி, ஒரு கட்டத்தில் பித்தப்பையையே அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
40 வயதில் ஒரு பெண் உடல் பருமனோடு இருந்தால் அவருக்கு பித்தப்பை கற்கள் வரும் என்று மருத்துவத்தில் சொல்வதுண்டு. மருத்துவத்தில் Female, Fertile, Fat, Fair, and Forty என இதை 5 F's என்றே குறிப்பிடுவதுண்டு.
Also Read: Doctor Vikatan: தினமும் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?
பெரும்பாலும் பெண்களை பாதிக்கும் பிரச்னை இது. அதிலும் குறிப்பாக 40 வயதுக்கு மேலான, பருமனான பெண்களைக் குறிவைப்பது.
எனவே பித்தப்பை கற்கள் உருவாகக் காரணமான உங்கள் உணவுப்பழக்கத்தை நீங்கள் முதலில் மாற்ற வேண்டும். அதை மாற்றினால்தான் வயிற்றெரிச்சல் சரியாகும். பித்தப்பை கற்களுக்கும் வயிற்றெரிச்சலுக்கும் காரணமே உங்கள் தவறான உணவுப்பழக்கம்தான். அதைச் சரிசெய்யாமல், பித்தப்பையை நீக்கியதோடு, வயிற்றெரிச்சலை தொடர்புபடுத்துகிறீர்கள்.
Also Read: Doctor Vikatan: கர்ப்பப்பை வாயில் போடப்பட்ட தையல் பிரிந்தால் என்ன செய்வது?
பித்தப்பையிலிருந்து பித்த நீர் சுரக்கும். பித்தப்பையை நீக்குவதால் கொழுப்பை செரிப்பதில் உங்களுக்குப் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்துக்காகவே அதை நீக்கியிருப்பார்கள். எனவே மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும். அவர் பரிந்துரைக்கும் உணவுப்பழக்கத்துக்கு உடனடியாக மாறவும்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/will-removing-gall-bladder-solve-digestive-problems
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக