Ad

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

`மோடி அரசின் திட்டங்களை திமுக அரசு காப்பியடிக்கிறது!’ - அண்ணாமலை விமர்சனம் எத்தகையது?!

தமிழகத்தில் நடைபெற்றுவரும் தி.மு.க அரசை தமிழக பா.ஜ.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில், `மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு காப்பியடிக்கிறது’ என்று விமர்சித்துள்ளார், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, ``ஆளுபவர்களுக்கு சரியாக ஆளத் தெரியவில்லை என்றால், நின்று பால் கறக்கும் மாடு கூட ஆடிக்கிட்டு இருக்குமாம். இதுதான் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. யார் யாரையோ கொண்டுவந்து அமைச்சர் ஆக்குகிறார்கள். உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்க வேண்டும் என்று ஓர் அமைச்சர் பேசியிருப்பது பற்றி அமைச்சர் கே.என்.நேருவிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டதற்கு, ‘இவரைவிட கோளாறான ஆளெல்லாம் இருக்காங்க’ என்று பதிலளித்துள்ளார். கோளாறு... கோளாறு... கோளாறு. இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை” என்று விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை

மேலும் அவர், ``சுயமாக ஒரு திட்டத்தை வடிவமைத்து அதைச் செயல்படுத்துவது சாதாரண வேலை கிடையாது. பிரதமர் மோடி கொண்டுவந்த அனைத்துமே புதுமையான திட்டங்கள். ஒவ்வொரு திட்டத்தையும் சிறப்பாக வடிவமைத்து பிரதமர் செயல்படுத்திவருகிறார். புதுமையான திட்டங்களைக் கண்டுபிடித்து அவற்றை செயல்படுத்தும்போதுதான் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.

ஆனால், தமிழகத்தில் என்ன புதுமையான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள்? தி.மு.க ஆட்சியில் அமர்ந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எந்தவொரு புதுமையான திட்டமும் கிடையாது. மத்திய அரசின் திட்டங்களைக் காப்பியடிக்கிறார்கள். வந்த திட்டத்தின் மீது லேபிள் ஒட்டுகிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

எதன் அடிப்படையில் இந்த விமர்சனத்தை அண்ணாமலை முன்வைத்தார் என்று பா.ஜ.க-வின் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத்திடம் கேட்டோம். ``பிரதமர் மோடி 50 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்துவருகிறார். முதல்வர், பிரதமர் ஆகிய பதவிகளில் தொடர்ந்து இருந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். பிரதமருடன் ஒப்பிடுகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு அந்தளவுக்கு அனுபவம் இல்லை. 50 ஆண்டுகளாக இடைவிடாது அரசியலில் இயங்கிக் கொண்டிருந்தாலும், இப்போதுதான் முதல்வராகி இருக்கிறார்.

பிரதமர் மோடி எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். அதனால் எங்குச் சென்றாலும் மக்களுடன் தேநீர் அருந்துவது, உணவருந்துவது, சாதாரண மக்களப் பற்றி பேசுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதுபோலவே முதல்வர் ஸ்டாலினும் தெருவோர டீக்கடைகளில் டீ குடிப்பது, சைக்கிளில் செல்வது என்று மக்களோடு தொடர்பில் இருக்க முயன்று வருகிறார்.

ஏ.என்.எஸ்.பிரசாத்

அமைச்சரவையிலும், முக்கியப் பதவிகளிலும் அரசு நிர்வாகத்திலும் கட்சியினரை மட்டுமல்லாது அதிகாரிகள் மற்றும் திறமை வாய்ந்த நபர்களை மோடி பயன்படுத்திக் கொள்கிறார். அதுபோலவே முதல்வர் ஸ்டாலினும் திறமையான அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளதுடன், கட்சியினர் அல்லாத மற்றவர்களை திறமையின் அடிப்படையில் அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். பொருளாதார நிபுணர்கள் குழு மற்றும் பல்வேறு அரசு குழுக்களின் நியமனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

பிரதமர் மோடி எப்போதும் அதிகாரிகள், கட்சியினர், ஆதரவாளர்கள், பல்துறை நிபுணர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதன் மூலம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார். அதுபோலவே ஸ்டாலினும் உரையாடலைத் தொடங்கியிருப்பதாக அறிகிறேன். சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குபவர் மோடி. ஸ்டாலினும் அதனையே பின்பற்றுகிறார்.

மோடி

ஆனால், எத்தனை நபர்களிடம் ஆலோசித்தாலும், யார் என்ன கூறினாலும் இறுதி முடிவை எடுப்பது மோடி தான். ஆனால், ஸ்டாலின் அப்படி முடிவெடுப்பதாகத் தெரியவில்லை. அதுபோல தவறு செய்ய முற்படும் அமைச்சர்களையும், திறமையாக செயல்பட முடியாத அமைச்சர்களையும் வெளியேற்ற மோடி தயங்குவதில்லை. அமைச்சர்களுக்கு பணி இலக்குகளை நிர்ணயித்து அவர்களைக் கண்காணித்து திறம்பட வழிநடத்தி வருகிறார். இதனையும் ஸ்டாலின் பின்பற்றினால் அவருக்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லது” என்றார் ஏ.என்.எஸ்.பிரசாத்.

மத்திய அரசின் புதுமையான திட்டங்களை ஸ்டாலின் அரசு காப்பியடிக்கிறது என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று தி.மு.க செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான சிவ ஜெயராஜனிடம் கேட்டோம்.

“ஐ.பி.எஸ் பணியில் இருந்தவர் என்பதால் அண்ணாமலை மீது எனக்கு மரியாதை உண்டு. ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்து ஓராண்டுகூட ஆகாத நிலையில், மத்தியில் ஆளுகிற கட்சியின் மாநிலத் தலைவர் ஆகிவிட்டார். ஆனால், அவருக்கு அடிப்படையான அரசியல்கூட தெரியவில்லை. அரசியலில் எந்தளவுக்கு அவர் ஒரு கத்துக்குட்டியாக இருக்கிறார் என்பதை அவரின் பேச்சிலிருந்து எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மேலும், நான் அரசியலில் இருக்கிறேன், பா.ஜ.க என்று ஒரு கட்சி இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்.

சிவ ஜெயராஜன்

மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க அரசு காப்பியடிக்கிறது என்று சொல்வது மிகப்பெரிய நகைச்சுவை. திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் மூலமாக தமிழகம் எந்தளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுவிட்டது. 5 கி.மீ-க்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்று இருந்ததை, 2 கி.மீ-க்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்று அண்ணா கொண்டுவந்தார்.

2006-ல் ஒன்றரை கி.மீ-க்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்று தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டுமான வசதிகள், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் நிலைமை என்பதை அண்ணாமலை கூற வேண்டும்.

Also Read: ``அந்நிய சக்திகளின் அச்சுறுத்தலால்தான் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றோம்!'' - சொல்கிறார் ஹெச்.ராஜா

தமிழ்நாட்டின் இந்த முன்னேற்றத்தில் எங்கள் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் இதற்கு முன்பாக உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் தற்போது முதல்வராகவும் இருக்கும் ஸ்டாலினின் பங்கும் இருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 6 மாதங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் மழைவெள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதிலும் சிறப்பாக முதல்வர் செயல்பட்டிருக்கிறார்.

தி.மு.க ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது, கொரோனா தடுப்பூசி நடவடிக்கையில் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்றைக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதற்காக தேசிய ஊடகங்களும், பத்திரிகைகளும் தமிழக முதல்வரைப் பாராட்டுகின்றன. இதை அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, இப்படியெல்லாம் உளறுகிறார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் தமிழக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசுப் பேருந்துகளைப் பார்த்து, ‘ஸ்டாலின் பஸ்’ என்று தாய்மார்கள் சொல்கிறார்கள். இந்தத் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தப்போகிறோம். இதுபோன்ற திட்டத்தை குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்தாரா? அல்லது, பிரதமராக வந்த பிறகு இந்தியாவின் எந்தப் பகுதியிலாவது இப்படிப்பட்ட திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறாரா?

தி.மு.க அரசின் இந்தத் திட்டத்தை காப்பியடித்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தட்டும். அந்த மாநிலங்களில் பெண்கள் பயனடைவார்கள். அரசு விழாக்களில் முதல்வர் படம் இல்லை. பொங்கல் பரிசு பைகளில் முதல்வர் படம் இல்லை. தமிழக முதல்வரின் இதுபோன்ற வரவேற்கத்தக்க முன்னுதாரணங்களை பிரதமரும் பா.ஜ.க முதல்வர்களும் பின்பற்றட்டும்.

Also Read: பிரதமர் மோடி தூக்கிப்பிடிக்கும் இயற்கை விவசாயம்; இதற்கான விதை போடப்பட்டது இப்படித்தான்!

கடைசியாக, பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஒரு கேள்வி. கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் கடைசியாக இருக்கிறது. ஆனால், புதுக்கோட்டை அளவுக்குக்கூட இல்லாமல், புதுக்கோட்டையைக் காட்டிலும் மோசமான நிலையில் பிரதமர் மோடியின் தொகுதி அமைந்துள்ள வாரணாசி இருக்கிறது என்று நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டையும், தி.மு.க ஆட்சியின் திட்டங்களையும் காப்பியடிக்குமாறு பிரதமரையும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்களையும் அண்ணாமலை கேட்டுக்கொண்டால் தேசம் முன்னேறும்” என்றார் சிவ ஜெயராஜன்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalai-criticizes-dmk-government-what-was-the-background

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக