வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளையும் மீட்டிருக்கிறது வேலூர் போலீஸ். மிகவும் பரபரப்புக்குள்ளான இச்சம்பவம், எப்படி நடந்தது? என்பது குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஸ்கண்ணன் இருவரும் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமாக தெரியப்படுத்தினர்.
மீட்கப்பட்ட நகைகளைக் காண்பித்துபேசிய டி.ஐ.ஜி பாபு, ``கடந்த 15-ம் தேதி அதிகாலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த தனிப்படையினர் மிகக் கடினமாக புலன் விசாரணை செய்து, ஐந்து நாள்களுக்குள்ளேயே குற்றவாளியை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மீட்டெடுத்தனர். இதன் மொத்த மதிப்பு 8 கோடி ரூபாய்.
இதில், குறிப்பிடத்தக்கவை என்னவென்றால், தனிப்படையினர் விஞ்ஞான பூர்வமாகவும், பழைய முறையைப் பின்பற்றியும் தூங்காமல் இரவு பகலாக உழைத்து, 100 சதவிகித நகைகளையும் கைப்பற்றியுள்ளனர். குற்றவாளி பெயர் டீக்காராமன். இவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்குஉட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர். இன்று பிற்பகல், (அதாவது நேற்று) ஒடுகத்தூர் அருகே அவர் கைது செய்யப்பட்டார். நகைகளை ஒடுகத்தூர் பகுதியிலுள்ள சுடுகாட்டிலேயே புதைத்துவைத்திருந்தார். அவரை அங்கு அழைத்துச்சென்று, மாலையில் இந்த நகைகளை மீட்டனர். இந்தச் குற்றச்சம்பவத்தில், வேறு யாராவது ஈடுபட்டிருக்கிறார்களா அல்லது இவர் வேறு ஏதேனும் குற்றச்சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
Also Read: 15 கிலோ தங்கநகைகள்... நள்ளிரவில் திருட்டு; சுடுகாட்டில் பதுக்கல்! -பலே கொள்ளையன் சிக்கியது எப்படி?
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும்போது, அடையாளம் தெரியாதபடி முகம், தலைமுடியைக்கூட மறைத்துக் கொண்டிருந்தார். வேறு மாநில குற்றவாளிகளாக இருந்தால், அடையாளங்களை மறைப்பதில் கவனம் செலுத்தமாட்டார்கள். உள்ளூர் குற்றவாளிகள் அல்லது நகைக் கடைக்கு வந்துப் போனவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினோம். சிசிடிவி ஆய்வு, அறிவியல் வழிமுறைகள் பலவற்றைப் பின்பற்றினோம். ஏற்கெனவே குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்களிடமும், பழைய குற்றவாளிகளிடமும் விசாரணை மேற்கொண்டோம். சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பதாகத் தெரியவந்தது. சிசிடிவி-யில் பதிவாகியிருந்த புகைப்படத்துடன் அவர்களது முகம் ஒத்துப்போகிறதா என்று பார்த்தோம். கடைசியில் வெற்றியும் கிடைத்துவிட்டது.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்மீது குடியாத்தம் பகுதியில் இரண்டு டூ வீலர்களைத் திருடிய வழக்குகள் உள்ளன. குற்றவாளியை விரைவாகப் பிடித்த தனிப்படை காவலர்கள் அனைவருக்கும் வெகுமதி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். நகைக்கடை செய்த தவறு என்னவென்றால், சிசிடிவி கேமராக்களைக் கடைக்கு உள்ளேயும், வாசலிலும்தான் பொருத்தியுள்ளார்கள். நான்குப் பக்கமும் பொருத்தவில்லை. பின்பக்கம் சிசிடிவி இல்லாததால், குற்றவாளி சுவரில் போட்டு நுழைந்திருக்கிறார். பத்து நாள்களாக திட்டமிட்டுதான் செய்திருக்கிறார். ஒரு வாரமாகத் தினந்தோறும் நள்ளிரவு நேரத்தில் பின்பக்கமாகச் சென்று கொஞ்சம் கொஞ்சமாகத் துளைப் போட்டிருக்கிறார்.
இரவு நேர காவலாளிகள் இரண்டுப் பேர் இருக்கிறார்கள். பகல் நேரத்திலும் காவலாளிகள் உள்ளனர். ஆனால், யாருமே கடையின் பின்பக்கமாகச் சென்று பார்க்கவில்லை’’ என்றார்.
தொடர்ந்துபேசிய வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணன், ‘‘எங்களுக்குப் புகார் வந்த உடனேயே ஸ்பாட் விசிட் செய்தோம். பின்பக்கம் போடப்பட்டிருந்த துளையைப் பார்வையிட்டு, கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் ஆராய்ந்தோம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர் கடையின் உள்பக்கமாக இருந்த கேமராக்களைப் பார்த்து, ஒவ்வொன்றாக ஸ்பிரே அடித்துக்கொண்டு வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து, நகைக்கடை அமைந்துள்ள நான்குத் திசைகளிலும் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஏ.எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் 24 மணிநேரமும் இரவு பகலாக ஆய்வு செய்தனர். சந்தேகப்படும்படியான ஒரு நபரை மட்டும் கண்டுபிடித்து, அவர் எங்குச் செல்கிறார் என்று கண்காணித்தோம். அவர்தான் குற்றவாளி என்பது தெரிந்தவுடன் உடனடியாக கஸ்டடியில் கொண்டு வந்துவிட்டோம். கொள்ளைப்போன நகைகளில், தங்கத்திலான ருத்ராட்ச மாலையும் ஒன்று. குற்றவாளி டீக்காராமன் சிவன் பக்தன். பிடிபட்டபோது, அந்த ருத்ராட்ச மாலையைத்தான் அவர் கழுத்தில் அணிந்திருந்தார். மற்ற நகைகளை புதைத்து வைத்துக்கொண்டார். முதலில் ருத்ராட்ச மாலையைத்தான் பறிமுதல் செய்தோம். வேலூர் மாநகரில் போலீஸ், மாநகராட்சி, தனியார் அமைப்புகள் சார்பில் மூன்று விதமான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இனிமேல், மாவட்டத்திலுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் நகைக்கடைகள் சிசிடிவி கேமராக்களை உட்புறத்தில் மட்டுமல்லாமல் வெளிப்புறத்திலும் பொருத்த அறிவுறுத்தப்படும்’’ என்றார்.
Also Read: வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை! - சுவரைத் துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை
source https://www.vikatan.com/news/crime/jos-alukkas-jewelry-shop-robbery-man-arrested-vellore-dig-press-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக