Ad

சனி, 25 டிசம்பர், 2021

ஆலு போஹா | ஷக்கர்கந்தி சாட் | மட்டர் பனீர் | வெஜ் ஜல்ஃப்ரைசி - வின்டர் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்

குளிர்காலத்தில் ருசிக்கவென சில ஐட்டங்கள் உண்டு. எல்லா நாள்களிலும் சாப்பிடக்கூடிய உணவுகள்தான் என்றாலும், அடிக்கிற குளிருக்கு ஆவி பறக்க இந்த உணவுகளைச் சாப்பிடும்போது கூடுதல் சுவையை நிச்சயம் உணர முடியும். அப்படிச் சில அயிட்டங்களை இந்த வார வீக் எண்டு மற்றும் வின்ட்டர் ஸ்பெஷல் விருந்தாக்குங்களேன்....

தேவையானவை:

• வேகவைத்து சதுரங்களாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப்
• கெட்டி அவல் - 2 கப்
• பெரிய வெங்காயம் - ஒன்று
• பச்சை மிளகாய் - 3
• கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
• மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
• எலுமிச்சை - ஒன்றில் பாதி (சாறு எடுக்கவும்)
• மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
• கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
• வறுத்த வேர்க்கடலை - கால் கப்
• எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
• உப்பு - தேவைக்கேற்ப

ஆலு போஹா

செய்முறை:

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, உருளைக்கிழங்கை வறுத்து தனியே வைக்கவும். அவலை 15 நிமிடங்கள் ஊறவைத்து, எடுத்துக்கொள்ளவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஊறவைத்த அவல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். இத்துடன், வறுத்த உருளைக்கிழங்கு, வேர்க்கடலை சேர்த்துக் கலக்கவும். மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி, எலுமிச்சைப்பழச் சாறு பிழிந்து நன்கு குலுக்கி சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை:

• சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம்
• சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்
• சாட் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
• உப்பு - தேவையான அளவு
• எண்ணெய் - தேவையான அளவு

ஷக்கர்கந்தி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) சாட்

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை முக்கால் பதம் வேகவைத்து, தோலுரித்து சதுரங்களாக துண்டுகள் போடவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பிசிறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிழங்கு துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எடுத்து, சாட் மசாலாத்தூள் தூவி பரிமாறவும். வட மாநிலங்களில் குளிர்காலத்தில் விற்கப்படும் பிரபலமான சாட் இது. சத்துகள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு... இந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடியது.

தேவையானவை:

• பனீர் - 100 கிராம்
• பச்சைப் பட்டாணி - 50 கிராம்
• தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று
• இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
• அரைத்த முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
• மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
• மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
• மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன்
• சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்
• பட்டை - சிறிய துண்டு
• கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
• புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
• உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மட்டர் பனீர்

செய்முறை:

பச்சைப் பட்டாணியை வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, வேக வைத்த பச்சைப் பட்டாணி, பனீர் துண்டுகள் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கிளறவும். இத்துடன் அரைத்த முந்திரி விழுது சேர்த்து, கலவை கொதித்து வரும்போது கொத்தமல்லித்தழை, புதினா தூவி இறக்கவும். சப்பாத்தி, பூரி, நாண், ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற ஜோடி. குளிர்காலத்தில் பச்சைப் பட்டாணி மலிவாகக் கிடைக்கும் என்பதால் இந்த டிஷ்ஷை எளிதாகச் செய்யலாம்.

தேவையானவை:

• உரித்த ஃப்ரெஷ் மொச்சை - ஒரு கப்
• சின்ன வெங்காயம் - 15
• பெரிய வெங்காயம் - ஒன்று
• தேங்காய்த் துருவல் - கால் கப்
• கசகசா - ஒரு டீஸ்பூன்
• கறிவேப்பிலை - சிறிதளவு
• உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

முழு மல்லி (தனியா),
சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6,
மிளகு - கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்

மங்களூர் மொச்சை கிரேவி

செய்முறை:

வறுத்து அரைக்க வேண்டியதை விழுதாக அரைத்துக்கொள்ளவும். தேவையானவற்றில் கொடுத்துள்ள தேங்காய்த் துருவல் மற்றும் கசகசாவை மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோலுடன் தணலில் காட்டி, தோல் கருகும் வரை சுட்டெடுக்கவும். பிறகு, தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் சேர்த்து மையாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் வறுத்து அரைத்த விழுது, வெங்காய விழுது, மொச்சை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கலவை ஒரு கொதி வந்ததும் மூடி, 2 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து அரைத்த தேங்காய்-கசகசா விழுதைச் சேர்த்துக் கிளறி கொதி வந்ததும் இறக்கவும். இது கர்நாடகா ஸ்பெஷல். குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக் கூடியது மொச்சை.

தேவையானவை:

• காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக உதிர்த்தது) - 10 பூக்கள்
• கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று
• பீன்ஸ் - 10
• பச்சைப் பட்டாணி - கால் கப்
• குடமிளகாய் - ஒன்று
• தக்காளி, வெங்காயம் - தலா 2
• பட்டை - சிறிய துண்டு
• கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
• மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
• மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
• மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
• இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
• கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு

• உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வெஜ் ஜல்ஃப்ரைசி

செய்முறை:

காய்கறிகளை விரல் நீளத்துக்கு மெல்லியதாக நறுக்கவும். மிக்ஸியில் ஒரு தக்காளி, ஒரு வெங்காயத்தை (தோல் நீக்கி) சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீதியிருக்கும் தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளி-வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்து வரும்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் உப்பு சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை புதினா தூவிப் பரிமாறவும். குளிர்காலங்களில் காய்கறிகள் நிறைய கிடைப்பதால், சப்பாத்தி, ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றுக்கு, இந்த சைட் டிஷ் செய்யலாம். இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.



source https://www.vikatan.com/food/recipes/aalu-poha-matar-paneer-veg-jalfrezi-winter-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக