ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகேயுள்ள நெடும்புலி புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான லோகநாதன். டிப்ளோமா படித்துள்ள இவர், மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்கிறார். இவரின் மனைவி 28 வயதாகும் கோமதி. ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான், இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோமதி, கருத்தரித்தபோது, புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, அட்டைப் பதிவுசெய்து மருத்துவப் பரிசோதனையும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த மாதம் 13-ம் தேதி பிரசவ தேதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவர்கள் சொன்ன தேதியில் கோமதிக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை. மூன்று நாள்கள் கழித்து, கடந்த 18-ம் தேதி மாலை நேரத்தில்தான் பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.
Also Read: கோவை: `வீட்டில் பிரசவம்; உயிரிழந்த குழந்தை!' - தாய்மீது வழக்கு பதிவு
கணவர் லோகநாதன் கோமதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வத்தில் யூடியூப் சேனலைப் பார்த்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். உதவிக்குத் தன் அக்காள் கீதாவை அருகில் வைத்துக்கொண்டார். பெரும் சிரமத்துக்கு மத்தியில் கோமதிக்குப் பிரசவமானது. ஆனால், ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. ரத்தப்போக்கும் அதிகமானதால், அதிர்ச்சியடைந்த லோகநாதன் தன் மனைவி மற்றும் இறந்த நிலையிலான குழந்தையைப் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தூக்கிச் சென்றுள்ளார். அங்கு, கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் கோமதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
யூடியூப் மூலம் பிரசவம் பார்த்துள்ள தகவலை, புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தார். அவரின் சகோதரி கீதா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிமாறனிடம் பேசினோம். ``பிரசவ தேதி கொடுக்கப்பட்டிருந்தது டிசம்பர் 13. அட்டை பதிவுசெய்யப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 10-ம் தேதியே போன் மூலம் தொடர்புகொண்டு பிரசவத்துக்கு வந்து அனுமதிக்கப்படுமாறு கூறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறினர். இருந்தபோதும் 13-ம் தேதி மீண்டும் போனில் அழைத்து விசாரித்தும், வர மறுத்துவிட்டனர். முன்கூட்டியே திட்டமிட்டு, லோகநாதன் தன் தாய், தந்தையை வெளியூருக்கு அனுப்பி வைத்துவிட்டார். அவர்கள் இருந்திருந்தால், பிரசவ வலி ஏற்படும்போது, மரபு வழியில் பிரசவம் பார்ப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்திருக்கிறார். அதற்கேற்ப, 18-ம் தேதி பிரவச வலி ஏற்பட்டபோது, `மரபு வழியில் பிரசவம் பார்ப்பது எப்படி?' என்ற வீடியோவை யூடியூப்பில் ஆன் செய்து வைத்துக்கொண்டு குழந்தையை வெளியில் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது, குழந்தை இறந்துவிட்டது. நஞ்சுக்கொடியைக்கூட துண்டிக்காமல் மிகத் தாமதமாகக் குழந்தை உடலுடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது, பிரசவித்த அவரின் மனைவியும் ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் இருந்தார். அந்தப் பெண்ணுக்கு, இது முதல் பிரசவம். மிகக் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், யூடியூப் பார்த்து உயிருடன் விளையாடியிருக்கிறார்கள். தனது சம்மதத்துடன்தான் கணவர் யூடியூப் வீடியோ பார்த்து, தனக்குப் பிரசவம் பார்த்ததாக அந்தப் பெண் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார். எப்படியிருந்தாலும், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொலை குற்றமாகவே இச்சம்பவம் கருதப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம்’’ என்றார்.
Also Read: மருத்துவமனை செல்லும் வழியில் பிரசவ வலி; ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்!
இதுகுறித்து, பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``யூடியூப் பார்த்து, பெண்ணுக்கு அவரின் கணவரே பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்தியறிந்து வேதனையடைந்தேன். மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக்கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறுதான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும். யூடியூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷம பிரசாரம் சமூக ஊடங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக்கூடாது. இது தொடர்பாக, தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/husband-does-delivery-to-wife-at-home-by-watching-youtube-video-baby-died
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக