Ad

சனி, 18 டிசம்பர், 2021

`ஆள் இல்லாத வீடுகள் தான் டார்கெட்!' - தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தம்பதி சிக்கியது எப்படி..?

கடந்த ஆறு மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, இலுப்பூர், பொன்னமராவதி, மாத்தூர், மண்டையூர் பகுதிகளில் பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வந்தன. இந்த தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், மாத்தூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மண்டையூர் முருகன் கோயில் அருகே மாத்தூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவிலரில் வந்த தம்பதியினரைத் போலீஸார் தடுத்து நிறுத்தினர். டூவீலரில் வந்தவர்கள் மது போதையிலிருந்தது தெரியவந்ததையடுத்து, இருவரிடமும் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கின்றனர். இதையடுத்து, சந்தேகமடைந்த போலீஸார் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கைதான ஜோடி

விசாரணையில், அந்தப் பெண் நாகர்கோவில் டவுன் பகுதியைச் சேர்ந்த லதா (40)என்பதும், அவருடன் வந்தது மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த ராமு (32) என்பதும் தெரியவந்தது. லதா, ராமுவை மூன்றாவது திருமணம் செய்துகொண்டிருக்கிறார். லதா தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரின் முதல் கணவர் அவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், லதா இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு அவருடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அண்மையில், அந்த நபர் சிறைக்குச் சென்று விட்டதால், மூன்றாவதாக ராமுவை திருமணம் செய்துகொண்டார்.

ராமுவுடன் புதுக்கோட்டையில் தற்காலிகமாக வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வசித்துவந்திருக்கிறார் லதா. கணவன் மனைவி இருவரும், அன்னவாசல், பொன்னமராவதி, மண்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் டூவிலர்களில் சென்று, தனியாக பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவரை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

கைது

அதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 30 பவுன் தங்க நகையை கைப்பற்றினர். ஜோடியாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரையும் போலீஸார் திருமயம் சிறையில் அடைத்தனர்.

Also Read: ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு! - புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது



source https://www.vikatan.com/news/crime/couple-arrested-in-pudukkottai-for-involving-in-serial-crimes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக