Ad

செவ்வாய், 21 டிசம்பர், 2021

`மன்னார்குடியில் 3,000 ஏக்கரில் ஜவுளிப் பூங்கா!' - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தமிழக அரசின் ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமான ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும் இதன் மூலம் இப்பகுதியில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இப்பகுதி மக்களின் பொருளாதாரமும் மேம்படும் எனத் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சக்கரபாணி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு, மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு உரையாற்றியபோது, ``இப்பகுதியில் மனு கொடுத்திருப்ப வர்களில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு கேட்டுதான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மன்னார்குடி அருகே உள்ள கண்டமங்கலம் என்ற பகுதியில் 3,000 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரமாண்டமான ஜவுளிப் பூங்கா உருவாக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இப்பகுதி மக்களின் பொருளாதாரமும் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இதுமட்டுமல்லாமல் தமிழக கால்நடைத்துறை, பால்வளத்துறை மூலமாகவும் இப்பகுதிகளில் பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

Also Read: கோதுமை உட்பட 7 விளை பொருள்களின் கமாடிட்டி ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்திற்கு தடை; என்ன காரணம்?

குறிப்பாக தமிழக அளவில் உணவுத்துறை மூலம் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. அதில் 500 பணி வாய்ப்புகள் திருவாரூர் மாவட்டத்துக்குக் கிடைக்கும்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருப்பதால், படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத சூழல் உள்ளது. இப்பகுதிகளில் தொழிற்சாலைகளை உருவாக்கி, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ எனத் தெரிவித்தார்.

மன்னார்குடி

Also Read: இவ்வளவு செய்தும் பொதுத்துறை வங்கிகளை அரசு தனியார் மயமாக்குவது ஏன்?

இதுகுறித்து பேசும் இப்பகுதியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள், ``விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கினால், மூலப்பொருள்கள் குறைந்த விலையிலும் எளிதாகவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதன் மூலம் இவர்களது பொருளாதாரமும் மேம்படும். தென்னை நார்களை மூலப்பொருளாகக் கொண்டு கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் வைக்கோலை மூலப்பொருளாகக் கொண்டு, அட்டைப்பெட்டிகள் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை இருந்து வருகிறது. இதற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஆலோசனை சொல்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/minister-sakkarapani-announces-new-textile-park-in-mannargudi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக