போதைக்கு அடிமையானவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள், நடத்தப்படுவார்கள் என்பதை நமக்குக் காட்டியதில் தமிழ் சினிமாக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. `வாரணம் ஆயிரம்' படத்தில் நடிகர் சூர்யா, காதலியின் மரணத்துக்குப் பிறகு, போதைக்கு அடிமையாகியிருப்பார்.
Also Read: கஞ்சா செடி பயிரிடுவது குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது? - நான் அடிமை இல்லை - 20
மூடப்பட்ட அறைக்குள் அடைக்கப்பட்ட நிலையில், போதை மருந்து கிடைக்காமல் அவர் படும் அவதிகளைப் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். கமல் நடித்த `சூரசம்ஹாரம்', பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பயோபிக் `சஞ்சு'... இப்படி எத்தனையோ படங்களில் நாம் பார்த்த காட்சிகள், போதை அடிமைகளைச் சித்தரித்திருந்த விதம் நினைவிருக்கலாம்.
போதையிலிருந்து மீட்கும் அந்தச் சிகிச்சையில் அவர்கள் வன்முறையாக நடந்துகொள்வதெல்லாம் உண்மைதானா? பெரிய போராட்டத்துக்குப் பிறகு போதை அடிமைத் தனத்திலிருந்து மீட்கப்பட்ட நபர், அதே கட்டுப்பாட்டுடன் இருப்பது எப்படி? விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்.
``எந்தவிதமான போதைப் பொருள் அடிமைத்தனமாகட்டும்.... அதிலிருந்து மீட்கும் டீ அடிக்ஷன் சிகிச்சைக்கு முன், டீ டாக்சிஃபிகேஷன் சிகிச்சை தரப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபரை, சிகிச்சைக்குத் தயார்படுத்துவதில், இந்த டீ டாக்சிஃபிகேஷன் சிகிச்சைக்குப் பெரும் பங்குண்டு.
டீ டாக்சிஃபிகேஷன்... டீஅடிக்ஷன்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், திடீரென அதை நிறுத்த முயலும்போது, உடல் `வித்டிராயல் சிம்ப்டம்ஸ்' (Withdrawal symptoms) எனும் அறிகுறிகளை வெளிப்படுத்தும். படபடப்பாவது, உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டுவது, மூச்சு வாங்குவது, உடல்வலி என அந்த நபர் பயன்படுத்தும் போதை மருந்துக்கேற்ப `வித்டிராயல் சிம்ப்டம்ஸ்' வரலாம்.
இப்படி ஒரு விஷயம் இருப்பதே புரியாதவர்கள், `உடம்பெல்லாம் என்னவோ பண்ணுது... உடனடியா விட முடியாது... படிப்படியா விட்டுடறேன்' என்று சொல்லக் கேட்டிருப்போம். படிப்படியாக விடுகிறேன் என்ற பெயரில் நான்கு நாள்களுக்கு போதைப் பொருள்களிடமிருந்து விலகி இருப்பார்கள். ஐந்தாவது நாள் மறுபடி பழையபடியே தொடர்வார்கள்.
டீ டாக்சிஃபிகேஷன் சிகிச்சையில், ஒரு நபரை போதையை நிறுத்தச் சொல்வதற்கு முன்பே மருத்துவமனையில் அட்மிட் செய்வோம். அவர் உபயோகிக்கும் போதைப்பொருளைக் கண்டுபிடித்து, அதை நிறுத்தினால் அவருக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் வருமோ, அதாவது `வித்டிராயல் சிம்ப்டம்ஸ்' வருமோ, அவை வராமலிருக்க மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்படும்.
தூக்கமின்மை, படபடப்பு போன்றவை வராமல் தடுக்கக்கூடியது இந்த டீடாக்சிஃபிகேஷன். அதாவது உடலிலிருந்து ஒன்றை நச்சுநீக்கம் (டீடாக்ஸ்) செய்வது... முதல் நான்கைந்து நாள்களுக்கு இந்தச் சிகிச்சைதான் அளிக்கப்படும். பிறகுதான் அந்த நபரிடம் பொறுமையாக உட்கார்ந்து பேசவே முடியும். டீடாக்சிஃபிகேஷன் முடிந்துதான் டீ அடிக்ஷன் சிகிச்சையே ஆரம்பமாகும்.
உடலியல், உளவியல், சமூகவியல் காரணங்களை எல்லாம் பேசி, முழுமையான சிகிச்சை பெற்று, இதிலிருந்து மீண்டவர்கள் இருக்கிறார்கள். சில வார சிகிச்சையிலேயே முழுவதுமாக மீண்டு, பல வருடங்களாக மறுபடி போதையைத் தொடாமல் உறுதியோடு இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதுவே மாதக் கணக்கில் சிகிச்சைபெற்றுத் திரும்பி, மறுபடி அதே விஷயத்துக்கு அடிமையாகி, மறுபடி சிகிச்சைக்கு வருபவர்களையும் பார்க்கிறோம்.
Also Read: போதைப் பழக்கம் பரம்பரையாகத் தொடரக்கூடிய ஒன்றா? - நான் அடிமை இல்லை - 22
டீ அடிக்ஷன் விஷயத்தைப் பொறுத்தவரை ஒரு நபர், இனி மறுபடி போதையைத் தொடவே மாட்டார் என்பதை நூறு சதவிகிதம் உறுதியாகச் சொல்லவே முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் எல்லா பிரச்னைகளையும் ஆராய்ந்து, சிகிச்சை கொடுத்தாலுமே, விட்ட போதையை மீண்டும் தொடர்வாரா, மாட்டாரா என்பது பத்து சதவிகிதம் அந்த நபரின் கைகளில் உள்ளது. அந்தக் கட்டுப்பாடு அவரிடமிருந்துதான் வர வேண்டும்'' என்கிறார் டாக்டர் மிதுன் பிரசாத்.
அரசு மனநல காப்பகங்களில் போதை அடிமைகளுக்கான சிகிச்சைகள் எப்படி இருக்கும்..? அடுத்த அத்தியாயத்தில்...
source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-about-the-detoxification-process-of-drug-addicts
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக