Ad

செவ்வாய், 21 டிசம்பர், 2021

எஸ்.சி.,எஸ்.டி மாணவர்களுக்கான உதவித்தொகையில் மோசடி... 52 கல்லூரிகளில் நடந்தது எப்படி?!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை உயர்கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த மோசடி விவகாரம் குறித்து கடந்த 2018-ம் ஆண்டே சி.ஏ.ஜி-யின் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அப்போதைய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோசடி குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகே தற்போது இந்தப் பிரச்னை பெரிதாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கறிஞர் அசோக்குமார் கடந்த 2018-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி முதல் மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கவேண்டிய உதவித்தொகையில் 17.36 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், சி.ஏ.ஜி அறிக்கை தகவல்களின் மூலம் 52 கல்லூரி நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை இந்தப் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வழக்கறிஞர் அசோக்குமார், இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த நவம்பர் 30-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த மூன்று ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்று சரமாரியான கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்யவும், விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 2-ம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மோசடி குறித்து, அந்த ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட புகார் விசாரிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விசாரணையில் பல்வேறு வழிமுறைகளில் போலியாகக் கணக்கு காட்டப்பட்டு உதவித்தொகை வழங்குவதில் மோசடி நடைபெற்றுள்ளது. அரசு கோட்டாவில் சேர்ந்த மாணவர்களை, நிர்வாக கோட்டாவில் சேர்ந்த மாணவர்களாகக் கணக்கு காட்டி 4.34 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில், இல்லாத கல்லூரிக்குக் கணக்கு காட்டி 58 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கல்வியாண்டில் ஒரே மாணவருக்குப் பலமுறை உதவித்தொகை வழங்கியதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இப்படிப் பல்வேறு வழிமுறைகளில் 17.36 கோடி ரூபாய் உதவித்தொகை பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், ஆசிரியர் பயிற்சி, பாலிடெக்னிக் போன்ற 52 கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த 52 கல்லூரி முதல்வர்கள், கல்வி இணை இயக்குநர்கள், அந்தப் பகுதி அரசு அதிகாரிகளின் மீது லஞ்ச ஒழிப்பு சிறப்புப் புலனாய்வு பிரிவு வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கல்வி உதவித்தொகை

மேலும், அவர்களிடம் இந்த மோசடி தொடர்பான விளக்கம் தரும்படியும், இந்த வார இறுதிக்குள் நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள். கல்லூரி முதல்வர்கள், அரசு அதிகாரிகள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அந்தத் துறை அமைச்சருக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் அசோக்குமாரிடம் பேசினோம். ``சி.ஏ.ஜி அறிக்கையில் மோசடி நடைபெற்றது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. கல்லூரியில் படிக்காத மாணவர்களுக்கு போலியான அடையாள அட்டையை உருவாக்கியும், படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் பெயர்களிலும், இல்லாத கல்லூரிக்கு நிதியுதவி செய்ததாகக் கூறியும், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை எஸ்.சி., எஸ்.டி மாணவர்களாகக் கணக்கு காட்டியும் மோசடி நடைபெற்றுள்ளது. மேலும், வெளி மாநில மாணவர்களின் பெயர்களிலும்கூட உதவித்தொகை மாற்றப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது" என்றார்.

அசோக்குமார்

தொடர்ந்து பேசியவர், ``இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கில் பொதுநலன் சேர்ந்திருப்பதால், ரிட் பெட்டிஷனாக மாற்றி உள்துறை, உயர் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகிய துறைகள் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டன. தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விசாரணையில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது" என்று கூறினார்.

Also Read: கொள்ளையடிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் ஸ்காலர்ஷிப்!

தற்போது நடைபெற்ற வரும் விசாரணை வேகமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும். மாணவர்களின் உதவித்தொகையில் மோசடி செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/education/rs-17-crore-misappropriation-of-scholarships-for-sc-st-students-how-did-it-happen-in-52-colleges

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக