Ad

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

``ஒரு இந்து கங்கையில் மக்களுடன் சேர்ந்து குளிப்பார், ஆனால்...!" - மோடியைச் சாடிய ராகுல்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக, அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் களைக்கட்டத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் அண்மையில், கங்கை சாலை திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். காசி கோயிலின் புனரமைக்கப்பட்ட வளாகத்தைத் திறந்து வைத்த அவர், கங்கையில் புனித நீராடினார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர், பிரியங்கா காந்தி ஆகியோர் மக்களைச் சந்தித்து பேசினர்.

காசியில் பிரதமர் மோடி

அப்போது பேசிய ராகுல் காந்தி, ``ஒரு இந்து கங்கையில் மக்களுடன் குளிப்பார். ஆனால், ஒரு இந்துத்துவவாதி தான் மட்டும் கங்கையில் குளிப்பார். ஒரு புறம் இந்து, மறுபுறம் இந்துத்துவவாதி, ஒரு புறம் உண்மையும், அகிம்சையும் இருக்க மறுபுறம் பொய்மையும், வன்முறையாகவும் இருக்கிறது" என்று பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், ``பிரதமர் நரேந்திர மோடி நான் ஒரு இந்து என்று சொல்கிறாரே, அவர் உண்மையாக இருக்கிறாரா..? அவர் இந்துவா? அல்ல இந்துத்துவவாதியா? என்பதை மக்கள் தான் கூறவேண்டும்.

ராகுல் காந்தி

அன்பைப் பகிரும் இந்து ஒரு புறம் இருக்கையில், மறுபுறம் பதவியைப் பறிக்கும் வெறுப்பைப் பரப்புகிறார்கள் இந்துத்துவ வாதிகள். இந்து உண்மையைப் பரப்புவார்கள், இங்கு இந்துத்துவவாதிகளோ பொய்மையைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு இந்துத்துவவாதிகள் நாதுராம் கோட்சே போல் இருப்பார்கள். பிரதமர் மோடியின், ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கொரோனா காலத்தில் தேவையானவற்றையே செய்யாதது, முதலாளித்துவம் போன்ற தவறான அரசியலால், பல ஏழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

Also Read: `நான் இந்து; இந்துத்துவவாதி அல்ல!' - பாஜக-வை வீழ்த்த காங்கிரஸுக்குக் கைகொடுக்குமா ராகுலின் பேச்சு?!



source https://www.vikatan.com/news/politics/congress-mp-rahul-gandhi-slams-modi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக