Ad

வியாழன், 30 டிசம்பர், 2021

ஊசிப்புட்டான்: `அவரு காலடியில ஒரு பொணம் கெடக்கு’ | அத்தியாயம் - 15

வகுப்பறையினுள் விஜிலா மிஸ் நுழைந்ததுமே ரவியின் பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் குமாருக்கு என்னவோபோலாகிவிடும். ``மிஸ்ஸு கறுப்பா டக்கரா இருக்கால்ல மக்களே” என்பதில் ஆரம்பிக்கும் அவனது வர்ணணை, அதன் பிறகு அது எங்கு செல்லும் என்பது அவனுக்கும் தெரியாது, அவன் அருகில் அமர்ந்திருந்து கதை கேட்கும் ஏனையோருக்கும் தெரியாது. ஆனால் அவனுடைய கதை சொல்லல் என்பது அனைவரையும் கிளர்ச்சிக்கு உள்ளாக்கும். அவனது கதைகளைக் கேட்பதற்காகவே அந்தக் குறிப்பிட்ட பீரியடில் மட்டும் அவன் அருகில் அமர மாணவர்களிடையே பெரிய போட்டியே நடக்கும். ரவி இருக்கையே அவனுக்கு முன் பெஞ்ச் என்பதால், அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லாமல் இருந்தது.

குமாரின் கற்பனை வளம் என்பது அந்த மிஸ்ஸின் உடலோடும் உடையோடும் மட்டுமே நின்றுபோயிருந்ததை எவருமே எதிர்க்கேள்வி கேட்டதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு அதைப் பற்றிய அறிவும் இல்லாமல்தான் இருந்தது.

என்று நினைத்துக்கொள்வான். விஜிலா டீச்சரைப் பற்றிய குமாரின் வர்ணனைகள் ரவியின் மனக்கண் முன் விரியும். அவனது கண்கள் முன்னோக்கி இருந்தாலும், அவனது காதுகள் பின்னோக்கியே திரும்பியிருக்கும். விஜிலா நடத்தும் அறிவியல் பாடம் அவனுக்கு ஒவ்வாமையாக இருந்தாலும், குமார் சொல்லும் கதைக்காக விஜிலாவின் பாட நேரம் எப்போது வருமெனக் காத்திருக்க ஆரம்பித்துவிட்டிருந்தான்.

ரவியின் வகுப்பில் வலது மற்றும் இடது சுவரை ஒட்டி ஏழு வரிசைகளும், நடுவில் மூன்று வரிசைகளும் போடப்பட்டு, ‘ப’ என்கிற தமிழ் எழுத்தின் வடிவில் மாணவர்களுக்கான இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. மூன்று பேர் தாராளமாக அமரத் தோதான டெஸ்க்-பெஞ்சில் ஐந்து பேர் நெருக்கமாக அமர வைக்கப்பட்டிருந்தனர். அதிலும் கடைசி வரிசையில் ஆறு பேர் வரைக்கும் அமர்ந்திருந்தனர். போலவே வகுப்பில் பாடமெடுக்கும் ஆசிரியர்களின் எல்லை என்பதும் முதல் நான்கு வரிசையோடே நின்றுவிட்டிருந்தது. காரணம் டெஸ்க்-பெஞ்ச் நெருக்கத்தால், கடைசி மூன்று வரிசைகளுக்குள்ளும் நுழைய அவர்களுக்கான பாதைகூட தடைப்பட்டிருந்தது. அதனால் பாடவேளையின்போதே டெஸ்க்கின் கீழே மறைந்துக்கொண்டு மதிய உணவை உண்பதற்கும், பிடிக்காதப் பாட வேளைகளில் தூங்குவதற்கும் கடைசி இரு வரிசைகளில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

ஊசிப்புட்டான்

ரவிக்கு மற்றெந்த வாத்தியார்களைவிடவும், `ஆத்மா’ என்கிற பட்டப்பெயரோடு அழைக்கப்பட்ட வில்சன் வாத்தியாரிடம்தான் அதிக பயம் இருந்தது. காரணம் வேறொன்றுமில்லை. ஆங்கில வகுப்பின் ஆசிரியர்கூட வகுப்பினுள் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை. ஆனால் வில்சன் மட்டும்தான் அவர் நடத்திய பாடம் சோஷியல் சயின்ஸாக இருந்தாலும், வகுப்பினுள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

போலவே அவர் மட்டும்தான் அந்த வகுப்பில் 80-களின் பெல்பாட்டம் பேன்ட்டையும், கழுதை காலர்வைத்த சட்டையையும் மிகவும் நேர்த்தியாக டக்-இன் செய்து அணிந்து வருவார். ரவி கிட்டத்தட்ட பத்து ரூபாய்க்கு மேல் அவரிடம் ஃபைன் கட்டியிருக்கிறான். அதனால் அவரின் பாட வகுப்பு என்றாலே அவனுக்கு அடிவயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்துவிடும். அதாவது விஜிலா டீச்சரின் வகுப்பின்போது அவனது அடிவயிற்றில் சுரப்பது பரவச அமிலமெனில், வில்சன் சாரின் வகுப்பின்போது அவனது அடிவயிற்றில் சுரப்பது பய அமிலம்.

வில்சனைப் பார்த்ததும் அமிலம் சுரப்பதற்கு மற்றுமொரு காரணம், அவரின் நேரடிப் பார்வையில் ரவி இருந்தான் என்பதும்தான். ரவி வகுப்புக்கு வந்த முதல் நாள்

இவன் எழுந்து நிற்கவும், அவனையும் அவனது உருவத்தையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, ``ஊருக்குள்ள நீ எவ்வளவு பெரிய சட்டம்பியாவும் இருந்துக்க... இந்த காம்பவுண்டுக்குள்ள வந்துட்டன்னா நீ சட்டம்பியும் கிடையாது, சட்டாம்பியும் கிடையாது” என்று கையிலிருந்த பிரம்பை அவனது முகத்துக்கு நேராக ஆட்டிப் பேசினார். அதன் பிறகாக பாடம் நடத்துகையிலும் அவன், அதாவது ரவி அவரது ஓரக்கண் பார்வையிலேயே இருந்தான்.

வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ரவியின் உருவம் சிறிய உருவம் என்பதாலும் ரவியால் வகுப்பின் ஒரு மூலையில் தன்னை ஒளித்து வைத்துக்கொள்ளத் தோதாக இருந்தது. அவனது சிறிய உருவத்தை டெஸ்க்கின் கீழேயோ அல்லது பெஞ்ச்சின் கீழேயோ ஒளித்து வைத்துக்கொள்ளலாம் என்றாலும், அவை எப்போதுமே வேறு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டே இருந்தன.

அந்த வகுப்பில் குமார்தான் மற்ற மாணவர்களைவிடவும் ஒரு வருடம் சீனியராக இருந்தான். அவனுக்கு இந்த ஒன்பதாம் வகுப்பு என்பது இரண்டாவது வருடம். அதனால் அவனிடம் எப்போதுமே ஒரு எகத்தாளமானப் போக்கு இருந்தே வந்தது.

அது கிளர்ச்சியைத் தூண்டும் கதைகளாக இருந்தாலும் சரி, அந்த நேரத்தில் ஊருக்குள் நிகழ்ந்த ரெளடிகளின் வீரதீர பராக்கிரமக் கதைகளாக இருந்தாலும் சரி... உடன் படிக்கும் எவருக்குமே தெரியாத கதைகள் அவனிடம் இருந்தன.

ஒருநாள் மிகவும் உற்சாக மனநிலையில் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். அது வழக்கமான உற்சாகம் இல்லையென்பதால் இன்டர்வெல் வேளையில் அவனைச் சுற்றி ஒரு கூட்டமே கூடியிருந்தது. ரவியின் பின் பெஞ்ச்சில் அவன் இருந்ததால், அவன் பேசும் கதைகளைக் கேட்க ரவி அவனைத் தேடிப் போகவேண்டிய அவசியத்தில் இல்லாமல் இருந்தான்.

குமாரின் சுவாரஸ்யமான கதைச் சொல்லல் தொடங்கியது.

``நேத்து சாயந்திரம் வீட்டுக்கு முட்டை வாங்கப் போனப்ப, எங்க ஏரியா போலீஸ் ஸ்டேசன்ல ஒரே கூட்டமா இருந்துச்சு. என்னடா இது இந்த நேரத்துல இவ்ளவு கூட்டம்னு லைட்டா அந்தப் பக்கம் ஒதுங்கினேன்.”

ஊசிப்புட்டான்

கூடியிருந்த கூட்டத்தில் பொறுமையிழந்த ஒருவன், ``எதுக்காண்டி மக்கா கூட்டம்?” என்றான்.

உடனே மற்றொருவன், ``அதெ தானல அவென் சொல்லிட்டு இருக்கான்... ச்சும்மா சலம்பிட்டு கெடக்காம கதெயெ கேளுல” என்று அதட்டினான்.

நான்கு பேர் அவனிடம் அடுத்து என்ன என்று கேட்க வேண்டும், அதற்கு இன்னொரு நான்கு பேர் அவர்களைப் பேசாம்ல் இருக்கும்படி அதட்ட வேண்டும். அதேதான் அன்றும் நடந்தது.

``கூட்டத்துக்கு நடுவுல நொளைஞ்செடுத்து உள்ள போய்ப் பாத்தா…” சொல்லி முடிக்கையில் அவனுடை கண்கள் இரண்டும் அகலமாகத் திறந்திருந்தன. அவன் குரலோடு ஒன்றிப் பயணித்த சக மாணவர்களின் கண்களும் அகலமாக விரிந்திருந்தன.

``அங்க என்னல பாத்த?” கூட்டத்தில் எவனோ ஒருவன் கேள்வி கேட்டான்.

``நம்ம முத்துலிங்கம் அண்ணன் அங்க சேர் போட்டு உக்காந்திருக்காரு.

முத்துலிங்கம் பெயரைக் கேட்டதும் சட்டென ரவி நிமிர்ந்து உட்கார்ந்தான். குமார் சொல்லி முடிக்கவும், `அட இந்தப் பட்டிப்பய வாயெத் தெறந்தாலே பொய் பொய்யா புழுவித் தள்ளுறான்...’ என மனதினுள் நினைத்துக்கொண்டான் ரவி. அதேவேளையில் அவனைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்களோ, குமாரிடம், ``முத்துலிங்கண்ணனை உனக்குத் தெரியுமா மக்களே...” என்று ஆர்வ மிகுதியோடு விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

``முத்துலிங்கண்ணனும் எங்கண்ணனும் ரொம்ப க்ளோஸு. எப்ப கிருஷ்ணங்கோயிலுக்கு வந்தாலும் எங்க வீட்டுக்கு வராமப் போவ மாட்டாரு தெரியும்ல?”

அதெயும் இங்க வந்து கதெ கதெயா சொல்லிட்டு இருக்குவான். அதெயும் இந்த லூசுப் பயலுவ நம்பிட்டு இருக்கானுவ.’

இன்டர்வெல் முடிந்ததற்கான பெல் அடிக்க, அனைவரும் கூட்டத்திலிருந்து கலைந்து சென்று அவரவர் இடத்தில் அமர்ந்துகொள்ள விஜிலா சற்று நேரத்தில் வகுப்பறையினுள் நுழைந்தார்.

கரும்பலகையில் முந்தைய வகுப்பில் எழுதிப்போட்டிருந்தது அழிக்காமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, ``யாருக்காச்சும் எழுதி எடுக்க வேண்டியது இருக்கா..?” என்று கேட்டார்.

எவருமே பதில் பேசாதிருக்க, விஜிலா டீச்சர் வகுப்புக்குத் தன் பின்புறத்தைக் காட்டி கரும்பலகையில் எழுதியிருந்ததை அழிக்க ஆரம்பிக்கவும், குமார் ரவியின் பின்பக்கமிருந்து தன்னுடைய கற்பனை வளத்தைத் தொடங்கினவனின் குரல் பாதியில் முடிந்துவிட, அவன் முடித்த இடத்திலிருந்து அவனுக்கு அருகிலிருந்த சுப்பிரமணி தொடர்ந்தான்.

சுப்பிரமணியின் கதை சொல்லல் குமாரின் அளவுக்குச் சுவாரஸ்யமானதாக இல்லையென்றாலும் குறை கூறும்படியாக இல்லாதிருந்தது. இருப்பினும் வழக்கமாகக் கதை சொல்லும் குமாருக்கு என்னவாயிற்று என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் ரவி தலையைத் திருப்பிப் பார்த்தான். பின்னிருக்கையில் குமாரைக் காணவில்லை. ஒருவேளை டெஸ்குக்குக் கீழே அமர்ந்து மதிய உணவைத் தின்றுகொண்டிருப்பானோ என்கிற சந்தேகத்தோடு டெஸ்க்குக்கும், ரவி அமர்ந்திருந்த பெஞ்சுக்கும் இடைப்பட்ட வெளியோடு பார்த்தான். அங்கே கால் நீட்டி அமர்ந்திருந்தான் குமார்.

(தொடரும்...)

Also Read: ஊசிப்புட்டான்: `எங்கப்பனைக் கொன்னவனோட ரத்தம்’ | அத்தியாயம் - 14



source https://www.vikatan.com/arts/literature/story-of-a-boy-nicknamed-as-oosipputtan-part-15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக