வாரம் ஒருநாளோ, தினமும் ஒருவேளையோ வெறும் பழங்கள் மட்டும் சாப்பிட்டால் எடை குறையும் என்கிறாள் என் தோழி. பேலியோ டயட் பெஸ்ட் என்கிறாள் இன்னொருத்தி. நானும் அதைப் பின்பற்றலாமா? எடையைக் குறைக்க எது சிறந்த டயட்?
- நித்யா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
``உங்களுடைய வயது, பீரியட்ஸ் சுழற்சி சரியாக இருக்கிறதா, பிசிஓடி உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கின்றனவா, மெனோபாஸுக்கு முந்தைய நிலையில் இருக்கிறீர்களா, மெனோபாஸை அடைந்துவிட்டீர்களா என எந்தத் தகவலும் இல்லை. எடைக்குறைப்பு என்ற விஷயத்தில் ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது. பீரியட்ஸ் சரியாக வராவிட்டாலும் எடை கூடும். மெனோபாஸ் வயதிலிருப்போருக்கும் எடை அதிகரிக்கும். `மெனோபாட்' என்றே ஒரு நிலை உண்டு. அதில் மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு வயிறு ஆறு மாத கர்ப்பம்போலவே இருக்கும்.
ஆதார் கார்டு, கைரேகை போன்றவை ஒவ்வொரு தனி மனிதருக்கும் எப்படி தனித்துவமானவையோ, அதுபோன்றதுதான் எடைக்குறைப்புத் திட்டமும். எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு நிறைய காரணிகளை ஆராய்ந்து, அவர்களுக்கேற்ப வெயிட்லாஸ் பிளான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், எடைக்குறைப்பை பொறுத்தவரை பலரும் இப்படி முறையாகச் செய்வதில்லை.
Also Read: Doctor Vikatan: தினமும் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?
அவர்களுக்குத் தெரிந்தவர்கள் பின்பற்றும் எடைக்குறைப்பு முயற்சிகளைத் தாமும் பின்பற்றுவார்கள். ஒருவேளை பட்டினி கிடப்பது, பேலியோ, கீட்டோ என ஏதோ ஒரு டயட் முறையைப் பின்பற்றுவது எனக் கண்மூடித்தனமாகச் செய்வார்கள். இப்படிச் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்காது.
ஒருநாளைக்கு ஒருவேளை பழங்களை மட்டுமே சாப்பிடுவதால் கலோரிகளைக் குறைக்கலாம். ஆனால், மற்ற வேளைகளில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். உங்கள் உயரத்துக்கு எவ்வளவு எடை இருக்கிறீர்கள், தசைகளின் அடர்த்தி எவ்வளவு, தைராய்டு இருக்கிறதா, ஹார்மோன் பிரச்னைகள் இருக்கின்றனவா, நீரிழிவு இருக்கிறதா எனப் பல விஷயங்கள் உள்ளன. பருமன் என்பது நபருக்கு நபர் வேறுபடும். சில பெண்களுக்கு இடுப்பைச் சுற்றி சதை போடும்.
சிலருக்கு இடுப்புக்குக் கீழே பின்பக்கம் பருமன் அதிகரிக்கும். இன்னும் சிலருக்கு கைகளில் எடை அதிகமிருக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகு, அவர்களது லைஃப்ஸ்டைல், உடலுழைப்பு எனப் பல விஷயங்களைப் பொறுத்துதான் எடைக்குறைப்புக்கான திட்டம் இருக்க வேண்டும். இது எதையும் கவனிக்காமல், கூகுளை பார்த்து இதில் இத்தனை கலோரி, அதில் அத்தனை கலோரி எனத் தெரிந்துகொண்டு சாப்பிடுவது சரியானதல்ல.
`காலையிலேருந்து சர்க்கரைகூட சேர்க்காம காபி, டீ குடிக்கிறேன்... பிரேக்ஃபாஸ்ட்டுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ்தான்... மதியம் லஞ்ச்சுக்கு சிவப்பு அரிசிதான் சாப்பிடுறேன்...' என்பார்கள். மாலை 4 மணிக்கு பசி தாங்க முடியாமல் வேர்க்கடலை, சிப்ஸ், பானிபூரி, காபி, டீ எனக் கண்டதையும் சாப்பிடுவார்கள். இப்படிப்பட்ட உணவுப் பழக்கம் எடைக்குறைப்பில் எந்தப் பலனையும் தராது.
எடைக்குறைப்பு என்பது காலத்துக்கும் பின்பற்றப்பட வேண்டிய வாழ்க்கைமுறை. எடை குறைந்ததும் மறுபடி கண்டதையும் சாப்பிட ஆரம்பித்தால் பழையபடி எடை கூடும். நீங்கள் கேட்டதுபோல வெறும் பழங்களைச் சாப்பிடுவது, தண்ணீர் மட்டுமே குடிப்பது என எடைக்குறைப்புக்காக ஏதேதோ செய்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்கு கை, கால்கள் உதறும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும். வீட்டாரிடம் எரிந்துவிழுவார்கள். எனர்ஜியே இருக்காது. பசி உணர்வை இப்படியெல்லாம் வெளிப்படுத்துவார்கள். எனவே, என்ன சாப்பிடுகிறோம் என்பது உடல்நலத்தைப் போலவே மனநலனையும் பாதிக்கக்கூடியது.
Also Read: Doctor Vikatan: ஸ்கிப்பிங் செய்தால் கர்ப்பப்பை இறங்குமா?
எனவே, உங்களுக்கு எடையைக் குறைக்கும் எண்ணமிருந்தால் முறையான டயட்டீஷியனின் ஆலோசனைகளைப் பெறுங்கள். அவர்கள் உங்கள் உடல்நலம், பிரச்னைகள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து சரியான வழிகளை, வாழ்க்கை முறையைக் கற்றுத்தருவார்கள். எடைக்குறைப்பு என்பதை ஜாலியாகவே செய்யலாம். ஆனால், சரியான வழிகாட்டுதல் முக்கியம். உங்களுக்குப் பிடித்தவற்றைச் சாப்பிடலாம். மகிழ்ச்சியாக இருக்கலாம்.
எனவே, அடுத்தவர் பின்பற்றுவதை நீங்களும் செய்வது, போலி விளம்பரங்களை நம்பி பணத்தை இழப்பது போன்றவற்றைச் செய்வதையெல்லாம் தயவுசெய்து நிறுத்துங்கள்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/fitness/how-to-reduce-body-weight-through-diet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக