பொதுவாக வீக் எண்ட் முடிந்து வாரத்தின் வேலைநாள் தொடங்கும் கணத்தில் பெரும்பாலானோர் மனதில்... விட்டு விடுதலையாகி என்பார்களே அதுபோல சகலத்தையும் உதறிவிட்டு காற்றில் சருகு போன்று பறக்க மாட்டோமா என்ற ஏக்கமே மேலோங்கி இருப்பதாகப் படுகிறது.
காரணம் பொறுப்புகள் அதைச் சார்ந்த சிரமங்கள், சவால்கள்... இன்னும்பிற. அனைத்தையும் உதறிவிடவே துடிக்கிறது மனது. ஆனால் அது சாத்தியமா?
மகாபாரத்தில் களத்தில் நிற்கிறான் அர்ஜுனன். சுற்றிலும் உள்ள சவால்களைக் கவனிப்பவன் மனம் குமைகிறான். ஆனால், பகவான் கிருஷ்ணர் போர்க்களத்திலிருந்து அவனைப் பின்வாங்க அனுமதிக்கவில்லை. வாழ்க்கையும் ஒரு போர்க்களமே. அது தவிர்க்கப்பட வேண்டியதோ, ஒதுக்கப் பட வேண்டியதோ இல்லை; சந்திக்கப்படவேண்டியது.
அதை எதிர்கொள்ள என்ன செய்யலாம்? முதலில் `பிரச்னைகள் மட்டுமே நம்மைச் சூழ்ந்திருக்கின்றன’ எனும் எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும்.
வால்ட் விட்மன் என்ற அறிஞர் சொல்கிறார். "இன்னும் அடையாளப் படுத்தப்படாத எத்தனையோ விஷயங்கள் மறைந்து கிடக்கின்றன. அது உங்களின் வெற்றியாகக் கூட இருக்கலாம்!’’
உண்மைதானே!
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் தனக்கான கடமைகளை பரிபூரணமாகச் செய்ய வேண்டும். குடும்பப் பணிகளோ, அலுவல் அல்லது தொழில் நிமித்தமான சவால்களோ... கடமைகளுக்குப் பயந்து வாழ்க்கையைத் துறந்து ஓடுவது கோழைத்தனம்.
சரி, சவால்களை எதிர்கொள்வோம். ஆனால், அதற்கான மனத்திண்மை எல்லோருக்கும் வாய்த்துவிடுமா? அடுத்தடுத்து துயரங்களும் தடைகளும் சூழும்போதும் மனம் சோர்ந்துபோகிறதே என்ன செய்ய?
இந்த இடத்தில்தான் இறைப் பற்றும் வழிபாடும் கைகொடுக்கும். எப்படி, களத்தில் சோர்ந்து நின்ற பார்த்தனுக்குக் கண்ணன் நம்பிக்கை ஊட்டினானோ அப்படி இறைவழி நமக்கும் துணை செய்யும். `ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு வேலையைக் கவனி’ என்பார்களே, அப்படித்தான்... பக்தியும் மனத் திண்மை தரும்.
சிறு கதை ஒன்று...
மாலை நேரம். அடர்ந்த வனத்தில் முனிவர் ஒருவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது திடுமென ஒருவன் ஓடிவந்தான். ‘‘மகனே... எங்கிருக்கிறாய்... நான் அழைப்பது காதில் விழுகிறதா..." என்றெல்லாம் குரல் எழுப்பியபடி காட்டுக்குள் ஓடினான்.
அதனால் உண்டான சலனமும் அந்த நபரின் குரலுமாகச் சேர்ந்து முனிவரின் தியானத்தைக் கலைத்தன. முனிவருக்குக் கோபம். அவன் திரும்பி வரும்போது மடக்கவேண்டும் என்று ஆத்திரத்துடன் காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த அன்பர் தோளில் சிறுவன் ஒருவனைச் சுமந்தபடி திரும்பி வந்தார். முனிவர் அவரை வழிமறித்தார். அவரின் செய்கையால் தனது தியானம் கலைந்ததைச் சொல்லி, `இப்படிச் செய்துவிட்டாயே’ என்று அரற்றினார். அந்த அன்பர் தன் நிலையை எடுத்து சொன்னார்.
"இவன் என் மகன். நண்பகலில் தோழர்களுடன் காட்டுப் பக்கம் விளையாட வந்தவன் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. அவனைத் தேடி வந்தேன். அந்தப் பதற்றத்தில் தங்களைக் கவனிக்கவில்லை மன்னியுங்கள்’’ என்றான்.
ஆனாலும், முனிவர் சமாதானமாகவில்லை. அந்தக் கிராமத்து அன்பர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் முனிவர் விடுவதாக இல்லை. ‘‘என்ன காரணமாக இருந்தாலும் சரி... தியானத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு நீ தொல்லை கொடுத்தது தவறுதான்!’’ என்று பொங்கினார்.
கிராமத்து அன்பர் இப்போது முனிவரை ஏற இறங்கப் பார்த்தார். பின்னர் சொன்னார்: ‘‘தியானத்தில் மூழ்கியிருந்த உங்களுக்கு நான் ஓடியது, கத்தியது எல்லாமே தெரிந்தது. அதனால் உங்கள் தியானம் கலைந்தது என்கிறீர்கள். ஆனால், மகனைத் தேடி ஓடிய எனக்கு என் மகன் மீது பற்று இருந்தது. அதனால் வேறு எதுவுமே என் கண்களுக்குத் தெரியவில்லை. தங்களையும் கவனிக்கவில்லை. ஆனால், நீங்களோ சாதாரணச் சத்தங்களே உங்கள் மாபெரும் தியானத்தைக் கலைத்துவிட்டது என்கிறீர்கள். எனில், என் குழந்தையிடம் எனக்குள்ள பற்றுகூட உங்களுக்கு இறைவன் மீது இல்லையே... இது என்ன தியானம்?!’’ என்று கேட்டார்.
எவ்வளவு அர்த்தமுள்ள கேள்வி. ஆக, தியானமோ, பக்தியோ, பணிகளோ எதில் ஈடுபடுகிறோமோ அதில் முழுமையான ஈடுபாடு காட்ட வேண்டும். அப்படி மூழ்குபவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். இலக்கு நோக்கிய பயணத்தில் மனம் துல்லியப்படும்போது, தடைகளும் சவால்களும் பிரச்னைகளும் ஒருபொருட்டாகத் தெரியாது.
அதேநேரம் நமக்கான இலக்கையும் துல்லியப்படுத்திக் கொள்ள வேண்டும். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடுவது தவறு.
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்துவிட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’
source https://www.vikatan.com/spiritual/miscellaneous/the-secret-of-success-as-told-in-mythologies-and-spiritual-stories
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக