Ad

வெள்ளி, 24 டிசம்பர், 2021

``என்னை ஒரே ஒரு நாள் முதல்வர் ஆக்குங்கள்..!" - கோவையில் சீமான் பேச்சு

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவினர்

Also Read: ``நான் நாகரீகமானவனென்று யார் சொன்னது?!" - சீறும் சீமான்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். சீமான் தலைமையில் போராட்டம் என்றதும், அவர் வருவதற்கு முன்பு அங்கு திமுகவினர் குவிந்துவிட்டனர்.

“நாங்க சீமான் பேசறை வேடிக்கை பார்க்க வந்துருக்கோம். ஏன் வரக்கூடாதா.,? எங்க தளபதிய பத்தி பேசினா சும்மா இருக்க மாட்டோம்.” என்று போலீஸாருடன் திமுக உடன்பிறப்புகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சீமான் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

திமுகவினர் கைது

ஆர்ப்பாட்டம் முடிந்து பிறகு நாம் தமிழர் நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசினர். ``சங்கி திமுக.. பாஜகவின் மெயின் டீம் திமுக.” என்று விமர்சித்தனர்.

கடைசியாக பேசிய சீமான், ”சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது குறித்து அரசு குழு அமைத்துள்ளது. புழு கூட நகரும். ஆனால் அரசு அமைக்கும் குழுக்கள் எதுவும் செய்யாது. மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சாதி வாரியாக, மதம் வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் சீமான்

இஸ்லாமியர்களை தேசிய இனத்தின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும். ‘மானமுள்ள தமிழன் திமுகவுக்கு ஒட்டு போட மாட்டான்.’ என பழனி பாபா கூறியுள்ளார். திமுகவுக்கு வாக்களித்துவிட்டதால், மானம் இல்லை என்று அர்த்தம்.

ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவர் மற்றும் இஸ்லாமியர்களை விடுவிக்காமல் இருப்பது சரியல்ல. இதை புரிந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்களுக்கு வேறு வேலை இல்லை. போராடிக் கொண்டேதான் இருப்போம்.

சீமான்

சிறைக் கதவுகளை திறந்து அவர்களை விடுதலை செய்யுங்கள். இல்லையேல் எங்களை உள்ளே போடு்ங்கள். எங்களால் போராட தான் முடியும். விடுதலை செய்யும் அதிகாரம் இல்லை.

ஸ்டாலின் பயப்படுகிறார். விடுதலை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. உரிமைக்காகவும், உறவுக்காகவும் போராடுகிறோம். இதில் எனக்கு எந்த பிரதிபலனும் இல்லை. தமிழக முதல்வர் மதத்தை பார்க்காமல், மனிதத்தை பார்த்து சிறையில் வாடிக் கொண்டிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

சீமான்

7 தமிழர்களை விடுவிப்பதில் என்ன பிரச்னை? ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்? அர்ஜுன் படத்தில் வருவதைப் போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வர் ஆக்குங்கள். அப்படி ஆக்கினால், ஒரே நாளில் எல்லாவற்றையும் செய்து விட்டு விலகிக் கொள்கிறேன்” என்று பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், ``பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர். அதில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என்பது வேதனை. அதிமுக ஆட்சியிலும் இதுதான் நடந்தது. திமுகவை எதிர்த்து நாங்கள் போராடுவோம். எங்களை எதிர்த்து திமுக போராடும்.

சீமான்

அரசியலில் இதெல்லாம் சாதாரணம். திமுக எங்களை எதிர்ப்பது பெருமைதான். அந்தளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம் தானே. தரக்குறைவாக பேசுவதைப் பற்றி சொல்ல திமுகவுக்கு தகுதி இல்லை.” என்று கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-speech-in-coimbatore-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக