Ad

சனி, 25 டிசம்பர், 2021

பெரியகுளம்: நில அபகரிப்பு விவகாரம்; சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு!

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களைச் சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், விசாரணை நடத்தினார். அதில், பெரியகுளம் தாலுகாவுக்குட்பட்ட, வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் சிலர் அபகரித்தது தெரியவந்தது. நிலத்தின் அரசு மதிப்பு ரூ.1.44 கோடி எனவும் கணக்கிடப்பட்டது. அதேபோல, தாமரைக்குளத்தில் ரூ.60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 60 ஏக்கர் அரசு நிலம், கெங்குவார்பட்டியில் ரூ.8.62 கோடி மதிப்பில் 13 ஏக்கர் அரசு நிலத்தையும் அதிகாரிகள் துணையுடன் சிலர் அபகரித்ததும் தெரியவந்தது.

இந்த 3 இடங்களிலும் சுமார் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த நிலங்கள் மீட்கப்பட்டு அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. இந்த அரசு நிலங்களை ‘அ' பதிவேட்டில் கணினி மூலம் திருத்தம் செய்து, கணினி பட்டா வழங்கப்பட்டதும், அதன் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

அபகரிக்கப்பட்ட அரசு நிலம்

இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், தனித்தனியாக 3 புகார்களைப் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்தார். அந்த புகார்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி சுந்தர்ராஜ் விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து இந்த மோசடி நடந்த காலகட்டத்தில் பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ-க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவை உதவியாளர் அழகர், மண்டலத் துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் உட்பட பலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், ஆனந்தி தற்போது பழனி ஆர்.டி.ஓ.வாக பணியாற்றி வருகிறார். ஜெயப்பிரிதா திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல் ஆகியோர் ஏற்கெனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: `கப்பலில் எண்ணெய் வரும்..!’ தேனி நபரிடம் ரூ.60 லட்சம் மோசடி! - சிக்கிய வெளிநாட்டு இளைஞர்



source https://www.vikatan.com/government-and-politics/crime/case-registered-against-14-persons-including-sub-collector-and-rdo-in-a-land-grab-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக