சில ஈக்விட்டி ஃபண்டுகள் நசிந்து போகலாம் (உதாரணம்: டி எஸ் பி நேச்சுரல் ரிசோர்சஸ் அண்ட் நியூ எனர்ஜி ஃபண்ட்).
சில கடன் ஃபண்டுகள் நசிந்து போகலாம் (உதாரணம்: க்ரெடிட் ரிஸ்க் ஃபண்டுகள்).
ஆனால் நசியாத ஃபண்ட் எது என்றால் அது இண்டெக்ஸ் ஃபண்டுகள்தான். அதனால்தான் நம்ம `தல’ வாரன் பஃபெட் தன் மனைவிக்கு விட்டுச் செல்லும் சொத்தில் 90% எஸ்&பி 500 இண்டெக்ஸ் ஃபண்டில் மட்டுமே முதலீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரைக் கவர்ந்த இந்த இண்டெக்ஸ் ஃபண்ட் பற்றி இப்போது காணலாம்.
Also Read: வங்கியை விட அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்; இதில் உங்களுக்கேற்ற திட்டம் எது? - 34
பேஸிவ் ஃபண்டும், ஆக்டிவ் ஃபண்டும்
இண்டெக்ஸ் ஃபண்ட் என்ற பெயரைப் பார்த்தாலே புரிந்திருக்கும் – இவை சென்செக்ஸ், நிஃப்டி போன்ற ஏதாவது ஒரு இண்டெக்ஸை முன்மாதிரியாகக் கொள்ளும் ஃபண்ட் என்று. உதாரணமாக சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட் என்பது சென்செக்ஸில் இருக்கும் முப்பது கம்பெனிகளிலும் சென்செக்ஸில் இருக்கும் அதே விகிதாசாரங்களில் முதலீடு செய்யும். ஆகவே, இண்டெக்ஸ் ஃபண்டுகளில் மேனேஜரின் ஆராய்ச்சிக்கு வேலையில்லை. அதனால் இதை பேஸிவ் ஃபண்ட் என்றும் சொல்வார்கள். இண்டெக்ஸ் ஃபண்டுகள் கூடியவரை இண்டெக்ஸ் தரும் அதே லாபத்தைத் தர முயற்சி செய்யும்.
ஆக்டிவ் ஃபண்டுகளில் ஃபண்ட் மேனேஜர்கள் மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின் சில பல பங்குகளைத் தேர்ந்தெடுத்து தமக்குத் தோன்றிய அளவு முதலீடு செய்வார்கள்; தங்கள் திறமையால் இண்டெக்ஸ் தரும் லாபத்தைவிட அதிக லாபம் தர முயல்வார்கள்.
Also Read: புதியவர்களுக்கு கைகொடுக்கும் லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்டுகள்; எப்படி முதலீடு செய்யலாம்? - 35
இண்டெக்ஸ் ஃபண்டுகள் தரும் நன்மைகள்:
-
இதில் ஃபண்ட் மேனேஜருக்கு அதிக வேலை இல்லை என்பதால் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறைவு. அதனால் முதலீட்டாளர்களின் லாபம் அதிகரிக்கிறது.
-
ஒருவரின் போர்ட்ஃபோலியோவுக்குத் தேவையான பல்வகைப்படுத்துதலை (Diversification) இது தருகிறது.
-
ஆக்டிவ் ஃபண்டுகளுடன் ஒரு சில இண்டெக்ஸ் ஃபண்டுகளிலும் முதலீடு செய்வது, நசிவைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்கும்.
-
சந்தை ஏற்றத்தில் இருக்கும் சமயங்களில் இண்டெக்ஸ் ஃபண்டும் நல்ல ஏற்றம் தரும்.
-
ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு இருக்கும் அதே வரி விதிப்பு விதிமுறைகள் இண்டெக்ஸ் ஃபண்டுக்கும் உண்டு.
-
பொதுவாக, ஏழு வருடங்களில் 10% - 12% ஆவரேஜ் வருடாந்தர வளர்ச்சி பெறலாம்.
``பங்குச் சந்தை தரும் 10% வருமானம் வேண்டும்; ஆனால் அதிக ரிஸ்க் வேண்டாம்” என்று எண்ணுபவர்களும், ஏழு வருடங்கள் வரை முதலீட்டைத் தொடர முடிபவர்களும், வாரன் பஃபெட் போல மனைவி மீது அதீத பிரியம் கொண்டவர்களும் இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
இ.எல்.எஸ்.எஸ் (Equity Linked Savings Scheme):
நாம் முதலீடு செய்வதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
1. வருமானம்,
2. செல்வத்தைப் பெருக்குதல் மற்றும்
3. வரி சேமிப்பு. இ
வை மூன்றுமே ஒரே ஃபண்டில் கிடைத்தால்?
அதுதான் இ.எல்.எஸ்.எஸ் (ELSS). மற்ற ஃபண்டுகளுக்கு இல்லாத வரி சேமிப்பு அம்சம் இதை நம் போர்ட்ஃபோலியோவில் இன்றியமையாததாக ஆக்குகிறது.
மற்ற ஈக்விட்டி ஃபண்டுகள் போல் இதிலும் மூலதனத்தில் 80% வரை பங்குகளில்தான் முதலீடு செய்யப்படுகிறது. இதில் வரும் லாபத்துக்கான வரிவிதிப்பும் ஈக்விட்டி ஃபண்ட் போன்றதே. ஆனால், இவற்றில் நாம் செய்யும் முதலீட்டுக்கு செக்.80 சியின் கீழ் வருடத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு கிட்டுகிறது.
Also Read: ரிஸ்க் குறைவு; ஆனால், வங்கியை விட அதிக லாபம்; கடன் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றவை? - 36
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இப்படி வரி விலக்கு தரும் பி.பி.எஃப், என்.எஸ்.சி போன்ற மற்ற திட்டங்களில் உள்ள லாக் இன் பீரியடைவிட இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தின் லாக் இன் பீரியட் குறைவு. (மூன்று வருடங்கள் மட்டுமே). லாக் இன் பீரியட் முடிந்ததும் பணத்தை வெளியே எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை பொறுக்க முடிந்தால் மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெறலாம்.
இ.எல்.எஸ்.எஸ் திட்டங்கள் பலவிதமான செக்டார்களில், லார்ஜ், மிட், ஸ்மால் போன்ற பலவிதமான கேப்களில் முதலீடு செய்யும் சுதந்திரம் பெற்றவை. இவற்றில் முதலீடு செய்யும்போது நம் போர்ட்ஃபோலியோவும் பரவலாகிறது. இதில் குறைந்த பட்ச முதலீடு ரூ.500/ என்பதும் ஒரு கவர்ச்சி அம்சம்.
இ.எல்.எஸ்.எஸ்.சில் முதலீடு செய்பவர்கள் பொதுவாக நிதி ஆண்டின் இறுதியில் சந்தை உச்சத்தில் இருந்தாலும் பொருட்படுத்தாமல், வரி சேமிப்புக்காக அவசர அவசரமாக அதிக பணத்தை முதலீடு செய்கிறார்கள். இதைத் தவிர்த்து நிதி ஆண்டின் முதலில் இருந்தே SIP மூலம் இதில் பணம் சேமித்துவருவது நன்மை தரும்.
- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.
source https://www.vikatan.com/business/investment/what-is-index-fund-and-who-can-invest-in-it
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக