‘ப்பா... என்னா வெயில்... என்னா வெயில்... போன வருஷம் கூட இப்படி இல்லப்பா...” என்கிற சம்பிரதாய வசனத்தைப் போல “இப்போதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள 25 எபிசோட் கடந்துடுச்சா?” என்று நாம் சந்தோஷ அலுப்புடன் முனகிக் கொள்ளலாம். வார இறுதியில் கமல் நிச்சயம் இதைப் பற்றி பெருமை பொங்க பேசுவார்.
‘‘இது நெருப்பு வாரம்... தீயைக் கொண்டாடுவோம்’’ என்று பிக் பாஸ் முன்பே அறிவித்திருந்ததால் ‘‘வத்திக்குச்சி பத்திக்காதுடா…’ என்று நெருப்பு தொடர்பான பாடலைப் போடுவார் என்று பார்த்தால், அவர் இசையை டீலில் விட்டு விட்டு ‘’ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க…’’ என்று லக்ஷுரி பட்ஜெட் தொடர்பான தலைப்புக்கு மாறி விட்டார். (25 நாள்களாகியும் சீசன் 5-ல் இதுவரை எந்தவொரு லவ் டிராக்கும் உருவாகவில்லை. நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?!).
“நாளைக்கு பஞ்சாயத்தைக் கூட்டுங்க. நான் மக்கள்கிட்ட பேசணும்” என்று நேற்று இரவு ஆவேசமாகச் சொன்ன இசை, இன்று ஏனோ அதைச் செய்யவில்லை அல்லது சம்பந்தப்பட்ட காட்சிகள் நமக்கு காட்டப்படவில்லை. மாறாக காயினை எடுத்து வைத்துக் கொண்டு ‘’நான் காயினை வெச்சப்புறம்தான் சமையலை பத்த வைக்கணும்’’ என்று கறாராக சொல்லுமளவிற்கு சற்று முன்னேறியிருக்கிறார் இசை.
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். சிபி வீட்டின் தலைவராக இருந்தபோது அவரின் உத்தரவுகளை கேட்டு நடந்த வீடு, தாமரை, மதுமிதா, இசை ஆகியோர்களின் தலைமைகளை இடதுகையால்தான் ஹேண்டில் செய்கிறது. “சொன்னா எங்க கேக்கிறாங்க?” என்கிற முனகலை இந்த மூவருமே நிகழ்த்துகிறார்கள். ஆணாதிக்கச் சிந்தனை கொண்டிருக்கிற சூழல், ஒரு பெண் தலைவர் ஆவதை அத்தனை சீக்கிரம் ஏற்றுக் கொள்வதில்லை. இது வீட்டில் மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்து துறைகளிலும் நிகழ்கிறது.
அரசியல் வரலாற்றை நோக்கினால் சில பெண் தலைவர்கள் சர்வாதிகாரிகளைப் போல் ஏன் நடந்திருக்கிறார்கள் என்கிற உளவியல் புரியும். ஆணாதிக்கக் கூட்டத்தின் நடுவே ஒரு பெண் தன்னுடைய இருப்பை நிரூபிக்க உக்கிரமான முகமூடியை அணிய வேண்டியிருக்கிறது. அப்போதுதான் ஆண்களை தன் முன்னால் தவழ்ந்து வர வைக்க முடியும். இதே வனிதா விஜயகுமார் போன்ற ஆளுமை பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்தால் வீடு கப்சிப்பென்று இருக்கும். இந்த சீசனில் சுருதி ஒருவேளை தலைவர் ஆனால் ஒரளவுக்கு வெடுக் வெடுக் என்று கேட்டு போட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவார் என்று தோன்றுகிறது. ‘’நாங்க கும்பலாக சுத்துவோம்... அய்யோ யம்மான்னு கத்துவோம்’’ என்றில்லாமல் இந்த ஆட்டத்தை தனிநபராக ஆடுவதில் ஆரம்பத்திலிருந்தே முனைப்பு காட்டுபவர் சுருதிதான். வேறு வழியில்லாமல் அவர் கூட்டு சேர்க்கும் ஆட்களால் தானும் இறங்கி விழுகிறார்.
ஆனால் சர்வாதிகாரி வேடத்தை அணிந்து கொள்வதின் மூலம் மட்டுமே பெண்களால் பிரகாசிக்க முடியாது. அதற்கேற்ற உழைப்பையும் அவர்கள் தர வேண்டும். தாமரையும் இசையும் தங்களின் உழைப்பைத் தந்துவிட்டுதான் ‘‘யாரும் மதிக்கவில்லையே!’’ என்று அங்கலாய்க்கிறார்கள். ஆனால் மதுமிதா தனது தலைவர் பொறுப்பின் கனத்தை உணராமலேயே இருக்கிறார். தலைவரான அடுத்த கணமே மைக் மாட்ட மறந்துவிட்டார் மதுமிதா. தாமரை – சுருதி பிரச்னையில் ஒரு தலைவராக அல்லாமல் சுருதியின் நண்பராக மட்டுமே அவர் அதிகம் வெளிப்பட்டார். ஆங்கிலத்தில் பேசி பிக்பாஸிடம் கடி வாங்கினார். கிராமத்துப் பெண்ணாக டாஸ்க்கில் அவர் ஈடுபாடு காட்டியது கூட குறைவே. ஆகவே தன்னுடைய அர்ப்பணிப்பையும் உழைப்பையும் காட்டிய பிறகுதான் தனக்கான அங்கீகாரத்தை ஒருவர் கோருவது சரியானதாக இருக்கும்.
அசந்தர்ப்பமான சூழலில் தாமரையின் நாணயத்தை திருடி வீட்டின் பெரும்பான்மையான ஆட்சேபத்தைப் பெற்றுவிட்டதால் சுருதியும் பாவனியும் குற்றவுணர்வு மற்றும் சங்கடத்தில் ஆழ்ந்து மற்றவர்களிடம் இணையாமல் எப்போதும் ஒதுங்கியே இருக்கிறார்கள். சுருதியின் சட்ட ஆலோசகராக தன்னைத் தானே நியமித்துக் கொண்ட பாவனி, “ரூல் 16ஏ-ன்படி நீ செய்தது தவறில்லை. கமல் சார் வந்து சொல்லட்டும். இவனுங்களுக்கு என்ன பதில் சொல்றது?” என்று ஆலோசனை சொல்கிறார். விளையாட்டு மும்முரத்தில் சுருதி இதை செய்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான சக போட்டியாளர்கள் இதை எதிர்க்கும் போது, ‘நிராயுதபாணியான சூழலில் நான் பாதிக்கப்பட்டேன்’ என்று ஒரு போட்டியாளர் கடுமையான ஆட்சேபத்தை சொல்லும்போது சுருதி இதற்கு உடனே தக்க Damage Control-ஐ செய்ய வேண்டும்.
தாமரை தன்னிடம் தொடர்ந்து பேச மறுக்கும் சூழலில், நாணயத்தின் மீதான தனது உரிமையை சுருதி விலக்கிக் கொண்டு பிக் பாஸிடம் அதை ஒப்படைத்து விடலாம் என்று தோன்றுகிறது. அல்லது வாக்குமூல அறைக்குச் சென்று ‘’ஐயா நாடகத்தின் சூத்ரதாரியே... இதற்கு விடைதான் என்ன?” என்று தனிமையில் கேட்டு குழப்பத்தைத் தெளிவாக்கிக் கொள்ளலாம். மாறாக “நாணயத்தை திருப்பிக் கொடுத்துவிட்டால் நான் தப்பு செய்தது மாதிரி ஆகிடும்” என்று அவர் தன்மானப் பிரச்னையாக மாற்றி பிடிவாதம் பிடிப்பது தவறு. கமல் விசாரணை நாள் வரை காத்துக் கொண்டிருந்தால் மக்களின் ஆதரவு வாக்கில் இருந்து வெகுவாக கீழே இறங்கிவிடுவார்.
‘‘காயினைப் பார்த்தாலே வெறுப்பு வருது. தூக்கிப்போட்டு உடைச்சடலாமுன்னு...’’ என்று சுருதி பிறகு சொல்வதின் மூலம் அவர் மனதார தாமரையின் காயினைப் பறிக்க முயலவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றவர்கள் மாதிரி ‘தாமரையைக் காப்பாத்துவேன்’ என்று சுருதி பாசாங்கு செய்யவில்லை. ‘உங்க காயினாக இருந்தாலும் எடுப்பேன்’ என்பதை முன்பே தெரிவித்தார். இதன் மூலம் தாமரையின் மீது அனுதாபம் காட்டி அவரை பலவீனமான போட்டியாளராக நிறுவ முயலாமல், ‘நான்தான் உன்னை காப்பாற்ற முயலும்...’ என்று அபயம் அளிப்பவராக தன்னை நியமித்துக் கொள்ளாமல் தாமரையை ஒரு சக போட்டியாளராக அங்கீகரித்தார். இந்த அங்கீகாரம் முக்கியமானது.
“உன்னை ஏன் மக்கள் சப்போர்ட் பண்றாங்க தெரியுமா?” என்று தாமரையிடம் ராஜூ முன்பு கூறிய லாஜிக் நிதர்சனமானது. ‘‘ச்சே பாவம்ல..." என்று ஏழைகளிடம் மேல்தட்டு காட்டக்கூடிய சம்பிரதாய அனுதாபத்தை ராஜூ உடைத்துப் போட்டு அம்பலப்படுத்தினார். ஆனால் இதே ராஜூவே, ‘‘நாங்க தாமரைக்காக எடுத்துக் கொடுத்த காயின்’’ என்று பிறகு சொல்வது முரண். எனில் தாமரை எப்போதுதான் தன் விளையாட்டை விளையாடுவார்? இப்படி அனுதாப அலையிலேயே காலம் தள்ளும்படி ஒருவரைச் செய்வது முறையானதல்ல. அவரின் முன்னேற்றத்துக்கும் கற்றலுக்கும் அனுதாபமே ஒரு தடையாக அமைந்து விடும்.
சுருதி நாணயம் எடுத்த முறை சர்ச்சையாகி விட்டது. நிச்சயம் அது பெரிய சறுக்கல்தான். ஆனால் அதற்காக அவர் தாமரையிடம் உரையாட முயன்று பலமுறை தோற்றுப் போனார். ‘தனக்கு இழைக்கப்பட்டது துரோகம்’ என்று தாமரை நினைப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ளது. ஒரு கோணத்தில் அது சரிதான். மறுப்பில்லை. ஆனால் தவறு செய்தவர் கண்கலங்க உரையாட வரும் போது, நேரம் எடுத்துக் கொண்டாவது அதற்கு தாமரை அனுமதித்திருக்க வேண்டும். ‘ஒரு பெண்ணை அவமானப்படுத்தியாவது தான் ஜெயிக்க வேண்டும்’ என்று இன்னொரு பெண் நிச்சயம் நினைக்க மாட்டார். அதன் பின்னுள்ள வலி அவர்களுக்குப் புரியும். இளம் வயதினர், விளையாட்டு உற்சாகத்தில் செய்ததை ‘கொலைக்குற்றம்’ போல் பார்வையாளர் சமூகம் சித்திரிப்பது மிகையானதாக இருக்கிறது.
நிற்க, ஏதோ சுருதி செய்தது சரி போலவும், தாமரையின் மீதே அனைத்து கேஸ்களையும் எழுதுவது போலவும் இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. ஒரு பிரச்னையில் இருக்கும் பல கோணங்களையும் பார்க்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். ‘சைக்கிள்காரன் மீது கார் இடித்து விட்டால், அது நிச்சயம் கார்காரனின் தவறாகத்தான் இருக்கும்’ என்கிற பொதுப்புத்தி சார்ந்த சிந்தனைகளில் இருந்தும் அவசரமான முன்முடிவுகளில் இருந்தும் நாம் வெளியே வர வேண்டும்.
சட்டுபுட்டென்று தீர்ப்பு எழுதி விடுவதில் பல ஆபத்துகள் இருக்கின்றன. Mob mentality என்பது ஆபத்தான விஷயம். அது பல சமயங்களில் அழிவைத்தான் ஏற்படுத்தும். இதிலிருந்து விலகி ஒரு பிரச்னையை பல்வேறு கோணங்களில் நிதானமாகப் பார்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாக ‘தாமரை – சுருதி’ விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுப்புத்தியின் கருத்தை ஆதரித்து மட்டுமே பேசும் நெருக்கடி பிரபலங்களுக்கு எப்போதும் ஏற்படும். ஆனால் சிலர்தான் இந்தத் தடையை உடைத்தெறிந்து சமூக நலன் கருதி தன் மனதுக்குப் பட்ட உண்மைகளைப் பொதுவில் பேசுவார்கள். இதனால் வரும் எதிர்ப்புகளின் மீது அவர்களுக்கு ஒருவகையில் அனுதாபமே தோன்றும். கமல் பல சமயங்களில் பொதுப்புத்தியை உடைத்து தனது அபிப்ராயத்தை வலுவாக முன் வைப்பவர். இந்த விவகாரத்தில் அவர் என்ன சொல்லவிருக்கிறார் என்பதைக் காத்திருந்து பார்க்கலாம். (ஆனால் என்ன நடக்கும் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது).
நகரம்/கிராமம் டாஸ்க் படுதோல்வி என்பதாகத் தோன்றுகிறது. இதனால்தான் ஒரு கட்டத்தில் பிக் பாஸே தலையிட்டு ‘’சுவாரஸ்யமாக ஆடித் தொலையுங்கள்’’ என்று போட்டியாளர்களை எச்சரிக்க வேண்டியிருந்தது. சிறிது சிறிதாக நிறைய டாஸ்க்கள் தந்து சலிப்பேற்றியதை விடவும் ஒரேயொரு முக்கியமான டாஸ்க்கை தந்து இரு அணிகளின் நடிப்புத் திறமை வெளிவருவது போல் செய்திருக்கலாம். எனில் ராஜூ, இமான் போன்றவர்கள் பட்டையைக் கிளப்பியிருப்பார்கள். சீசன் 4-ல் இதே மாதிரியான டாஸ்க்கில் ரியோ, அர்ச்சனா, நிஷா போன்றவர்கள் நடித்திருந்த ‘பத்திரம் திருடும் டாஸ்க்’ நினைவுக்கு வருகிறது. இதில் ரியோவின் நகைச்சுவையெல்லாம் அருமையாக வந்திருந்தது. இந்த நோக்கில் ராஜூ அதிகம் ஜொலித்திருப்பார்.
ஆனால் இம்முறையோ பிக்பாஸ் பணம் பரிசு என்கிற பெயரில் மெழுகுவர்த்தியை ஊதும் ‘சின்னப்புள்ளத்தனமான’ விளையாட்டுக்களை நிறைய வைத்து வெறுப்பேற்றினார்கள். ‘சின்னப்பொண்ணு’ இந்த வீட்டில்தான் இருக்கிறாரா என்று நாம் பல முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்தளவிற்கு ஒதுங்கியிருக்கிறார் அல்லது அவர் தொடர்பான காட்சிகள் காட்டப்படுவதில்லை. ஆனால் கிராமத்து அணியில் அவர் இணைந்தது அல்வா சாப்பிட்டது மாதிரியாகிவிட்டது.
‘காணோமே’ என்று நாம் தேடிக் கொண்டிருந்த சின்னப்பொண்ணு, பாடத் துவங்கியதுமே ‘ஆஹா…’ எங்கேயோ மேலே போய் விடுகிறார். அவர் மீதான குறைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. நேற்றைய எபிசோடிலும் நாட்டுப்புற பாடலை மிக அருமையாகப் பாடி நம் மனங்களில் நிறைந்தார். உயர் ஸ்தாயியைக் கூட அவரால் அநாயசமாக எட்ட முடிகிறது.
சின்னப்பொண்ணுவின் பாடல் ஒருபக்கம் இருக்கட்டும். தாமரை இதற்கு ஆடின ஆட்டம் இருக்கிறதே! அட்டகாசம். விதவிதமான அசைவுகளில் பாடலின் தாள ஒத்திசைவோடு பொருந்தி அவர் ஆடிய ஆட்டம் அவரது சிறப்பான மேடை அனுபவத்தை வெளிப்படுத்தியது. அக்ஷராகவும் ஐக்கியும் இவரின் கூடவே ஆடி நகலெடுக்க முயன்றது சுவாரஸ்யமான காட்சியாக இருந்தது.
‘‘ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு இருக்கு... ஏண்டா அவ கையைப் பிடிச்சு இழுத்தே?’’ என்கிற காமெடியைப் போல நாணயம் திருடிய சுருதியின் விவகாரத்தின் சூடு அடங்குவதற்குள் இன்னொரு காரியத்தை அக்ஷராவும் ஐக்கியும் நிகழ்த்தி விட்டார்கள். நகரத்து அணியைச் சேர்ந்த வருண் தன் கண் முன்னால் பாஸ்தா சாப்பிட்டு வெறுப்பேற்றுவதைச் சகிக்க முடியாமல் இவர்கள் பிரெட் பாக்கெட்டை எடுத்து ஒளித்து வைத்துவிட்டார்கள். இதுவும் ஜாலியான திருட்டுதான். ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் விஷயம்தான். ஆனால் சாப்பிடும் பொருளை ஒளித்து வைப்பது முறையல்லவே என்று இவர்கள் சற்று யோசித்திருக்கலாம்.
‘’அவங்க எங்களை வெறுப்பேத்தினாங்க. அதனாலதான் ஒளிச்சு வெச்சோம்” என்று ஐக்கி பிறகு ராஜூவிடம் காரணம் சொன்ன போது ராஜூ அதற்கு சொன்ன லாஜிக் விளக்கம் இருக்கிறதே... அட்டகாசம். “நீ இப்ப என்ன கேரக்ட்டர்ல இருக்கே... கிராமத்துக்காரி... அப்ப உனக்கு பிரெட்டை பார்த்தா என்ன தோணணும்?!” என்று அவர் கேட்டது அற்புதமான தர்க்கம். ஒரு கேரக்டரை ஏற்றுக் கொண்டால் அந்தக் கேரக்டராகவே மாறி வாழ வேண்டும் என்கிற மெத்தட் ஆக்டிங்கை எளிமையான முறையில் சொல்லி நடிப்பின் இலக்கணத்தை உணர்த்திவிட்டார் ராஜூ. இதைப் போலவே கூழ் அருந்தும் காட்சியில் – அந்தக் கூழ் அவருக்குப் பிடித்திருந்ததோ இல்லையோ... ஆனால் கண்களை மூடி ‘ஆஹா... ஆஹா... பிரமாதம்’ என்று ராஜூ சாப்பிட்டது அற்புதமான வெளிப்பாடு.
தன்னுடைய அதிகாரத்தை நிரூபிப்பதில் இசை ஊசலாட்ட மனநிலையில் இருப்பதை உணர முடிகிறது. அதிகமாக பேசி மற்றவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவருக்குத் தோன்றுகிறது. அதே சமயத்தில் தனக்கு தரப்பட்டிருக்கும் அதிகாரத்தையும் பொறுப்பையும் வலிமையாக அமல்படுத்த வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது. இரண்டிற்கும் நடுவே அவர் தத்தளிக்கிறார். “சாப்பிடற விஷயத்துல விளையாடாதீங்க” என்று அவர் சற்று கறாராக கூறியது சிறப்பான காட்சி. அப்போது கூட அக்ஷரா தன் விளையாட்டை நிறுத்தவில்லை. பிக் பாஸின் அறிவுறுத்தலுக்கு பிறகு “நீங்கள் எனக்கு சமைத்துத்தர வேண்டும். என் பேச்சை கேட்க வேண்டும்’ என்று கூட்டத்திடம் இசை சொன்னது கூட ஒகே.
ஆனால் ‘‘யாரும் நான் சொல்றதைக் கேக்க மாட்றேங்கோ” என்று மதுமிதா சபையில் தன் பிரச்னையை சொல்லி முடித்த பிறகு “அப்படியே என் பிரச்னையையும் சொல்லிடுங்கக்கா” என்று பிரியங்காவிடம் இசை வேண்டுகோள் வைத்தது அநாவசியமானது. மதுமிதாவிற்காகவது மொழிப்பிரச்சினை என்கிற சாக்கு இருக்கிறது. இசைக்கு அது கிடையாது. ஒரு கூட்டத்தில் தனது அதிகாரத்தை செயல்படுத்தும்போது நிச்சயம் சில எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதற்காக எப்போதும் Safe Zone-ல் நிற்காமல் இறங்கி ஆடுவதுதான் ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். இசையின் பின்னணி, வயது, அனுபவமின்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டால் அவரின் தயக்கம் புரிகிறது. ஆனால் அவர் இந்தத் தடைகளைத் தாண்டி வரும் பயிற்சிகளை பிக்பாஸ் விளையாட்டின் மூலம் கற்றுக் கொள்ளலாம்.
வேறென்ன? டாஸ்க்குகளில் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் நிகழ்ந்தன. சுருதியின் முகத்தில் வண்ணப்பொடியை அக்ஷரா பூசியபோது ‘பழி வாங்கறதுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சுதுல்ல’ என்பது போல் சர்காஸ்டிக்காக கேட்டார் சுருதி. பிறகு அவரின் முகம் சரியாக இல்லை. கிராமத்து அணியினர் தங்களிடம் விளையாடிய போது, “நாங்க உங்களுக்காக ஸ்கூல், ஹாஸ்பிட்டல் கட்டித் தர்றோம்” என்பது போல் பிரியங்கா சொன்னது நகரத்தின் மேட்டிமைத்தனத்தின் அடையாளம்.
லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்கில் சுவாரஸ்யமில்லாத நபர்களாக பாவனியும் மதுமிதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒருவகையில் சரிதான். ஆனால் நாணயம் விவகாரத்தில் பாவனியும், ‘யாரும் என் பேச்சைக் கேட்க மாட்டேங்கறாங்க’ விவகாரத்தில் மதுமிதாவும் சற்று அப்செட்டாக இருந்தார்கள். மதுமிதாவையாவது ஆங்காங்கே காண முடிந்தது. பாவனி சுத்தமாக ஒதுங்கி விட்டார். இவர்களுக்காவது இந்தக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்களைத் தவிர அங்கு காணாமல் போன பட்டியல் மிக அதிகம். சிபி, வருண் என்று பலரைத் தேட வேண்டியிருந்தது.
கிராமம், நகரம் டாஸ்க்கை அதிகம் இழுக்காமல் பிக்பாஸ் முடித்துக் கொண்டது நல்ல விஷயம். சின்னப்பொண்ணு, ராஜூ ஆகியோரின் தனிப்பட்ட திறமைகள் வெளிவருவது போல மற்றவர்களின் தனித்திறமைகளும் வெளிப்படுவது மாதிரியான டாஸ்க்குகளை ஏற்படுத்தினால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடும் என்று தோன்றுகிறது.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-episode-25-thamarai-vs-sruthi-whose-side-are-you-on
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக