Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

முதலீட்டாளர்களைக் கைவிடாத மியூச்சுவல் ஃபண்டுகள்; இவற்றுள் உங்களுக்கு ஏற்றது எது? - 39

நூறு மனிதர்கள் இருந்தால் நூற்றிப் பத்துக் கருத்துகள் இருக்கும் என்பார்கள். ஏனெனில், நம் ஒவ்வொருவருக்குமான குறிக்கோள்கள் வேறு; கையிலிருக்கும் பணவசதி வேறு; ரிஸ்க் எடுக்கும் தைரியம் வேறு; முதலீட்டுக்காலம் வேறு. ஆனால், அனைவருக்கும் அவரவர் தேவைக்குத் தகுந்தபடி ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் இருக்கிறது என்பது சந்தோஷமான விஷயம் அல்லவா?

ஈக்விட்டி ஃபண்ட்ஸ், ரிஸ்க் எடுக்கத் துணிபவர்களுக்கும்,

கடன் ஃபண்ட்ஸ் பாதுகாப்பை விரும்புபவர்களுக்கும் உதவுகின்றன என்று பார்த்தோம்.

இவை தவிர உள்ள ஹைப்ரிட் ஃபண்ட்ஸ் ஓரளவு ஈக்விட்டியிலும், மீதியைக் கடனிலும் முதலீடு செய்கின்றன. கன்சர்வேடிவ் ஹைப்ரிட் ஃபண்ட்ஸ் 10% முதல் 25% வரை பங்குச் சந்தையிலும், மீதியை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன.

Investment (Representational Image)

Also Read: `எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்!' - முதலீட்டின் முக்கியமான மந்திரம் இது; ஏன்? - 38

பேலன்ஸ்ட் ஹைப்ரிட் ஃபண்ட்ஸ் 40% முதல் 60% வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றது.

அக்ரெஸிவ் ஹைப்ரிட் ஃபண்ட்ஸ் 65% முதல் 80% வரை பங்குகளில் முதலீடு செய்கிறது.

டைனமிக் அசெட் அலோகேஷன் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடுகளை அடிக்கடி மாற்றி அமைத்துக்கொள்கின்றன.

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்ஸ் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அதுவும் ஒரு வகையான ஹைப்ரிட் ஃபண்ட் ஸ்கீம்தான். ஒரு சந்தைக்கும் இன்னொரு சந்தைக்கும் நடுவில் பங்கு விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களை இது பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு பங்கை கேஷ் மார்க்கெட்டில் வாங்கி, ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் விற்றல் ,என்.எஸ்.இ-யில் ரூ.500/-க்கு வாங்கி பி.எஸ்.இ-யில் ரூ. 500.35-க்கு விற்றல் என்று கழுகுப் பார்வை தேவைப்படும் ஒரு சிக்கலான சமாசாரம். அதனால் இதில் வாங்கல், விற்றல் அதிகம் நடைபெறும்.

வாங்கலும், விற்றலும் ஒரே சமயத்தில் நடைபெறுவதால், ரிஸ்க் அதிகமில்லை. வாங்கி சில நாள்களில் பங்கின் விலை இறங்கிவிடுமோ என்ற பயம் இல்லை. மேலும், ஒரு பகுதி பணத்தைக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதாலும் ரிஸ்க் குறைகிறது. வரி விதிப்பைப் பொறுத்தவரை ஈக்விட்டி ஃபண்டுக்கான வரி விதிப்பு முறை இதற்கும் பொருந்தும். சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்கள் தோன்றும்போது இவை நன்கு செயல்பட்டு லாபம் ஈட்டும்.

ஆனால், ஒரு சிறிய அளவு லாபத்துக்காகப் பெரிய அளவு பணத்தை பரிவர்த்தனை செய்யும்போது கமிஷன், கட்டணங்கள் என்று லாபத்தில் ஒரு பகுதியை இழக்க நேர்கிறது; செலவு விகிதம் எகிறுகிறது என்பது இதில் உள்ள முக்கியமான நெகட்டிவ் பாயின்ட்.

Investment

Also Read: மனைவிக்காக வாரன் பஃபெட் தேர்வு செய்த இண்டெக்ஸ் ஃபண்டுகள்; என்ன ஸ்பெஷல் தெரியுமா? - 37

மல்டி அஸெட் அலொகேஷன் ஃபண்ட்ஸ் தங்கம், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், கடன் பத்திரங்கள் போன்ற பல முதலீட்டு வகைகளில் ஏதாவது மூன்றைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 10% அளவு முதலீடு செய்கின்றன. ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் குறைந்த பட்சம் 65% பங்குச் சந்தையிலும், குறைந்த பட்சம் 10% கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன.

இவை தவிர உள்ள சொல்யூஷன் ஓரியன்டெட் ஸ்கீம்களில் ரிடையர்மென்ட் ஃபண்டில் லாக் இன் பீரியட் - ஐந்து வருடங்கள் அல்லது ரிடையர்மென்ட் வயது - இவற்றில் எது குறைவோ அது. சில்ட்ரன்ஸ் ஃபண்டில் லாக் இன் பீரியட் ஐந்து வருடங்கள் அல்லது சிறாரின் பதினெட்டு வயது வரை - இவற்றில் எது குறைவோ அது.

ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் இவற்றிலிருந்து சற்று மாறுபட்டது. வித விதமான மலர்களைக் கொண்டு ஒரு பூங்கொத்து செய்வது போல் ஏற்கெனவே சந்தையிலிருக்கும் நல்ல மியூச்சுவல் ஃபண்ட்களைத் தேர்வு செய்து அவற்றில் முதலீடு செய்வதே ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ். இதனால் நாம் எதிர்பார்க்கும் பல்வகைப்படுத்துதல் (Diversification), பல ஃபண்ட் மேனேஜர்களின் திறமையான வழிநடத்துதல் போன்றவை நமக்குக் கிடைத்து விடுகின்றன.

ஃபண்ட் மேனேஜரின் குறிக்கோள் அதிக வருமானம் என்றால் என்.ஏ.வி. (Net Asset Value) அதிகமுள்ள ஃபண்டுகளைத் தேர்வு செய்வார். அல்லது பாதுகாப்புதான் குறிக்கோள் என்றால் குறைந்த ரிஸ்க், குறைந்த என்.ஏ.வி கொண்ட ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வார்.

Stock Market

Also Read: ரிஸ்க் குறைவு; ஆனால், வங்கியை விட அதிக லாபம்; கடன் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றவை? - 36

ஃபாரின் ஃபண்டுகளைக்கூட தேர்வு செய்யும் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் உள்ளன. மற்ற மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களைவிட ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸில் செலவு விகிதம் அதிகம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

கடந்த பல அத்தியாயங்களாக மியூச்சுவல் ஃபண்டின் வெவ்வேறு முகங்களைப் பார்த்து வந்தோம். ஆயிரக்கணக்கான ஸ்கீம்கள் இருக்கும் நிலையில் நமக்கேற்ற ஒரு சில ஃபண்டுகளைத் தேடிப்பிடிக்க பொறுமை வேண்டும். கூடியவரை நம் முதலீடுகளை அதிகம் சிக்கலாக்கிக் கொள்ளாமல் நமக்குப் புரியக்கூடிய எளிய ஸ்கீம்களில் இறங்குவது நல்லது. நமக்கேற்ற நிதி ஆலோசகர் ஒருவரைக் கண்டறிந்து ஆலோசனை பெறுவது அதை விட நல்லது.

- அடுத்து புதன் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்



source https://www.vikatan.com/business/investment/an-introduction-to-hybrid-mutual-funds-and-how-it-works

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக