Ad

சனி, 30 அக்டோபர், 2021

ஆப்பிள் சந்தேஷ் | கேரட் ரசமலாய்| குலாப் ஜாமூன் - சீஸ் கேக் - தீபாவளி ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

நெருங்கிவிட்டது தீபாவளி. வழக்கம்போலவே இந்த வருடமும் `ஏதாவது புதுசா டிரை பண்ணணும்' என யோசித்து வைத்திருப்பீர்கள். அப்படிப் புதிதாக முயற்சி செய்து பார்க்க வித்தியாசமான ஸ்வீட் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக... இந்த வார இறுதியில் தீபாவளிக்கு முன் ஒருமுறை செய்து பார்த்து, குறைநிறைகள் தெரிந்துகொண்டு, மறுபடி பக்காவாகச் செய்து அசத்துங்கள்.

தேவையானவை:
மோத்தி சூர் லட்டு - 6
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம், பிஸ்தா (நறுக்கியது) - அலங்கரிக்க

ஷாஹி பூந்தி ஜார்

செய்முறை:
பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொதிக்கவிட்டு பாதியாக வற்றவிடவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கலக்கி, கால் பாகமாக வற்றும்வரை சூடாக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இதுதான் ராப்டி.

மோத்தி சூர் லட்டை உதிர்த்து வைக்கவும். பிறகு, சிறிய கண்ணாடி ஜாடியில் கால் இஞ்ச் அளவுக்கு உதிர்த்த மோத்தி சூர் லட்டை சரி சமமாகப் பரப்பவும். அதன் மேல் கால் இஞ்ச் அளவு ஆறிய ராப்டியை சரி சமமாகப் பரப்பிவிடவும். மறுபடியும் மோத்தி சூர் லட்டை உதிர்த்துப் பரவலாக்கவும். விருப்பமுள்ளவர்கள் இதன் மேலே மறுபடியும் ராப்டியை ஊற்றி சமன்படுத்தலாம்.

இறுதியாக ஷாஹி பூந்தியின் மேலே பாதாம், பிஸ்தாவை தூவி அலங்கரித்து எட்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு வெளியே எடுத்து ஜில் என்று பரிமாறவும்.

தேவையானவை:

ரசமலாய் - 6
வேகவைத்து துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
விப்பிங் க்ரீம் - ஒரு கப்

பாதாம், பிஸ்தா, ரோஜா இதழ்கள், துருவிய கேரட் - அலங்கரிக்க

கேரட் ரசமலாய்

செய்முறை:

ரசமலாய் என்றாலே அது பாலில் ஊறிக்கொண்டிருப்பதுதான். பாலில் ஊறும் ரசமலாயைப் பிழிந்து இரண்டு சரி சமமான துண்டுகளாக்கவும். நறுக்கிய ரசமலாய்த் துண்டுகளை மறுபடியும் அது ஊறிய பாலிலேயே ஊறவிடவும்.

விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் கைவிடாமல் நன்கு அடித்துக் கிளறவும். க்ரீம் பஞ்சு போல வர வேண்டும். அதாவது எடுத்து ஒரு தட்டில் வைத்தால் அது கீழே விழாது... அந்தப் பதத்துக்கு அடித்துக் கொள்ளவும். இத்துடன் துருவிய கேரட்டைச் சேர்த்துக் கலக்கவும். பாலில் ஊறும் ஒரு ரசமலாய் துண்டை எடுத்து அதன் மேல் ஒரு டீஸ்பூன் கேரட் - விப்பிங் க்ரீமை சமமாகப் பரப்பவும். மற்றொரு ரசமலாய் துண்டை க்ரீமின் மேல் மெதுவாக வைக்கவும்.

இதேபோல மீதம் இருக்கும் ரசமலாய்களை சாண்ட்விச் போல அலங்கரிக்கவும். பரிமாறும்போது ரசமலாய் சாண்ட்விச் மேலே ரசமலாய் ஊறிய பாலை ஊற்றி, அதன் மேல் பாதாம், பிஸ்தா, துருவிய கேரட், ரோஜா இதழ் தூவி ஜில் என்று பரிமாறவும்.

தேவையானவை:

க்ரீம் சீஸ் - 200 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் - 100 கிராம்
விப்பிங் (Whipping) க்ரீம் - 200 கிராம்
சர்க்கரை - கால் கப் + 3 டேபிள்ஸ்பூன்
டைஜஸ்டிவ் பிஸ்கட் (பொடிக்கவும்) - 150 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
தண்ணீர் - முக்கால் கப்
ஃபுட் ஜெலட்டின் - ஒரு டேபிள்ஸ்பூன் + 2 டீஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
குலாப் ஜாமூன் - 15 பீஸ் + அலங்கரிக்க

குலாப் ஜாமூன் - சீஸ் கேக்

செய்முறை:

ஒரு ஸ்பூன் வெண்ணெயை புடிங் பவுலின் உள்ளே முழுவதுமாக தடவவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட்டையும் வெண்ணெயையும் சேர்த்துக் கலக்கவும். கலவை பரபரவென மண்போல் இருக்க வேண்டும். இதை புட்டிங் பாத்திரத்தில் சேர்த்து சமன் செய்யவும். பிறகு, அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஜீராவில் ஊறியிருக்கும் குலாப் ஜாமூனை எடுத்து ஜீராவை முழுவதுமாக வடியவிடவும். பிறகு, ஒவ்வொன்றையும் சரிசமமாக இரண்டு துண்டுகளாக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.

ஃப்ரெஷ் க்ரீமில் குங்குமப்பூவை சேர்க்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் ஜெலட்டினை சிறிதளவு சுடுநீரில் ஊறவிடவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் கைவிடாமல் நன்கு அடித்துக் கிளறவும். க்ரீம் பஞ்சு போல வர வேண்டும். அதாவது, எடுத்து ஒரு தட்டில் வைத்தால் அது கீழே விழாது... அந்தப் பதத்துக்கு அடித்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் க்ரீம் சீஸ், கால் கப் சர்க்கரையைச் சேர்த்து நான்கு நிமிடங்கள் எக்பீட்டரால் நன்கு அடித்து வைக்கவும்.

ஊறவைத்த ஒரு டேபிள்ஸ்பூன் ஜெலட்டினை மைக்ரோவேவ் அவன் பாத்திரத்துக்கு மாற்றி, 30 விநாடிகள் வைத்து சூடாக்கி எடுக்கவும். அதை ஆறவைத்து ஃப்ரெஷ் க்ரீம் - குங்குமப்பூ கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை க்ரீம் சீஸ் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் அடித்து வைத்த விப்பிங் க்ரீமைச் சேர்த்து மிதமாகக் கலக்கவும்.

ஃப்ரிட்ஜில் உள்ள புடிங் பவுலை வெளியே எடுக்கவும். இதன் மேல் பாதியாக்கிய குலாப் ஜாமூன்களை நெருக்கமாக அடுக்கவும். பிறகு க்ரீம் சீஸ் கலவையை குலாப் ஜாமூன்களின் மேல் சேர்த்து ஃப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் இரண்டு டீஸ்பூன் ஜெலட்டினை சுடுதண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முக்கால் கப் தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் மூன்று டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்ததும் ஊறவைத்த 2 டீஸ்பூன் ஜெலட்டினை சேர்த்துக் கரையவிட்டு ஆறவிடவும். கலவை எல்லாம் ஒன்று சேர்ந்ததும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த குலாப் ஜாமூன் கலவையில் ஜெலட்டின் கலவையை ஊற்றவும். பிறகு ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும்.

பிறகு வெளியே எடுத்து குலாப் ஜாமூன் சீஸ் கேக்குகளை அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.

தேவையானவை:
பனீர் - 200 கிராம்
பொடித்த சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
பால் - இரண்டரை டேபிள்ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி
ஆப்பிள் பூரணத்துக்கு:
ஆப்பிள் - 2 (தோல் உரித்து துருவியது)
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
சர்க்கரை - 8 டீஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (இரண்டு டேபிள்ஸ்பூன் சுடுநீரில் ஊறவைக்கவும்).

ஆப்பிள் சந்தேஷ்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து அதில் துருவிய ஆப்பிள், சர்க்கரை, எலுமிச்சைப்பழச் சாறு, ஊறிய குங்குமப்பூவை தண்ணீருடன் சேர்த்து, மேலும் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, அது வற்றும்வரை ஆப்பிளை வேகவைத்து அடுப்பை விட்டு இறக்கி ஆறவிடவும். இத்துடன் பனீர், பொடித்த சர்க்கரை, பால், எசன்ஸ் சேர்த்துப் பிசையவும். எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை குழிவாக்கி அவற்றின் நடுவே, ஒரு டீஸ்பூன் ஆப்பிள் பூரணத்தை வைத்து மீண்டும் உருண்டைகளை நன்றாக உருட்டவும். பிறகு, உருண்டைகளை நீளவாக்கில் உருட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, ஜில்லென்று பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/apple-sandesh-carrot-rasamalai-jamun-cake-deepavali-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக