ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தனது ஜூன் மாத காலாண்டு முடிவுகளை வெளியிட்டபோதே, அதன் பங்குகளைப் பிரிப்பதற்கான பேச்சுகள் அடிபட்டன. சில மாதங்கள் கழித்து நடப்பு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் 1:5 என்கிற விகிதத்தில் பங்கு பிரிக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் அதன் பங்கு விலை தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்தது.
ஐ.ஆர்.சி.டி.சி ஸ்டாக் ஸ்பிலிட் அறிவிப்பின்படி, கடந்த அக்டோபர் 28-ம் தேதி ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகள், ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஒரு பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு 5 பங்கு என்கிற அடிப்படையில் பிரித்துத் தரப்பட்டுள்ளது.
வெறும் 320 ரூபாய் விலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் ஸ்டாக் ஸ்பிலிட்டுக்கு முன்பு சுமார் ரூ.5,900 வரை அதிகரித்து வர்த்தகமானது. ஸ்டாக் ஸ்பிலிட்டுக்குப் பிறகு தற்போது, வர்த்தக இறுதி நாளான இன்று (29.10.2021) காலை 11.46 மணிக்கு ரூ.869 என்கிற விலையில் வர்த்தகமானது.
ஸ்டாக் ஸ்பிலிட் செய்ததற்காகக் காரணம் என்ன, இந்தப் பங்கில் இப்போது முதலீடு செய்யலாமா என்கிற கேள்வியை பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.
``ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதல் அடிப்படையில் ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகள் ரூ.2-ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக முதலீட்டுச் சந்தையில் இந்தப் பங்கின் புழக்கம் அதிகரிக்கும். அதுமட்டும் அல்லாமல், அதிக விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கின் விலை ஸ்டாக் ஸ்பிலிட்டால் குறைந்திருப்பதால், சிறு முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இதனால் ரீடெய்ல் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் முதலீடு செய்ய இனி அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
மேலும், இந்திய ரயில்வே மற்றும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே தீரும். அந்த வகையில் இந்திய ரயில்வே துறையின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மற்றும் இதர சேவைகளை அளிக்கும் ஒரே தளம் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் மட்டுமே. லாபம் கிடைக்கும் ரயில்வே துறையின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை துறையில் மோனோபோலியாக இந்த நிறுவனம் ஆதிக்கம் செய்கிறது. இதனால் பங்கு விலை குறைவாக இருக்கும்போது முதலீடு செய்தால் கட்டாயம் லாபம் கிடைக்கும். நஷ்டம் ஏற்படும் என்றெல்லாம் முதலீட்டாளர்கள் யோசிக்கத் தேவையில்லை.
`ஏர் இந்தியா' நிறுவனம் தனியார்மயம் ஆக்கப்பட்டிருப்பது போல, இனிவரும் காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் வசம் இருக்கும் சில ரயில்வே வழித்தடங்கள் தனியார்மயம் ஆக்கப்படலாம். அதற்கான பேச்சுவார்த்தைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
வழித்தடங்கள் தனியார் மயம் ஆக்கப்பட்டாலும், ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் வழங்கிவரும் டிக்கெட் புக்கிங் மற்றும் கேட்ரிங் சர்வீசஸ் சேவைகளைவிட சிறப்பான சேவைகளைத் தனியார் நிறுவனங்களால் வழங்க முடியாது என்பதால், பயணிகளும் முதலீட்டாளர்களும் கலக்கம் கொள்ளத் தேவையில்லை. வழித்தடங்கள் தனியார்மயம் ஆக்கப்பட்டாலும், பங்கு விலை ஏற்றத்தை சந்திக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது" என்றார் தெளிவாக.
சரிவில் ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள்!
ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டிய பிறகு, இந்தப் பங்கின் விலை கடந்த சில வாரங்களாக இறங்கவே செய்தது. கடந்த வியாழன் அன்று சுமார் 10% வரை விலை உயர்ந்தாலும், வெள்ளிக்கிழமை அன்று கணிசமான இறக்கத்தைக் கண்டது. இதற்கு என்ன காரணம்?
ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டதன்படி, வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ஈட்டும் முன்பதிவு கட்டண (Convenience fees for bookings) வருவாயை ரயில்வே அமைச்சகத்துடன் 50:50 விகிதத்தில் பகிர்ந்துகொள்ளும் என்று அக்டோபர் 28-ம் தேதி ஒழுங்குமுறை ஆணையமான செபிக்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தெரிவித்தது.
இந்த அறிவிப்பு, ஐ.ஆர்.சி.டி.சி-யின் பங்கை வாங்கிய முதலீட்டாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்தப் பங்கு விலை இன்று கடுமையாக இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிகபட்சமாகப் பங்கு விலை ரூ.639 வரை சரிவைச் சந்தித்தது.
இன்று காலை 11 மணி வாக்கில், `முன்கட்டணப் பதிவைப் பகிர்ந்துகொள்ளும் என்கிற அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் திரும்பப் பெறும்' என முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத்துறை செயலர் (Department of Investment and Public Asset Management (DIPAM)) ட்வீட் செய்த பிறகு, இந்தப் பங்கின் விலைச் சரிவு தடுக்கப்பட்டது.
இருப்பினும் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில்தான் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்கிற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பங்கின் விலை மீண்டும் குறையத் தொடங்கியது. இன்று மதியம் 1.10 மணிக்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை 6.83% சரிந்து ரூ.853.65-க்கு வர்த்தகமானது.
source https://www.vikatan.com/business/finance/expert-speaks-about-is-this-right-time-to-invest-in-irctc-share
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக