Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

டாஸ்மாக்: ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டது எப்படி?! - அதிர்ச்சிப் பின்னணி

தமிழகத்தில் மட்டும் 5,300-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. தமிழகத்தின் வார நாள்களில் மட்டும் 65-70 கோடி ரூபாய் மதிப்புக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதுவே வார இறுதி நாள்களில் 90-100 கோடி அளவுக்கு மது விற்பனை அதிகரிக்கிறது. மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் மட்டும் மது விற்பனை 120-150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா பேரிடர் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய மூன்று தினங்களில் மட்டும் 626 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்தது.

டாஸ்மாக் கடை

கடந்த அதிமுக தலைமையிலான ஆட்சியிலும் சரி, தற்போது நடைபெறும் திமுக தலைமையிலான ஆட்சியிலும் சரி, கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும் டாஸ்மாக் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது. அதற்கு வருமானம்தான் காரணம் என்று பேச்சு. உண்மையில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசு கஜானாவுக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்பதுதான் பொதுப் பார்வையாகவும் இருக்கிறது.

டாஸ்மாக் மது விற்பனை மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது, செலவு எவ்வளவு, லாபம், நஷ்டம் எவ்வளவு... போன்ற விவரங்களை 2009-10 முதல் 2018-19 நிதியாண்டுவரை ஒவ்வோர் ஆண்டுக்கும் தனித்தனியாகத் தெரிந்துகொள்ள விகடன் ஆர்.டி.ஐ குழு மூலம் தகவல்களைச் சேகரித்தோம். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அலுவலகத்திலிருந்து, நமக்குக் கிடைத்த தகவல் நம் எண்ணத்துக்குத் தலைகீழான ஒன்றாகத்தான் இருந்தது. கிடைக்கப்பெற்ற ஆர்.டி.ஐ தகவலைக் கீழே உள்ள படத்தில் காணலாம்...

டாஸ்மாக் மது விற்பனை RTI தகவல்

நமக்கு வந்திருந்த விவரங்களில் 2009-10 முதல் 2018-19 நிதியாண்டுவரை, 10 வருடங்களில் கிடைத்த வருமானம் 2,65,225.71 கோடி ரூபாய், செலவு 2,65,336.54 ‬ கோடி ரூபாய் என்ற தகவல் கிடைத்திருந்தது. இதில், 2012-13 நிதியாண்டில் மட்டும் 103.64 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018-19 நிதியாண்டில் 37,026.48 கோடி ரூபாய் வருமானமும், 37,010.41 கோடி ரூபாய் செலவும் ஏற்பட்டிருந்ததாகவும். அந்த ஆண்டில் 16.07 கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

சமீபத்தில், பழநியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டாஸ்மாக் நஷ்ட விவரங்களைக் கேட்டிருந்தார். அந்தத் தகவலில் 2019-20 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனையில் 71.93 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே 2009-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மொத்தமாக 312.43 கோடி ரூபாய் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சிவஞானம் RTI தகவல்

ஆண்டுக்கு 35,000 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெறும் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்பது பலருக்கும் அதிர்ச்சியான தகவலாகத்தான் இருக்கும். இந்த நஷ்டத்துக்குக் காரணம், மது உற்பத்தி ஆலைகளிடம் கொள்முதல் செய்வது, டாஸ்மாக் பணியாளர்களின் சம்பளம், கடை வாடகை, பராமரிப்பு, போக்குவரத்து, விநியோகம் போன்ற காரணங்கள் போக, முக்கியமாக மது விற்பனையில் அரசுக்கு ஒரு பெரும் தொகை வரியாகவும் செலுத்தப்படுகிறதாம். இது போன்ற காரணங்களால்தான், டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறப்படுகிறது.

Also Read: டாஸ்மாக்: ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5, ரூ.10 விலை - என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்?

வரியாகச் செலுத்தும் பெரும் தொகை அரசுக்குத்தான் வந்தடைகிறது என்பதால், டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினாலும், மது விற்பனையில் அரசு பல்லாயிரம் கோடிகளுக்கு அதிகமாக வருவாய் ஈட்டிவருகிறதாம்.

டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவது தொடர்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநிலத் தலைவர் நா.பெரியசாமியிடம் பேசினோம். `` மது விற்பனையில் வரும் லாபத்தில் இரண்டு சதவிகிதம் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்துக்குக் கிடைக்கும். விற்பனை வரி, கலால் வரி போன்ற வரிகளெல்லாம் சேர்த்து மீதமுள்ள 98 சதவிகித லாபமும் அரசுக்குத்தான் செல்கிறது. இந்த காரணத்தாதான், ஒரு சில ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

நா.பெரியசாமி

மேலும், ``மது விற்பனை தனியாரிடம் இருந்த நேரத்தில், தனியார் மது விற்பனையாளர்களுக்கு 34 சதவிகிதம் வரை லாபம் கிடைத்தது. அந்த லாபத்திலிருந்து அவர்கள் விற்பனை வரி, வருமான வரி போன்றவற்றைச் செலுத்துவார்கள். டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனை ஆரம்பித்தது முதல் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் கிடைக்கும் லாபத்தில் இரண்டு சதவிகித லாபம் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்துக்குக் கிடைக்கிறது" என்று கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tasmac-liquor-sell-in-rs31243-crore-loss-what-is-the-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக