Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

`தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி உருவான வரலாறு' - சிறப்புப் பகிர்வு!

``தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்" என்ற கோரிக்கை தீவிரமாக வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை, மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகாவைப் போல, தமிழ்நாட்டுக்கும் தனிக்கொடி ஒன்றை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர். இந்த நேரத்தில், தமிழ்நாட்டுக் கொடி பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமாகப் பரிணமித்து வந்த வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும்!

மூவேந்தர்களின் கொடி

தமிழ்நாட்டுக்கென தனிக்கொடிகள் உருவான காலமும், அவை கடந்து வந்த வரலாற்றுப்பாதையும்:

* அகண்ட தமிழ்நாடானது மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்தில் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என மூன்று நாடுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அவற்றுள் சேரநாட்டின் கொடியாக வில் அம்பும், சோழநாட்டின் கொடியாகப் பாயும் புலியும், பாண்டிய நாட்டின் கொடியாக இரட்டை மீன்களும் தனித்தனியே தமிழர் கொடிகளாகப் பறந்தன. அதன்பின்னர், களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், வெள்ளையர்கள் உள்ளிட்ட அந்நிய நாட்டு மன்னர்களின் ஆட்சிகளால், தமிழ் மன்னர்களான மூவேந்தர்களின் கொடிகள் பல நூற்றாண்டுகளாகத் தனது இடைக்கால வரலாற்றை இழந்தது. ஆனால், மீண்டும் 20-ம் நூற்றாண்டில் தனது வரலாற்றை எழுதத்தொடங்கியது.

* 1938-ம் ஆண்டு, சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் இந்திமொழியைக் கட்டாயமாக்கினார். அதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள், நீதிக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிரமான இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர். அந்தப் போராட்டத்தில், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களின் கொடிச்சின்னங்களான வில், புலி, மீன் கொடிகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட, ஒற்றைக்கொடியே `தமிழ்க்கொடி'யாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1938- மொழிப்போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி

குறிப்பாக, 1939-ம் ஆண்டிலும் தொடர்ந்த அந்தப் போராட்டத்தில், 14 வயது சிறுவனாகக் கலந்துகொண்ட கருணாநிதி, இந்தத் தமிழ்க்கொடியைத்தான் கையில் ஏந்திச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.பா. ஆதித்தனார்

* 1942-ம் ஆண்டில் `தமிழ் ராச்சியக் கட்சி'யைத் தொடங்கிய சி.பா. ஆதித்தனார் `தமிழப்பேரரசு' என்ற நூலை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டு இலச்சினையாக மூவேந்தர்களின் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார். பின்னர் 1957-ம் ஆண்டு தனது கட்சியை `நாம் தமிழர்' இயக்கமாகப் பெயர்மாற்றி 1958-ல் `சுதந்தரத் தமிழ்நாடு' மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டிலும் மூவேந்தர்கள் கொடி பயன்படுத்தப்பட்டதாக மூத்த அரசியல் ஆர்வலர்கள் பலராலும் கூறப்படுகிறது.

* 1946-ம் ஆண்டில் `தமிழரசுக் கழகம்' என்ற இயக்கத்தை ம.பொ.சி தொடங்கினார். தனது இயக்கத்தின் கொடியாக ஒன்றிணைந்த மூவேந்தர்களின் கொடியையே பயன்படுத்தியிருக்கிறார். அதேபோல, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள் என்றிருந்த சென்னை மாநகராட்சிக் கொடியை மாற்றியமைத்து, மூவேந்தர்களின் 'வில், புலி, மீன்' சின்னங்கள் அடங்கிய கொடியை, சென்னை மாநகராட்சியின் புதிய கொடியாக ம.பொ.சி பறக்கவிட்டார்.

ம.பொ.சி. வடிவமைத்த சென்னை மாநகராட்சிக் கொடி

* 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில், கோவை விவசாயக் கல்லூரி மாணவர் ராமசாமி தலைமையில் அதிக அளவில் மாணவர்கள் அணிதிரண்டனர். பேரணியாகக் கோவை வ.உ.சி. மைதானத்துக்குச்சென்ற அவர்கள், தங்கள் கைகளில் வைத்திருந்த, தமிழ்நாடு வரைபடம் அடங்கிய ஒரு கொடியை, `தமிழ்நாட்டுக் கொடியாக' மைதானத்தில் ஏற்றினார்கள். பின்னர், `தமிழ்நாடு வாழ்க' எனக் கோஷமிட்டு தங்களின் தமிழ் உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

1970-களில் கருணாநிதி அறிமுகப்படுத்தியக் கொடி

* 1970-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, `மத்தியில் கூட்டாட்சி...மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி வேண்டும் எனப் பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்து கோரிக்கை முன்வைத்தார். அப்போது, டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தான் வடிவமைத்து வைத்திருந்த தமிழ்நாட்டின் கொடியை அறிமுகப்படுத்தினார்.

Also Read: ``ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்; விரைவில் அரசாணை!’’ - முதல்வர் ஸ்டாலின்

கொடியுடன் கருணாநிதி

அந்தக்கொடியின் வலது மேற்புறத்தில் இந்தியத்தேசியக் கொடியும், இடது கீழ்ப்பகுதியில் தமிழகத்தின் இலச்சினையான கோபுர முத்திரையும் இடம்பெற்றிருந்தது. பின்னர், இந்த கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

* 1980-களில் `சாதி ஒழிப்பே...தமிழ்நாடு விடுதலை' எனக்கூறி ஆயுத வழியில் போராடிய தமிழரசனின் `தமிழ்நாடு விடுதலைப் படை' அமைப்பு சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் ஐந்து நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு கொடியைத் தமிழ்நாட்டுக் கொடியாகப் பறக்கவிட்டது.

தமிழ்நாடு விடுதலைப்படை கொடி

* 1990-களின் பிற்பகுதியில், தமிழ்நாடு விடுதலைப் படை பயன்படுத்திவந்த தமிழ்நாட்டுக் கொடியில், ஏறுதழுவுதல் இலச்சினையையும் சேர்த்து, தமிழ்நாட்டுக்கொடியாக வீரப்பனால் காட்டுக்குள் பறக்கவிடப்பட்டது.

கொடியுடன் வீரப்பன்

* 2010-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் `தமிழர் இறையாண்மை மாநாட்டை' நடத்தினார். அந்த மாநாட்டில் சிவப்பும், மஞ்சளும், நீலமும், நட்சத்திரமும் கொண்டு வடிவமைக்கப்பட்ட கொடியை, `தமிழ்நாட்டுக் கொடியாக' அறிவித்து, திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியின் கைகளால் வெளியிட்டார்.

தொல்.திருமாவளவனால் `தமிழர் இறையாண்மை மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி

* 2016-ம் ஆண்டு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உருவாக்கிய `நாம் தமிழர் கட்சி செயற்பாட்டு வரைவு' ஏட்டில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் அடங்கியகொடி தமிழ்நாட்டின் கொடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நீலநிறம் கொண்ட அந்தக் கொடியில் `வெல்க தமிழ்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. அதன்பின்னர், ஜல்லிக்கட்டுப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட போராட்டங்களில் இந்தக்கொடி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

* 2018-ம் ஆண்டு `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' என்ற அமைப்பின் சார்பில், சிவப்புநிறக்கொடியின் நடுவே மஞ்சள் நிறப் பின்புலத்தில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்த கொடி `தமிழ்நாட்டுக் கொடியாக' வெளியிடப்பட்டது.

சீமானின் நாம் தமிழர் கட்சியால் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டுக்கொடி

* 2019-ம் ஆண்டு, தமிழ் உணர்வாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு, நவம்பர் 1-ம் தேதியை `தமிழ்நாடு' நாளாக அறிவித்தது. மேலும், அந்த நாளை அரசு விழாவாகவும் அறிவித்து அரசாணையும் வெளியிட்டது.

தமிழ்நாடு நாள் விழா அழைப்பிதழ்

* அதனைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டு `பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' சார்பில் `வெள்ளைக்கொடியில் சிவப்பு தமிழ்நாடு வரைபடம்' அடங்கிய கொடி ஒன்று தமிழ்நாட்டுக்கொடியாக வடிவமைக்கப்பட்டது. அதை, பொழிலன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர். பின்னர், நவம்பர் 1-ம் நாள் அந்தக்கொடி ஏற்றப்பட்டு தமிழ்நாடு நாளும் கொண்டாடப்பட்டது. அதேபோல், நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகள் மூவேந்தர் கொடியைத் தமிழ்நாட்டுக் கொடியாக அந்த நாளில் ஏற்றிக் கொண்டாடினர்.

தமிழ்நாடு நாள் விழா - நாம் தமிழர் கட்சி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், அரசுகள் தங்களுக்கென தனித்தனியே கொடிகளை அடையாளப்படுத்தி, ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அதேபோல, ``தமிழ்நாட்டுக்கும் கட்சி சார்பற்ற நிலையில் ஒரு பொதுவான கொடியை அரசே வடிவமைத்து, வெளியிடவேண்டும்" என பெரியாரிய உணர்வாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்திவருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-the-discussion-on-tamilnadu-flag

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக