Ad

செவ்வாய், 26 அக்டோபர், 2021

பிரதமர், அமைச்சர்களுக்குச் சிறை; ராணுவ வசம் ஆட்சி; என்ன நடக்கிறது சூடானில்?

வட ஆப்பிரிக்கா பகுதியில் அமைந்திருக்கிற ஒரு நாடு சூடான். பரப்பளவில் அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய நாடுகளில் சூடனும் ஒன்று. வடக்கில் எகிப்தும், கிழக்கில் எரித்திரியாவும்,தெற்கில் தென் சூடானும், மேற்கில் சாட் நாடும் சூடானின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த நாட்டில் நைல் நதியும் பாய்கிறது. மிகவும் தொன்மையான நாகரிகங்களைக் கொண்ட ஒரு நாடு சூடான். இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள்.

சூடான்

பிரிட்டனின் ஆட்சியின்கீழ் இருந்துவந்த சூடான் கடந்த 1956-ம் ஆண்டு விடுதலை பெற்றது. இருந்தபோதிலும், அன்று தொட்டு இன்று வரை பல்வேறு ராணுவ புரட்சிகளைச் சந்தித்திருக்கிறது சூடான். 1989-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சூடானின் அதிபராகப் பதவி வகித்த ஒமர் அல்-பஷீரின் பதவி, ஒரு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமே பறிக்கப்பட்டது. இங்குள்ள ஒரு தரப்பு மக்கள் ராணுவ ஆட்சியையும், மற்றொரு தரப்பு மக்கள் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியின் ஆட்சியையும் விரும்புகின்றனர்.

தற்போது சூடானின் பிரதமராக அப்தல்லா ஹம்தோக் (Abdalla Hamdok) பதவி வகித்து வருகிறார். சூடானில் சமீப காலமாக நடைபெற்றுவரும் இடைக்கால ஆட்சிக்கு எதிராக ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட நடைபெற்றுவரும் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவம் முயற்சி செய்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. இந்த நிலையில்தான், சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் கூட்டு ராணுவப்படைகள் மூலமாகக் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக சூடான் அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

அப்தல்லா ஹம்தோக்

அதுமட்டுமல்லாது, ராணுவம் சூடானின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாகக் கிழக்கு சூடானில், ராணுவத்தினர் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு அத்துமீறல்களைச் செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவம் சமீபத்தில் அங்கு நடைபெறும் அரசைக் கவிழ்க்க மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக, பொதுமக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்த பிரதமர் அப்தல்லா ஹம்தோக் அந்த நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்துதான் பிரதமர் கைது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

சூடானின் தலைநகரான கார்தூம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ராணுவ ஆட்சியை எதிர்த்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி போராட்டத்தில் ஈடுபடும் மக்களின்மீது ராணுவத்தினர் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும். இதுவரை 5-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நாட்டில் ராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. நாட்டின் பெண்கள், பல்வேறு போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சி வேண்டாம் என்று தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். அந்த நாட்டில் இணையச் சேவை, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

சூடான்

இந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து பல்வேறு உலக நாடுகளும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள, பிரதமர் அப்தல்லா ஹம்தோக், அமைச்சரவை உறுப்பினர்கள், அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள், பிரதமரின் குடும்ப உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா சபை, அமெரிக்கா, பிரிட்டன், ஆப்பிரிக்க யூனியன், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பலரும் வலியுறுத்தியிருக்கின்றனர். மேலும், அங்கு நிலவும் சூழல் காரணமாக சூடானுக்கு அமெரிக்க வழங்குவதாக இருந்த நிதி உதவியையும் நிறுத்தியிருக்கிறது.

Also Read: உள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்கடி - ஆட்சியைக் கலைத்தார் சூடான் அதிபர்!

பிரதமர் பதவியிலிருந்து, ஒமர் அல் பஷீர் பதவியிலிருந்து வெளியேறிய பின்னர், சிவில் தலைவர்கள் மற்றும் ராணுவத் தலைவர்கள் ஒரு அதிகார உடன்படிக்கை ஏற்படுத்தி நாட்டை நடத்தி வந்தனர். ஆனால் அந்த உடன்படிக்கையைமீறி தற்போது ராணுவம் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சிக் கவிழ்ப்பு செய்த தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபடாஹ் புர்ஹான்(Abdel Fattah al-Burhan), ``புரட்சி பாதையைத் திருத்தவும், அரசியல் சண்டையின் காரணமாகவும், இந்த அதிகார கைப்பற்றல் அவசியமாகிறது" என்று கூறியிருக்கிறார்.

அப்தெல் ஃபடாஹ் புர்ஹான்

சூடான் ராணுவம், செய்துகொண்ட உடன்பாட்டை மீறி நாட்டை கைப்பற்றியிருக்கிறது. இந்த முடிவைக் கைவிட்டு, இரண்டு பிரிவினர்களும் அமர்ந்து பேசி சுமுகமான முடிவை எடுக்க வேண்டும். மேலும், சூடானின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவேண்டும். பிரதமர், அரசியல் தலைவர்கள் என கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதே வேளையில், அந்த நாட்டு மக்களும் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த நாட்டில் அமைதி திரும்புவது இனி ராணுவத்தின் கைகளில்தான் இருக்கிறது. என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/international/sudans-prime-minister-arrested-by-military-in-rule

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக