Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

சர்வைவர் - 46: "நமக்கு சோறுதான் முக்கியம்!"- பதற்றப்படுத்திய ஐஸ்வர்யா, மேன் ஆஃப் தி மேட்ச் இனிகோ!

ரிவார்ட் சேலன்ஞ்சிற்காக இன்று நிகழ்ந்த போட்டி உண்மையிலேயே படு சுவாரஸ்யம். நம் அட்ரினலை சுரக்கவைத்து இருக்கையின் நுனியில் அமர வைத்தது. அந்த அளவிற்கான விறுவிறுப்பு. ஒரு போட்டியின் முடிவு கடைசி நொடியில் கூட தலைகீழாக மாறலாம் என்பதற்கான பரவச உதாரணம் இந்த எபிசோடில் நிகழ்ந்தது.

‘வாழ்வா... சோறா...’ என்கிற நிலையில் வேடர்கள் மிக உத்வேகமாக இந்தப் போட்டியில் ஈடுபட்டார்கள். மிக குறிப்பாக இனிகோவின் உழைப்புதான் இந்த வெற்றியை அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இனி, இனிகோ வேடர்களின் ஓர் அங்கம் என்கிற முக்கியமான மாற்றம் ஏற்படுவதற்கும் இந்த வெற்றி ஒரு காரணமாக அமையலாம்.

வாவ்! என்னவொரு போட்டி? இரு அணிகளையுமே இதற்காக பாராட்டியாக வேண்டும்.

சர்வைவர் 46-ம் நாளில் என்ன நடந்தது?

“தூக்கத்துல என் போர்வையை இழுத்துட்டான். மறுபடியும் நான் பிடுங்கிட்டேன்” என்று இனிகோவைப் பற்றி நாராயணன் கிண்டலாக சொல்லிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் சிரித்தார்கள். இனிகோ அப்போது அங்கு இல்லை. இனிகோ வேடர்கள் அணியில் இன்னமும் ஓர் அந்நியர்தான் என்பதற்கான உதாரணக்காட்சி இது. மேற்பார்வைக்கு வெறும் கிண்டலாகத் தோன்றலாம். அதனுள் இருக்கிற சப்-டெக்ஸ்ட் இதுதான்.

சர்வைவர்

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல அங்கு இருக்கிற குறைந்தபட்ச வசதிகளை வைத்துக் கொண்டு சமோசா என்னும் பெரிய லக்ஸரி அயிட்டத்தை செய்ய முற்பட்டார் லட்சுமி. அவர் செய்திருந்தது எப்படி இருந்ததோ, ஆனால் அப்படியொரு சிக்கனமான சூழலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வறுத்த உணவை சாப்பிடுவதில் காடர்கள் மகிழ்ந்தார்கள்.

பிறகு காடர்களை உரையாடலுக்கு அழைத்த லட்சுமி, “உங்க அணி ஒற்றுமை பற்றி எனக்குத் தெரியும். என்ன இருந்தாலும் 4+1 ஆகத்தான் என்னைப் பார்ப்பீங்க... ஆனா நான் வேண்டி கேட்டுக்கறது என்னன்னா... என்னையும் உங்க அணில சேர்த்துக்குங்க” என்று வேண்டுகோள் வைத்தார். லட்சுமியின் இந்தக் கோரிக்கை ஒருவகையில் நியாயமானதுதான். ஆனால் காடர்களின் எதிர்வினை வேறு மாதிரியாக இருந்தது.

இந்த ‘பழைய அணி, புதிய நபர்’ என்கிற கான்செப்ட் ஓர் அணிக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்தும். இவர்கள் என்ன, பிறந்ததில் இருந்தே காடர்களாகவா இருக்கிறார்கள்? இது சர்வைவர் உருவாக்கிய அணிதானே? இதில் நிகழும் மாற்றங்களையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் தனது அணிக்கு எத்தனை முக்கியம் என்பதைத்தான் முக்கியமாக பார்க்க வேண்டும். ‘முதலில் இருந்தே இருப்பவர்’ என்கிற காரணத்திற்காக மிக்சர் சாப்பிடுபவர்களை அப்படியே வைத்து பாதுகாக்கக்கூடாது. வனேசாவும் புதிய நபர்தான். அவரை ஏற்றுக் கொள்ளவில்லையா?

“இந்த 4+1 கான்செப்ட்டையெல்லாம் தூக்கி குப்பைல போடுங்க” என்று உமாபதி சொன்னது அராஜகமான பதில். ஆனால் லட்சுமியின் தந்திரத்தையும் கூடவே அவர் உடைத்துப் போட்டார். “அம்ஜத் இருந்தபோது கூட அவங்க கேட்டிருந்தா கூட ஓகே... இப்ப அவங்க இம்யூனிட்டி ஐடலையும் உபயோகிச்சிட்டாங்க. இப்ப வந்து கேட்கறது தந்திரமா இருக்கு” என்பது உமாபதியின் பார்வை. “ஓ... இதுக்குத்தான் நீ சமோசால்லாம் சுட்டுக் கொடுத்தியா... இப்பத்தான் புரியுது” என்பது போல சிந்தித்தார் உமாபதி.

சர்வைவர்

“வர்ற இம்யூனிட்டி சேலன்ஞ்சில் தோத்துட்டு இவங்களை முடிச்சிவுடுவோம்” என்று லட்சுமியைப் பற்றி பிறகு கிண்டலாக உமாபதி சொன்னது, ஒருவேளை நகைச்சுவைக்காகவே என்றாலும் கூட அபத்தமானது. இந்தச் சிந்தனை அணியின் ஆழ்மனதில் படியக்கூடாது. இதேபோல்தான் முன்னர் ராமைப் பற்றி விஜி சொன்னார். ‘தங்கள் அணி தோற்றாலும் கூட பரவாயில்லை. பிடிக்காதவர்களை வெளியேற்றுவோம்’ என்கிற காடர்களின் அணுகுமுறை ரசிக்கத்தக்கதாக இல்லை.

வேடர்கள் அணியில் தலைவர் ஐஸ்வர்யா எழுச்சியுரை ஆற்றிக் கொண்டிருந்தார். "மக்களே. நாம ஜெயிச்சாதான் சோறு. இல்லைன்னா அதே பப்பாளியைத்தான் சாப்பிடணும்...” என்பதுதான் அந்த உரையின் சாரம்.

‘களத்திற்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று வரவேற்றார் அர்ஜுன். பளிச்சென்ற அழகான வெயிலில் தீவின் அற்புதமான இயற்கைப் பின்னணியைப் பார்ப்பதற்கே அத்தனை ஆசையாக இருந்தது. இயற்கையிடம் இருந்து இத்தனை தூரம் விலகி மனிதன் தன்னை கான்கீரிட் காட்டில் பதுக்கிக் கொண்டு அதுதான் நாகரிகம் என்று நினைக்கிறான்... எத்தனை பெரிய அபத்தம்?!

"எனக்கு சமோசா கொண்டு வரலையா?” என்கிற கிண்டலுடன் உரையாடலை ஆரம்பித்தார் அர்ஜுன். “ஐஸ்வர்யா... இனிகோவோட என்ன தகராறு?” என்று அடுத்த கிண்டலை வேடர்களை நோக்கி எறிந்தார். “அடுத்தவேளை சோத்துக்கு என்ன வழியைப் பார்க்கணும்னு யோசிக்காம பழைய கதைகளையே பேசிட்டிருந்தாங்க. நொந்துட்டேன்" என்று இனிகோ சொல்ல, அந்தப் பக்கத்தில் காடர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சேம் சைட் கோல் போட்டு தங்கள் அணியை சங்கடப்படுத்துவதில் இனிகோ வல்லவராக இருக்கிறார். பழைய கதையை பேசுவது நேர விரயம் என்று இனிகோ சொல்வது ஒருவகையில் சரிதான். ஆனால் பழைய தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

“ஓகே... போட்டிக்குப் போகலாமா?” என்று விதிமுறைகளை விளக்க ஆரம்பித்தார் அர்ஜூன். இதில் நிறைய சாகசம் நிகழ வாய்ப்பில்லை என்றாலும் பொறுமையை நிறைய சோதிக்கும் போட்டியாக இருந்தது. “ச்சே... கருமம்... இப்படியா ஒரு போட்டியை வைப்பாங்க?!” என்று நமக்கே திணறிவிட்டது.

சர்வைவர்

முதலில் ஒரு உறுதியான மரக்கட்டையை வெட்டி வீழ்த்தி வேண்டும். அதன் மூலம் கயிறு ரிலீஸ் ஆகி எட்டு மரப்பெட்டிகள் கீழே விழும். அதில் இரண்டு பெட்டிகளை, நான்கு முனைகளில் கயிறு கட்டப்பட்ட பலகையின் நடுவில் வைக்க வேண்டும். நான்கு பேர் அதைப் பிடித்துக் கொண்டு சில தடைகளை கடக்க வேண்டும். பிறகு அந்த இரண்டு பெட்டிகளையும் இன்னொரு பீடத்தில் கவனமாக அமர்த்த வேண்டும். இப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக சென்று எட்டு பெட்டிகளையும் கொண்டு வந்துவிட்டால் முதல் நிலை ஓவர்.

அதன் பிறகு சவுக்குக் கட்டைகளை ரிலீஸ் செய்து வலையின் மேல் வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு எட்டு மரப்பெட்டிகளை கட்டையினால் குத்திக் குத்தி கீழே விழவைக்க வேண்டும். இப்போது மொத்தமுள்ள 16 பெட்டிகளையும் அடுக்கி அது ஐந்து எண்ணும் வரை கீழே விழாதவகையில் அடுக்கினால் வெற்றி. (ஹப்பாடா! எழுதற எனக்கே மூச்சு வாங்குது!).

முதல் நிலையிலேயே காடர்கள் அணி மிகவும் பின்தங்கியது. மரத்துண்டை வெட்ட வந்த உமாபதி என்னதான் ஆவேசமாக வெட்டினாலும் அது போதிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் வேடர்கள் அணியைச் சேர்ந்த இனிகோவிற்கு மரம் வெட்டி பழக்கம் உள்ளதால் விரைவில் வெட்டிவிட்டார். உமாபதி செய்த தவறு என்னவெனில் ஃபோகஸ் செய்து ஒரே பக்கமாக ஆழமாக வெட்டாமல் பதற்றத்தில் பரவலாக வெட்டியதால் பின்னடைவு ஏற்பட்டது. பிறகு இதை நேர்மையாக ஒப்புக்கொண்டார் உமாபதி என்றாலும் “பேச்சாடா பேசின... ஆட்டமாடா... ஆடின…” என்றுதான் நமக்கு மைண்ட் வாய்ஸில் வந்தது.

ஆக… மரத்துண்டை இனிகோ முதலில் வெட்டியதின் மூலம் 8 பெட்டிகளை ரீலீஸ் செய்யும் நிலையில் வேடர்கள் முன்னணியில் இருந்தார்கள். அடுத்த நிலைதான் மிகவும் சிரமமானது. இரண்டு பெட்டிகளை நடுவில் வைத்து நான்கு முனைகளில் நால்வர் பிடித்து ஊர்வலமாக தூக்கிச் செல்ல வேண்டும். மிக ஒத்திசைவுடன் நால்வரும் ஒரே சிந்தனையுடன் நிகழ்த்த வேண்டிய போட்டி இது. மரப்பாலத்தைக் கடப்பது மட்டுமல்லாமல், மரக்கட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கும் தடைகளைக் கடக்க வேண்டும்.

சர்வைவர்

இதில் பாலத்தை நந்தா கடக்கும்போது கீழே கால்பட்டு விட்டதால் மறுபடியும் முதலில் இருந்து துவங்க வேண்டியதாக இருந்தது. மிக மிக கவனமாகவும் நிதானமாகவும் ஒத்திசைவுடனும் செயல்பட வேண்டிய இந்தப் போட்டியில் ஐஸ்வர்யா அவ்வப்போது காச்மூச் என்று கத்திக் கொண்டிருந்தார். அத்தனை விளையாட்டு வெறி அவருக்கு. அவருடைய குணாதிசயம் தெரிந்த வேடர்கள், ‘பொறுமை... பொறுமை…’ என்று ஐஸ்வர்யாவிற்கு வலியுறுத்தினார்கள்.

வேடர்கள் முதல் செட்டை முடித்துவிட்டு இரண்டாவது செட்டிற்காக ஓடினார்கள். இப்போதுதான் உமாபதியால் மரத்துண்டை வெட்டி முடிக்க முடிந்தது. எனவே அவர்களும் முதல் செட்டை ஆரம்பித்தார்கள். வேடர்கள் தூக்கி வருவதைக் கவனித்து கற்றுக் கொண்டார்களோ, என்னமோ, காடர்கள் மிக லாகவமாக பெட்டியை தூக்கி வந்தார்கள். இவர்கள் இரண்டாவது செட்டை தூக்கிவரும் போது நந்தாவைப் போலவே விக்ராந்திற்கும் நடந்தது. இவர் காலை கீழே வைத்துவிட்டதால் மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. காடர்களில் லட்சுமியும் வனேசாவும் உயரமாக இருந்ததால் ஒத்திசைவில் பிரச்னை இருந்தது.

ஆனால் காடர்களை சும்மா சொல்லக்கூடாது. மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் மளமளவென ஈடுபட்டு ஒரு கட்டத்தில் வேடர்களுக்கு சமமான நிலைக்கு வந்துவிட்டார்கள். பிறகு வேடர்களுக்கு முன்பே எட்டு பெட்டிகளையும் சேர்த்து விட்டு அடுத்த நிலைக்கு நகர்ந்துவிட்டார்கள். வேடர்கள் அப்போதுதான் நான்காவது செட்டில் இருந்தார்கள். முயல் – ஆமை கதை போல வேடர்களுக்கு மீண்டும் அதேபோன்ற துரதிர்ஷ்டம் தொடர்ந்து நிகழுமோ என்று தோன்றிவிட்டது.

விக்ராந்த்தும் உமாபதியும் வலையை ஆவேசமாக குத்தி அடுத்த 6 பெட்டிகளை கீழே விழச் செய்வதில் மும்முரமாக இருந்தார்கள். மிகவும் சிரமப்பட்ட வேடர்கள் அணியும் இப்போது அடுத்தக் கட்ட நிலைக்கு நகர்ந்தது. ஆரம்ப நிலையில் மரத்துண்டை வெட்டி லீடிங்கிற்கு வழி ஏற்படுத்திய இனிகோ, இப்போது மீண்டும் களத்தில் ஆவேசமாக இறங்கினார். இவர் மேலே வலையில் இருந்த பெட்டிகளை ஆவேசமாகக் குத்தியதில் அனைத்துமே விரைவில் கீழே வந்து விழுந்தன.

சர்வைவர்

எனவே மீண்டும் இரு அணிகளும் சமமான நிலைக்கு வந்து சேர்ந்தன. இப்போது சேர்த்து வைத்த 16 பெட்டிகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். ஏறத்தாழ இரண்டு ஆட்களின் உயரத்திற்கு மேலே இருப்பதை எப்படி அடுக்குவது? இந்தச் சமயத்தில்தான் போட்டியாளர்களின் சமயோசிதத்தையும் உழைப்பையும் பாராட்ட வேண்டியிருந்தது. இவர்கள் யாரும் professionals இல்லை. என்றாலும் ஒருவரின் மீது தோள் மீது ஏறி நின்று பெட்டிகளை அடுக்குவதில் இவர்கள் காட்டிய சாகசம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. விக்ராந்தின் தோளில் ஏறிய லட்சுமி, மிகவும் போராடி பெட்டிகளை அடுக்கினார். ஒரு கட்டத்தில் அவர் அடுக்கப்பட்ட பெட்டிகளின் மேலேயே விழுந்து விடுவாரோ என்று கூட தோன்றிவிட்டது. அந்த அளவிற்கான தடுமாற்றம் அவரிடம் தென்பட்டது.

‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்’ என்பது போல் வேடர்கள் பெட்டிகளை அடுக்குவதில் முன்னணிக்கு வந்து விட்டார்கள். நாராயணன் நான்கு பெட்டிகளை ஒன்றாக இணைத்து தூக்கி வந்தது நல்ல டைமிங். ஒரு சிறு சமயோசித காரியம் கூட வெற்றிக்கு எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தியது. வேடர்களின் இந்த அசாதரணமான உழைப்பிற்கு அற்புதமான ‘பைனல் டச்’-ஐ தந்தார் சரண். இவரின் சமயோசித ஐடியாதான் வெற்றிக்கு உத்தரவாதத்தை தந்தது. பெட்டிகளை ஒரே மாதிரியான நேர்கோணத்தில் அடுக்காமல், கடைசி இரண்டு பெட்டிகளை மட்டும் சற்று தள்ளி வைத்தது சரணின் புத்திசாலித்தனம். இது Calculated risk-தான். ஆனால் காற்று அடிக்கும் திசைக்கு இணங்க அவர் அடுக்கை சற்று தள்ளிவைத்தது சிறந்த யோசனை.

அர்ஜுன் ஐந்து எண்ணி முடிக்கும் வரை பெட்டிகள் தள்ளாடின. எங்கே கீழே விழுந்து தொலைத்துவிடுமோ என்று நமக்கே அத்தனை பதற்றம். அர்ஜுன் ஐந்து எண்ணும் வரை பெட்டிகள் தாக்குப்பிடித்ததால்... யெஸ்... வேடர்கள் இந்த ரிவார்ட் சேலன்ஞ்சில் வெற்றி பெற்றார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு அடைந்த வெற்றியின் மூலம் 'சோறு’ கிடைக்கும் என்பதால் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

இந்தப் போட்டி துவங்கிய சமயத்தில் இருந்தே வேடர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று பலரும் நினைத்திருக்கலாம். பாவம், அந்தளவிற்கு தொடர் தோல்விகளாலும் சாப்பாட்டுப் பிரச்னையினாலும் அவதிப்பட்டுவிட்டார்கள்.

இந்தச் சமயத்தில் இனிகோ சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. “நான் காடர்கள் அணிக்கு விருந்திற்கு போனப்ப “உன்னால சர்வைவர் ஷாப்பிங்லாம் பார்க்கவே முடியாது’ன்னு உமாபதி கிண்டல் பண்ணான். அப்பவே ஒரு மாதிரி இருந்தது. அடுத்த தடவை பாரு... நாங்க தூக்கறோம்னு நெனச்சிக்கிட்டேன். அது உண்மையாயிடுச்சு” என்று இனிகோ சொல்வதின் மூலம் வேடர்களின் அணியின் மீது அவருக்கு தன்னிச்சையான ஈடுபாடு வந்துவிட்டது என்பது புரிந்துவிட்டது. இனியும் அவரை சந்தேகப்படுவதில் அர்த்தமில்லை.

சர்வைவர்

கவனமாகவும் நிதானமாகவும் கடக்கவேண்டிய பாதைகளில் ஐஸ்வர்யா கத்தி பதற்றம் ஏற்படுத்தியதைப் பற்றி கிண்டலடித்தார் அர்ஜுன். “ஒருவேளை உங்களுக்கு பரிசு சாப்பாடா இல்லாம வேற ஏதாவது இருந்தா என்ன பண்ணுவீங்க?” என்று அர்ஜுன் சீண்ட முயல “அய்யோ... சோறுதான் சார் முக்கியம்’ என்று வேடர்கள் கதறினார்கள். “ஓகே... உங்களுக்கு பெப்பர் சிக்கன், ஃபிஷ் கறி–ன்னு நெறய அயிட்டம் இருக்கு” என்றதும் வேடர்கள் உற்சாகத்தில் குதித்தார்கள். “சார்... நான் வெஜிடேரியன்… தயிர் சாதம் மட்டும்தானா?” என்று குழந்தை போல் சிணுங்கிய ஐஸ்வர்யாவைப் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.

“சார்... காடர்களில் ஒருவரை விருந்திற்குக் கூப்பிடலாமா... அதுதானே நம் கலாசாரம்?” என்று இனிகோ கேட்டதோடு எபிசோட் நிறைவடைந்தது.

அடுத்து வரும் இம்யூனிட்டி சவால் இரண்டு அணிகளுக்குமே முக்கியம். அதில் வெற்றி பெறுவதைப் பொறுத்து ஆட்டத்தின் போக்கே மாறக்கூடும். என்ன நடக்கும்?

பார்த்துடுவோம்.



source https://cinema.vikatan.com/television/survivor-46-vedargal-finally-won-an-immunity-challenge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக