கிராமத்தைச் சேர்ந்தவரோ அல்லது நகரத்தைச் சேர்ந்தவரோ, யாராக இருந்தாலும் இந்த உலகில் நூறு சதவிகித நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. மனிதன் என்பவன் இவற்றின் கலவைதான். ஆளுக்கேற்ப சதவிகிதம் மாறும். ‘கடவுள் பாதி... மிருகம் மீதி’.
பிக் பாஸில் மட்டுமல்ல, உலக நடைமுறையில் கூட ஒருவரை இவர் நல்லவர், அல்லது இவர் கெட்டவர் என்று நாம் கண்மூடித்தனமாக ஸ்டாம்ப் குத்தி விட முடியாது. காட்சிகள் மாறும்போது கோலங்களும் மாறும். நல்லவராகத் தோற்றமளித்தவரின் வேறு கோணங்கள் பிறகு தெரியும். கெட்டவராகத் தெரிந்தவரின் உள்ளே இருக்கும் நற்பண்புகள் வெளியே வரும். ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று `திருமலை' விஜய் சுருக்கமாகச் சொன்ன தத்துவம் இதுவே.
இந்த நோக்கில் இமான் மற்றும் தாமரையின் வேறு சில பக்கங்களை நேற்றைய எபிசோடில் காண முடிந்தது. அல்லது எடிட்டிங் டீம் அப்படியாக நிகழ்ச்சியை சமைத்து வைத்திருந்தார்கள். பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை எடிட்டிங் டீம்தான் கடவுள். அவர்களால் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும்.
மறுபடியும் அதே பாடம்தான். எவரையும் கண்மூடித்தமாக ஆதரிக்காதீர்கள் அல்லது வெறுக்காதீர்கள். நாம் மேலோட்டமாகக் காணும் காட்சிகளுக்குப் பின்னால் பல்வேறு கோணங்கள் இருக்கலாம்.
எபிசோட் 26-ல் என்ன நடந்தது?
பிக் பாஸ் வீட்டில் வாரத்திற்கு ஒரு தலைவர் என்பதே இதுவரையான மரபு. ஆனால் இம்முறை கூடுதல் தலைவர் பதவியை ஏற்படுத்தி கலகத்தைத் துவங்கிவிட்டார் பிக் பாஸ். ‘நெருப்பு’ நாணயத்தை வைத்திருந்த இசைக்கு கிச்சன் ஏரியா பொறுப்பு என்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் “வீட்டை முழுமையாக கட்டுப்பாடு செய்யலாம். தான் விரும்புகிற வேலைகளை மற்றவர்களை செய்யச் சொல்லலாம்’ என்று கூடுதல் அதிகாரத்தை வழங்கி கறாராக அதை அமல்படுத்தச் சொன்னார் பிக்பாஸ்.
‘ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’. மதுமிதா பிள்ளைப்பூச்சிதான். என்றாலும் அதற்குள்ளும் கொடுக்கு இருக்கும்தானே? இசைதான் வீட்டைக் கட்டுப்படுத்த முடியும் என்றால் ‘என்னுடைய இடம் என்ன?’ என்கிற கேள்வி அவருக்குள் எழுந்தது இயற்கையே. மற்றவர்கள் தன் பேச்சை கேட்கவில்லை என்கிற ஆதங்கம் மதுமிதாவிற்கு ஏற்கெனவே இருக்கிறது. இந்த நிலையில் இசைக்கு அளிக்கப்பட்ட கூடுதல் அதிகாரம் மதுமிதாவிற்குள் மெல்லிய ஆட்சேபத்தை ஏற்படுத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது. மற்றவர்களைக் கட்டுப்படுத்த முயலும் இசை, தான் சொல்வதைக் கேட்கவில்லையே என்கிற நியாயமான ஆதங்கமும் மதுமிதாவிற்கு ஏற்படுகிறது.
எனவே, "மத்தவங்களை குறை சொல்றியே... நீயும்தானே என் பேச்சை கேக்காம அப்பப்ப தூங்கிடற?” என்று இசையிடம் மல்லுக்கட்டுகிறார் மதுமிதா. ஆனால், அது தற்காலிக கோபம்தான். இசை அழுவதைப் பார்த்ததும் மதுமிதாவிற்குள் இருந்த நல்லியல்பு விழித்துக் கொண்டு "சாரி... நான் அந்த மாதிரில்லாம் கத்துகிற ஆள் கிடையாது” என்று இசையிடம் மன்னிப்பு கேட்டது அருமையான காட்சி. நற்பண்புகள் நிறைந்திருக்கிற ஒருவர் தீமை என்னும் பள்ளத்தில் தற்காலிகமாக சறுக்கி விழுவார்கள். ஆனால் மனசாட்சி அவரை கை தூக்கி உதவும்போது உடனே சட்டென்று எழுந்துவிடுவார்கள். இதற்கான உதாரணக் காட்சி இது.
‘வீட்டின் தலைவர் யார்?’ என்கிற குழப்பம் வீட்டில் எல்லோரிடமும் இருக்கிறது. இது நேற்றே வெளிப்பட்டது. ‘வாக்குமூல அறையில்’ பிக்பாஸிடம் டோஸ் வாங்கி வெளியே வந்த இசை, தன் பொறுப்புகளைக் கறாராகச் சொன்னவுடன் "கிச்சன் டீமிற்கு மட்டும் நீ பொறுப்பா... இல்ல வீடு மொத்தமுமா?” என்று சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு தலைமைகளை உருவாக்குவதின் மூலம் பிக் பாஸ் கலகம் ஏற்படுத்த முயல்கிறார் என்றாலும் இன்னொரு கோணத்தில் பார்த்தால் இது இசைக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் அருமையான வாய்ப்பு. இதை தங்கத் தட்டில் வைத்து பிக் பாஸ் தருகிறார் என்றே பொருள். அனைத்து டாஸ்க்குகளிலும் நடுவர் என்பது முதல் பல முக்கியத்துவங்கள் இசைக்குக் கிடைக்கின்றன. இந்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் மேலும் பல வாரங்களுக்கு போட்டியாளராக நீடிப்பதற்கான அஸ்திவாரத்தைப் போட்டுக் கொள்ள முடியும்.
ஆனால் இசை தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக மிகவும் தத்தளிக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம். அவர் கடுமையாக நடக்க விரும்பவில்லை. மற்றவர்களிடம் தன்மையாகவே சொல்கிறார். ஆனால் அப்படியும் மற்றவர்கள் தன் பேச்சைக் கேட்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார். நன்றாகக் கவனியுங்கள். பிக் பாஸ் அதிகாரம் கொடுத்தும் கூட அதை அவர் தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தவில்லை. “எனக்கு கால் பிடிச்சு விடுங்க... என் துணிகளைத் துவைத்துக் கொடுங்க” என்றெல்லாம் துஷ்பிரயோகம் செய்யவில்லை. மாறாக “படுக்கையறையை சரியாக வையுங்கள்” என்பது போன்ற பொதுநல விஷயங்களுக்குத்தான் பயன்படுத்துகிறார்.
அது இசையாக இருக்கட்டும் அல்லது மதுமிதாவாக இருக்கட்டும், அவர்கள் இனிமையுடனோ அல்லது மெல்லிய கண்டிப்புடனோ சொன்னால் கூட பெரும்பாலும் எவரும் பின்பற்றுவதில்லை. ஆனால் இசை சொன்னவுடன் படுக்கை விரிப்புகளை சிபி, அபினய், நிரூப் போன்றோர் சரிசெய்தது ஒரு நல்ல காட்சி. ஆனால் இவை விதிவிலக்காகவே நடக்கின்றன. "நான் காயின் வெக்கற வரைக்கும் சமைக்க ஆரம்பிக்காதீங்க” என்பதை ஒரு வேண்டுகோளாகவே இசை சொல்கிறார். அவர் நினைத்திருந்தால் அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு கடுமையாக விளையாட முடியும். ஆனால் தான் வருவதற்கு முன்பே யாராவது பொருளை எடுத்திருந்தால்கூட “நான் வர்றதுக்குள்ள ஏன் எடுத்தீங்க?” என்று கேட்டுவிட்டு ‘சரி ஓகே’ என்று காயினை வைத்துவிடுகிறார்.
இசை இவ்வளவு மென்மையாக நடந்து கொள்ளும் போதே ‘சர்வாதிகாரி’ என்கிற பட்டத்தை அவர் பெறுவதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. காரணம் முன்பே சொன்னதுதான். ஒரு பெண்ணின் தலைமையை ஏற்பதில் ஆணாதிக்க சிந்தனை சமூகத்திற்கு பல மனத்தடைகள் இருக்கின்றன. அதனால்தான் அவள் சர்வாதிகாரியாக மாற வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தை நேற்றைய கட்டுரையில் எழுதியிருந்தேன். இன்று இமான் அண்ணாச்சி இதே வார்த்தையைப் பயன்படுத்தி ‘இசையை’ குற்றம் சாட்டுகிறார். இதுவே வனிதா போன்றவர்களிடம் இமான் மாட்டிக் கொண்டிருந்தால் என்னவாகியிருப்பார்?
இசைக்கும் இமானிற்கும் இடையே ஒரு மெல்லிய பனிப்போர் இருந்து கொண்டிருந்ததை அவ்வப்போது பார்த்தோம். ‘அண்ணாச்சி எதையாவது சொல்லிடறாரு. மனசுக்குக் கஷ்டமா இருக்கு’ என்று இசை ஏற்கெனவே புலம்பிக் கொண்டிருந்தார். இதே மாதிரியான புகார்களை வேறு சிலரும் சொன்னார்கள். யாரிடமாவது குறை தென்பட்டால் அதை மிக நயமான வார்த்தைகளால் சொல்வதே இமானிடம் நாம் இதுவரை பார்த்திருக்கும் ஒரு நற்பண்பு. அதில் ஏதாவது சர்ச்சை ஏற்படும் போல் தெரிந்தால் “ஓகே. மன்னிச்சுக்கங்க" என்று விலகிவிடுவதுதான் இமானின் ஸ்டைல். "இவ்வளவு ஸ்வீட்டா இருக்காரு... இவரு மேல ஏம்ப்பா பிராது கொடுக்கறாங்க?” என்று நமக்கே குழப்பமாகத்தான் இருந்தது.
ஆனால் இமானின் இந்தத் தேன் தடவிய வார்த்தைகளுக்குள் சில துளி விஷம் கலந்திருப்பதை இன்று பார்க்க முடிந்தது. “வீட்டோட தலைவர் யாரு..? உன்னோட பொறுப்பு என்ன? ரெண்டு பேரும் கலந்து பேசிட்டீங்களா..? பிக்பாஸ் என்னதான் சொன்னாரு..?” என்று விதம் விதமான கேள்விகளால் இசையை நிற்க வைத்து துளைத்தெடுத்துவிட்டார் அண்ணாச்சி. இசை நினைத்திருந்தால் இதை ‘பிக்பாஸிடம் போய் கேளுங்கள்’ என்று ஒரே வார்த்தையில் உரையாடலை துண்டித்திருக்கலாம். மாறாக இசையோ மிகப் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் "உனக்கு காயின் எப்படி வந்ததுன்னு தெரியுமா?” என்று இசையிடம் இமான் கேட்டது மிக மிக அராஜகமான கேள்வி. இதனால்தான் சொல்கிறேன், அனுதாபத்தின் மூலம் கிடைக்கும் வெற்றி என்பது தற்காலிகமானது. “நான் உனக்குப் போட்ட பிச்சைதானே?” என்று உதவி செய்தவரே ஒரு நாள் கேட்டு விடக்கூடிய அபத்தமும் அபாயமும் உண்டு. ஆனால், ஒரு சமூகத்தில் தனக்கான இடத்தைக் கோருவது என்பது சலுகையல்ல. அது உரிமை!
“தாமரையைக் காப்பாத்தப் போறோம்” என்று போராடிய கூட்டம் கூட ஒரு நாள், “என் தயவுலதானே உனக்கு காயின் வந்தது?” என்று தாமரையிடம் நிச்சயம் கேட்டு விடுவார்கள். இதை ராஜூ ஏற்கெனவே வேறு மாதிரியாகச் சொல்லி விட்டார். “நாங்க தாமரைக்கு எடுத்துக் கொடுத்த காயின்” என்று சொன்னதில பெருமிதம்தான் தெரிகிறது. இது ஒருவகையில் தாமரைக்கு வீழ்ச்சியே. "எங்க ஆட்டத்தை நாங்க ஆடிக்கறோம். நீ கிளம்பு” என்று அபிஷேக்கிடம் சொன்ன சுருதி இதனால்தான் தனித்துத் தெரிகிறார்.
இசையின் அனுமதியைப் பெறாமல் சமையல் ஏரியாவை ஆக்கிரமிக்கும் வேலையை இமான் பல முறை செய்கிறார். “ஆமாம்மா... நான்தான் அரிசி போடச் சொன்னேன்... நான்தான் பால் எடுத்தேன்” என்கிறார். இமான் மட்டுமல்ல இதே தவறை வேறு சிலரும் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். இதுவே சிபி போன்ற கண்டிப்பான ஆசாமியாக இருந்திருந்தால் இவர்கள் இதைச் செய்வார்களா? இசையிடம் குறுக்கு விசாரணை நடத்திய இமான் அண்ணாச்சி அதன் கிளைமாக்ஸில் "நீ சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கறே” என்று சொன்னதைக் கேட்டதும் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. ஒரு பிள்ளைப்பூச்சியைப் போய் டைனோசர் என்றால் சிரிப்பு வராதா?
“நானா இருக்கப் போய் உன்கிட்ட வெளிப்படையா சொல்றேன்” என்று அழுது கொண்டிருந்த இசையிடம் சென்று விளக்கம் தந்து கொண்டிருந்தார் இமான். வெளிப்படையாகச் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால் அது சரியான விஷயமாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய அதிகாரத்தை சரியாக நிறுவ முடியாமல் இசை ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார். “கொடுத்த பொறுப்பை சரியா செய்ய மாட்டீங்களா?” என்று முதலாளி பிக் பாஸ் வேறு அவ்வப்போது கூப்பிட்டு இடித்துரைக்கிறார். இந்த நிலையில் ஒருவர் என்னதான் செய்ய முடியும்? இசைக்கு ஏற்படும் இதே நெருக்கடி நாளைக்கு மற்றவர்களுக்கும் ஏற்படலாம்.
சமையல் டீமில் இருந்தாலும் தன் பொறுப்புகளை இமான் அண்ணாச்சி தட்டிக் கழிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். "பிரிட்ஜை க்ளீன் பண்ணிடுங்க” என்று இசை சொன்னதற்கு அண்ணாச்சி அளித்த விளக்கம் இருக்கிறதே?! அபாரம். சோம்பேறித்தனத்தில் ஊறியவர்தான் அப்படியொரு அட்டகாசமான சால்ஜாப்பை சொல்ல முடியும்.
அடுத்ததாக தாமரை. யாராவது பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் பேசுவதைக் கூட தாமரையின் அறியாமை அல்லது கிராமத்து குணாதிசயம் என்று சொல்லலாம். ஆனால் தவறான புரிதலுடன் தாமரை கோபம் கொள்வதை என்னவென்று சொல்வது? “நீங்க கிச்சன் டீம்ல இல்லையே. ஏன் சமைக்கறீங்க?” என்று இசை கேட்டபோது "இனிமே நான் சமைக்க மாட்டேன் சாமி... நான் உதவத்தான் போனேன்... எனக்கெதுக்கு பொல்லாப்பு?” என்று கோபம் கொள்கிறார் தாமரை. உண்மையில் சமையல் வேலையிலிருந்து தாமரையைக் காப்பாற்றுவதுதான் இசையின் நோக்கம். அதைக் கூட தாமரையால் புரிந்து கொள்ள முடியவில்லை. “போயி கம்ப்ளைண்ட் பண்ணு. தண்டனையை அனுபவிச்சக்கறேன்” என்று அநாவசியமாக எரிந்து விழுகிறார்.
அடுத்ததாக விவாத மேடை என்னும் வெட்டி மேடை ஒன்று நடைபெற்றது. என்னதான் பிக் பாஸ் வீட்டில் இறுக்கமான சூழல் ஏற்பட்டாலும், தனது நகைச்சுவையால் அந்த இறுக்கத்தை ராஜூ மிக இயல்பாக உடைத்துப் போடுவதைக் காண எப்போதுமே சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த விவாத மன்றத்திலும் ராஜூவின் சுவாரஸ்யத்தைக் காண முடிந்தது. சேம் சைட் கோல் முயன்ற தாமரையை அவ்வப்போது உட்கார வைத்தார். எதிரணியினரின் மனம் கோணாத வகையில் கருத்துக்களை இயல்பான நகைச்சுவையுடன் எடுத்து வைத்தார்.
"பூர்வீகத்தை மறந்தவர்கள் கிராமத்து மக்களா, நகரத்து மக்களா?” என்பது முதல் தலைப்பு. லாஜிக்படி பார்த்தால் அனைவருமே கிராம மக்கள்தான். நகரம் என்பதெல்லாம் பிற்பாடு உருவான சமாச்சாரம். ‘பிக் பாஸ் வீட்டு நிகழ்வுகளின்படி பார்க்க வேண்டும்’ என்பது முக்கியமான விதி.
நகரத்துவாசிகளின் ஆடை உடுத்தும் பாணி பற்றி தாமரை பேசியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. கிராமத்தவர்களின் பார்வையில் அப்படித்தான் பார்க்க முடியும். ‘தனிநபர் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், Political correctness’ என்பதையெல்லாம் அவர்கள் வந்து அடைய அவகாசம் தேவை. ஆனால் இந்த விஷயத்தை புன்னகையுடன் சுருதி எதிர்கொண்ட விதம் அற்புதம். ‘பூர்வீகத்தை மறக்காதவர்கள் நகரத்து அணியே’ என்று ஒரு மாதிரியாக தீர்ப்பு சொல்லி முடித்தார் இசை.
‘இடம் பொருள் ஏவல்’ என்பதை கவனித்து செயல்படுபவது கிராமமா, நகரமா என்பது அடுத்த தலைப்பு. இதில் பேசப்பட்டவைகளை விட்டு விடுவோம். ஒருவர் வாழும் நிலத்தின் தன்மைதான் அவரது கலாசார, பழக்க வழக்கங்களுக்கு காரணமாக இருக்கிறது. உதாரணமாகக் கிராமத்தவர்கள் ஏன் உரத்த குரலில் பேசுகிறார்கள் என்று நகரவாசிகள் நினைக்கலாம். கிராமங்களில் வசிக்கிறவர்கள் பரந்த வெளிகளில் புழங்குகிறார்கள். வயல்வெளியில் நூறு மீட்டர் தள்ளி நிற்கும் ஒருவரை “ஏ... ராமசாமி…”என்று உரத்த குரலில்தான் அழைக்க முடியும். நகரவாசிகள் குருவிக்கூடுகளில் அருகருகே வசிப்பதால் குசுகுசுவென்ற குரலில் மணிரத்னம் படம் போல் பேசிக் கொள்ள முடியும். இதுபோன்ற பல குணாதிசயங்கள் காலப்போக்கில் அப்படியே படிந்து விடுகின்றன.
‘Hugging’ பற்றி குறிப்பிட்டார் ஐக்கி. இது மேற்கத்திய கலாசாரம். மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் குளிர் பிரதேசங்கள் என்பதால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வெம்மையான உடலைத் தீண்டி முகமன் சொல்வதை ஒருவகையான குளிர்காய்தல் எனலாம். ஆனால் வெப்பம் நிறைந்த பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு இது தேவைப்படுவதில்லை. தூரமாக நின்று ‘வணக்கம்’ என்று இரு கைகளையும் கூப்பினாலே போதுமானது. நாகரிகம், கலாசாரம் என்பதெல்லாம் காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே வருவது. ஏன் சமகாலத்தில் கூட ஒரு பிரதேசத்தில் எதிர்மறையாக கருதப்படும் ஒரு பழக்கம், உலகத்தின் இன்னொரு மூலையில் இயல்பானதாக நடைமுறையில் இருக்கும். மகிழ்ச்சியிலோ, துயரத்திலோ, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அரவணைக்கும் போது Oxytocin என்கிற சுரப்பி உருவாகி ரத்த அழுத்தத்தைக்குறைக்கிறது என்கிறார்கள்.
Also Read: பிக் பாஸ் - 25 | தாமரையை ஆதரிப்பதா… சுருதியை எதிர்ப்பதா… ஏன் இந்தக் குழப்பம்?!
ஆகவே ‘இதுதான் சரியான நாகரிகம், இதுதான் சரியான பழக்கம்’ என்று எதையும் துல்லியமாக வரையறை செய்ய முடியாது. ஆனால் மனித குலத்தின் வளர்ச்சி நடைபெற்றுக்கொண்டே இருக்கும்போது ‘இது சரியாக இருக்கும்’ என்று ஒரு மையப்புள்ளியில் வந்து இணைய முயல்வார்கள்.
அடக்கம் என்கிற வார்த்தை தாமரைக்கும் சிபிக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. ஒழுக்கம் என்கிற நோக்கத்தில் தாமரை அதைப் புரிந்து கொண்டார். ஆனால் ‘வாயடக்கம்’ என்கிற ரீதியில் சிபி சொன்னதாகத் தெரிகிறது. ‘யாராவது பேசும் போது உரத்த குரலில் இடைமறித்துப் பேசும் தாமரையின் வழக்கத்தை’ சிபி குறிப்பிடுகிறார். இன்று காலையில் இமான் அண்ணாச்சிக்கும் இது தொடர்பாக தாமரையின் மீது மெல்லிய கோபம் வந்தததைப் பார்த்தோம். பல்வேறு கலாசாரங்கள் சந்திக்கும்போது ஏற்படுகிற நடைமுறைக் குழப்பத்தின் சுவாரஸ்யங்களை பிக் பாஸ் வீட்டில் பார்க்க முடிகிறது.
விவாத மன்றம் பைசாவுக்கு ஆகாத மன்றமாக மாறுவதை சகிக்க முடியாத பிக்பாஸ், இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று முடித்து வைத்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைகின்ற ஒவ்வொரு நாளின் இறுதியிலும் மெரூன் நிறத்தில் ஒரு கார்டை காட்டுகிறார்கள். நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் குறிப்பு அடங்கிய கார்ட் அது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்போதெல்லாம் அந்தக் கார்ட்தான் மிகப் பிடித்தமான பகுதியாக எனக்கு மாறிக் கொண்டு வருகிறது.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-26-isaivani-faces-a-tough-situation-because-of-imman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக