வாழையில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஆனால் பழத்தைத் தவிர நாம் பிறவற்றை பெரிதளவு பயன்படுத்துவதில்லை. காரணம், அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள். வாழைப்பூவை நரம்பு எடுப்பது பெரிய வேலை. மட்டைகளைக் களைந்து வாழைத்தண்டை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் அலுப்புப்பட்டுக்கொண்டே நாம் அவற்றை சீண்டுவதில்லை. அந்தப் புள்ளிதான் சிவகுமார்-சசிரேகாவை வாழை சார்ந்த மதிப்புக்கூட்டுதல் தொழிலில் இறங்கச் செய்தது.
சிவகுமார் கண்டுபிடித்த வாழைநார் தயாரிக்கும் எந்திரத்துக்கு விவசாயிகள் மத்தியில் பெரிய வரவேற்பு. வீணாகப் போகும் ஒரு வேளாண் பொருளை மதிப்புக்கூட்டுவதென்பது கூடுதல் லாபம்தருமல்லவா? ஆனால் அந்த நாரை வைத்து என்ன செய்வது?
அதற்கு தீர்வு தந்தார் சசிரேகா. வாழை நாரைக் கொண்டு கைவினைப் பொருள்கள் செய்யும் பயிற்சியைத் தொடங்கினார். கூடைகள், பேக்குகள், பொம்மைகள், காபி மேட் என சணல் கொண்டு, தேங்காய் நார் கொண்டு எதையெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் வாழை நார் கொண்டு செய்ய பயிற்சியளிக்கிறார். வாழை நார் எந்திரத்தை வாங்கி தயாரிக்கும் நார் முழுவதையும் விலைகொடுத்து இவர்களே வாங்கியும் கொள்கிறார்கள்.
எம்.இ முடித்திருக்கும் சசிரேகா ஒரு பொறியியல் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றியவர். அந்த அனுபவம் கைகொடுக்க ஒரு பாடத்திட்டத்தை வகுத்து பயிற்சி மையத்தை தொடங்கிவிட்டார்.
இது ஒரு பக்கம் செயல்பட, வாழை உணவுகள் தயாரிப்பிலும் முன்னணியில் இருக்கிறார்கள் இவர்கள். ஸ்ரீபூர்ணா என்ற பிராண்ட் பெயரில் இவர்கள் தயாரித்து அனுப்பும் பொருள்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மரியாதை இருக்கிறது.
"வழக்கமா பல நிறுவனங்கள் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கிறாங்க. எங்க தயாரிப்புல கூடுதலா வாழைப்பழ மாவு இருக்கும். அதுமட்டுமில்லாம வழக்கமா சேர்க்கிற தானியங்கள் மட்டுமில்லாம, நாங்க அளவுலயும் தரத்துலயும் கூடுதலா சில விஷயங்கள் சேக்குறோம். குழந்தைகளோட செரிமான மண்டலத்தை சிறப்பா செயல்பட வைக்கிறதோட உடலுக்கு வலுவையும் இந்த ஹெல்த் மிக்ஸ் தரும். தமிழகத்துல பரவலா பூவன், மொந்தன், செவ்வாழை எல்லரிசி, நேந்திரன் வாழைகள் விளையுது. இது எல்லாத்திலிருந்தும் தனித்தனியா மாவு தயாரிக்கிறோம். ஒவ்வொரு வாழைக்கும் ஒவ்வொரு மருத்துவத் தன்மை இருக்கு.
எங்க வாழைப்பூ ஊறுகாய்க்கு பெரிய வரவேற்பு இருக்கு. அது கொடுத்த நம்பிக்கையிலதான் அடுத்தடுத்த பொருள்களை தயாரிக்க ஆரம்பிச்சோம். வாழைத்தண்டு ஊறுகாயும் நாங்கதான் சந்தைக்கு அறிமுகம் செஞ்சோம். வாழைத்தண்டோட மருத்துவ குணம் பத்தி சொல்ல வேண்டியதில்லை. அதுவும் பெரிய வியாபாரத்தைக் கொடுத்துச்சு.
இந்தப் பொருள்களை மட்டும் சந்தைக்குக் கொண்டுட்டுப் போகும்போது சில பிரச்னைகள் இருந்துச்சு. 'உங்க பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. ஆனா, நிறைய புராடக்ட் இருந்தாதான் மக்கள் மனசுல நிக்க முடியும்'ன்னு கடைகாரங்க சொன்னாங்க. எதுவா இருந்தாலும் மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத, மரபு சார்ந்த பொருளா இருக்கணும்ன்னு நாங்க ரொம்பவே உறுதியா இருந்தோம். தொடர்ந்து அது தொடர்பா ஆய்வுகள் செஞ்சு, அடுத்தகட்டமா மூலிகைத் தொக்குகளைக் கொண்டு வந்தோம். வழக்கமா கிராமங்கள்ல வீடுகள்லயே இதைப் பக்குவமா செஞ்சு கெட்டுப்போகாத மாதிரி வேடுகட்டி வச்சிருப்பாங்க. இன்னைக்கு வாழ்க்கைமுறையில அதெல்லாம் சாத்தியமில்லை. இதை திரும்பவும் மக்கள் மத்தியில கொண்டு போகலாம்ன்னு முடிவு பண்ணினோம்.
Also Read: திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 11: வாழைப் பொருள்களை மதிப்புக்கூட்டி சாதித்த சிவகுமார் - சசிரேகா!
பிரண்டைத் தொக்கு, மணத்தக்காளி தொக்கு, வல்லாரைத் தொக்கு, தூதுவளைத் தொக்கு, பொன்னாங்கண்ணி தொக்கு, கறிவேப்பிலை தொக்கு, புதினா தொக்கு, மாங்காய் இஞ்சித் தொக்கு, மிளகுத் தொக்கு, பூண்டுத் தொக்குகளை மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்தோம். மூலிகைகளோட தன்மை கெட்டுடாம சிறந்த பக்குவத்துல தயாரிச்சோம். அந்தப் பொருள்களுக்கு சந்தையில பெரும் வரவேற்பு கிடைச்சுச்சு.
அடுத்து மரபு திண்பண்டங்களையும் கொண்டு வந்தோம். திணை உருண்டை, நவதானிய உருண்டை, கம்பு உருண்டை, எள்ளு உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை... இந்தப் பொருள்களும் இன்னைக்கு எங்க பிராண்டுக்கான மரியாதையை அதிகமாகியிருக்கு. பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளை விட சின்ன சின்ன மளிகைக்கடைகளையே நாங்க களமா வச்சிருக்கோம். அவங்கதான் வாடிக்கையாளரோட பேசி அக்கறையோட இன்னமும் வணிகம் செஞ்சுக்கிட்டிருக்காங்க..." என்கிறார் சசிரேகா.
இப்போது தொழிற்சாலை, பயிற்சி இரண்டையுமே சசிரேகாதான் நிர்வகிக்கிறார். உற்பத்தி, பேக்கிங் என எல்லாவற்றிலும் பெண்களே வேலை செய்கிறார்கள். சிவகுமார் ஆராய்ச்சிப் பிரிவை நிர்வகிக்கிறார்.
சந்தையில் ஏராளமான இன்ஸ்டண்ட் உணவுகள் இருக்கின்றன. மக்களை வெறும் நுக்ர்வோராக மட்டும் பார்க்காமல் அண்டை வீட்டாராக, உறவுக்காரர்களாக, நெருக்கமானவர்களாக கருதும் அக்கறை, வணிகத்தில் ஒரு அடையாளத்தை உருவாக்கவே செய்கிறது. சிவகுமார்- சச்ரேகா தம்பதியின் ஸ்ரீபூர்ணா அப்படியான ஒரு பிராண்டாக வளர்ந்திருக்கிறது!
அடுத்தவாரம் இன்னுமொரு மைல்ஸ்டோன் மனிதரைப் பற்றிப் பார்ப்போம்!
source https://www.vikatan.com/business/miscellaneous/trichy-milestone-achievers-12-the-success-story-of-shree-poorna-foods
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக