(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள “drop down” மூலம் பாகம் 1-15 படிக்காதவர்கள் படிக்கலாம்)
டிசம்பர் 21, 1991. சுபயோக சுபதினம். முதல் வெளிநாட்டு பயணம். பம்பாயிலிருந்து துபாய்க்கு. இறங்கி வெளியேயும் வந்தாயிற்று. நேரம் இரவு 0900 மணி இருந்திருக்கும். சற்றே குளிர். வாகனத்தில் அமர்ந்து வீட்டுக்கு போகும் வழியில் அத்தை ஒரு கட்டிடத்தை காட்டி, "நாளை முதல் அதுதான் உங்கள் அலுவலகம் என்றார்கள்". எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் சின்னம் (Logo) அழகாக ஒளியூட்டப்பட்டு அந்த நான்கு மாடி கட்டிடம் கம்பீரமாக தோன்றியது.
இரவு தூக்கம் கொள்ளவில்லை. மனைவிக்கு பேசிவிட்டு மெத்தையில் அப்படியும் இப்படியும் புரண்டு காலை அலுவலகம் சென்றேன். எல்லாம் சுமூகம். என் நேரடி முகவர் (Direct Manager) என்னை எல்லோரிடமும் அறிமுகப்படுத்தி பின்னர் என்னிடம் பணியை விளக்கி என்னை வாழ்த்தி ஆரம்பித்து வைத்தார்.
சில நாட்களிலியே எல்லாம் பழக்கப்பட்டு வேலையில் ஒன்றிப்போனேன். மனைவியும் குழந்தையும் துபாய் வந்து சேர்ந்தார்கள். வேலை நேரம் காலை 0700 முதல் மதியம் 0230 வரைதான். வந்து உணவருந்தி சிறிது ஓய்வுக்குப்பின் தயாராகி கால்நடையாகவே சுற்றிப்பார்க்க ஆரம்பித்தேன். அதற்கும் கொஞ்சம் அடிப்படை அறிவு வேண்டுமில்லையா? மாமா சொன்னார்கள், துபாய் பர் துபாய் மற்றும் தேரா என இரு பிரதான பாகங்களை கொண்டது. இந்த இரு பாகங்களையும் பிரிப்பது துபாய் க்ரீக் (Creek - தமிழில் சிற்றோடை) தான் என்று.
நான் வந்து சில நாட்களே ஆகிய காரணத்தால் அலுவலகம் தவிர எல்லாமே நடராஜா சேவை தான். வீட்டிலிருந்து கிளம்பி ஒரு 20-30 நிமிடத்தில் பர் துபாய், மீனா பஜார் வந்து விடும். ஏறக்குறைய இந்தியா மாதிரிதான். எல்லா விதமான இந்திய துணிமணிகள், உணவு பொருட்கள் இத்யாதி இத்யாதி கிடைக்குமிடம் பர் துபாய். அடிக்கடி அங்கு சென்று வர ஆரம்பித்தேன். ஏனெனில் அந்த மீனா பஜார் முற்றிலும் ஒரு நேர்மறை சக்தியை (Positive Energy) கொடுக்கும். எனக்கு மிகவும் பிடித்த இடம், அல் ஃபாஹீதி என்ற ஸ்டேஷனரி கடை. இன்றும் உள்ளது. தரமான பொருட்கள் வாங்க நல்ல இடம். இல்லாமல் போன ஒரு கடை "தாம்சன் மியூசிக்கல்ஸ்". வாராவாரம் அங்கு சென்று புதிதாக வெளியாகிய தமிழ் பட பாடல்கள் அடங்கிய கேசட்டை வாங்கிவிடுவேன். கேசட் தொலைந்தது. அந்த கடையும் காணாமல் போகியது. அப்படியே சற்று க்ரீக் ஒட்டி சென்றால் கிருஷ்ணர் கோவிலும், சிவன் கோவிலும் எனக்கு விருப்பமான இடங்கள்.
துபாயில் புதிய இடங்கள் வளர வளர பர் துபாய் சற்று பொலிவிழந்தே காணப்படுகிறது. நீங்கள் துபாய்க்கு சுற்றுலா வந்தால் குறைந்தபட்சம் இரண்டு காரணங்களுக்காக பர் துபாய் நிச்சயமாக செல்லுங்கள். முதல் காரணம் "வடா சாண்ட்விச்". ஏறக்குறைய பர் துபாயின் அழியா சின்னம். 40-45 வருடங்களாக ஒரே இடத்தில இயங்கி வரும் 8 X 20 அடி கடைதான். விடுமுறையே இல்லாமல் ஒவ்வொரு மாலையும் 5 மணி முதல் இரவு 10/11 மணி வரை விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு 3 திர்ஹமில் (1 திர்ஹம் = 20 ரூபாய்) மிக சுவையான வடா சாண்ட்விச், சமோசா சாண்ட்விச் மற்றும் சில உணவுகளை வழங்கி வரும் கடை.
நான் 30 வருட வாடிக்கையாளர். மனைவி சிறப்பு வாடிக்கையாளர். சில வருடங்கள் முன்பு வரை, கடையின் உரிமையாளர் அன்சாரி தன் ஆஜானுபாகுவான உருவத்துடன் நின்றுகொண்டே தடித்த விரல்களால் அந்த வடா சாண்டவிச் செய்வார்.
செய்யும்போது அவர் நாக்கு சற்றே துருத்திக்கொண்டிருக்கும். அவ்வளவு ஒன்றிப்போய் செய்வார். அதன் பலன் சுவையான வடா சாண்டவிச்சுக்கு மயங்கிய வாடிக்கையாளர்கள். வடா சாண்டவிச் என்பது ஃபிலாபில் என்னும் வடை போன்ற ஒரு வஸ்த்தை சப்பாத்தி மாதிரியான ரொட்டியில் (Pita Bread) சில ரகசிய கலவை வைத்து சுருட்டி கொடுப்பார்கள். 3-4 முறை சாப்பிட்டால் நீங்கள் வாடிக்கையாளராகிவிடுவீர்கள். எவ்வளவோ மாறிப்போனாலும் பர் துபாயில் இன்றும் மாறாமல் நிற்கின்ற இடம். தவறாமல் பாருங்கள், சுவையுங்கள். அப்படியே அன்சாரி இருந்தால் அவருக்கும் ஒரு ஹலோ சொல்லுங்கள். 45 வருடங்களுக்கு முன், சிறு பையனாக இரானிலிருந்து தோணியில் வந்து துபாயை தன் வீடாக்கிக்கொண்டவர்.
அடுத்து பார்க்க வேண்டிய இடம் அப்ரா (Abra, Traditioanl Dhow) ஸ்டேஷன். அப்ரா தான் பர் துபாயில் இருந்து தேரா சென்று வர சரியான வழி. முன்பே சொன்ன மாதிரி க்ரீக்கின் (Creek) இந்த புறம் பர் துபாய் மறு புறம் தேரா. கடக்க 25 பில்ஸ் தான், அப்போது. இப்போது 1 திர்ஹம் (20 ரூபாய்) என்று அறிகிறேன். 10 நிமிடத்தில் கடந்துவிடலாம். திறந்த படகு. 25-30 பேர் வசதியாக அமரலாம். என்ன கரையில் இருந்து அந்த படகுக்குள் லாவகமாக ஏற சற்று பழக வேண்டும். நிறைய சுற்றுலா பயணிகள் தடுமாறி தடுமாறி ஏறுவார்கள். பழகிப்போன மக்கள் சந்தோஷமாக கை கொடுத்து உதவுவார்கள். ஓட்டுநர் அவர் கையையும் காலையும் உபயோகப்படுத்தி ஓட்டிக்கொண்டே கட்டணமும் வசூலிப்பார். பயண சீட்டு கிடையாது.
இது ஒரு வித்தியாசமான அனுபவம். அந்த 10 நிமிட பயணத்தில் நீங்கள் துபாயின் பழங்காலத்தை பார்க்கலாம். அப்படியே கண்ணை சுழற்றினால் துபாயின் சமீபத்திய சாதனைகளையும் பார்க்கலாம். சொல்ல மறந்துவிட்டேன். அந்த அப்ரா ஸ்டேஷன் செல்ல நீங்கள் கோவிலை கடந்து செல்லவேண்டும். வழியில் பெருமாள் கடையில் இருட்டு கடை அல்வா முதற்கொண்டு எல்லா தமிழ் பொருட்களும் கிடைக்கும். என் பெண்ணின் நடன அரங்கேற்றத்துக்கு மலர் அலங்காரம் அவர்கள்தான். அப்படியே என் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு அழகிய காவடியும் செய்து கொடுத்தார்கள்.
சற்றே நடந்தால் பெரும்பாலும் இந்தியர்களால் நடத்தப்படும் பழங்கால துணிக்கடைகளை பார்க்கலாம். இவையெல்லாம் பர் துபாயின் மற்றும் நிறைய துபாய்வாழ் மக்களின் இன்றியமையா அடையாளங்கள். வேகமாக மாறி வரும் உலகில் இந்த மாதிரி சில இடங்கள், அடையாளங்கள் வாழ்க்கையை சற்றே ஸ்திரப்படுத்துகின்றன என்று நம்புகிறேன். நான் பழமையை விரும்பி புதுமையை அரவணைக்கும் சராசரி மனிதன், உங்களில் நிறையபேரைப்போல்.
பர் துபாய் (Bur Dubai) ஓரளவுக்கு சொல்லிவிட்டேன். அடுத்து தவறாமல் பார்க்க வேண்டிய இடம், தேரா. தேரா அப்ரா ஸ்டேஷனில் இறங்கி பழைய மார்க்கெட் ஏரியா சுற்றி வரலாம். தேராவில்தான் உலக புகழ்பெற்ற "கோல்ட் சூக்" (Gold Souk) உள்ளது. ஒரு பிரதான சாலை முழுக்க நிறைய தங்க நகை கடைகள். ஏறக்குறைய எல்லா கடைகளுமே முகப்பு முழுக்க கண்ணாடியில்தான் இருக்கும். "விண்டோ ஷாப்பிங்" செய்ய சரியான இடம். கோல்ட் சூக் அருகிலே "மசாலா சந்தை" (Spice Souk) மற்றும் குண்டூசி முதல் எல்லா மின்னணு சாதனங்களும் கிடைக்கும் கடைகள். பொதுவாக ஆப்பிரிக்க நாட்டு வணிகர்கள் இங்கு வாங்கி ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வார்கள். மிகவும் பரபரப்பான இடம், குறுகலான சாலைகள். போக்குவரத்து அதிகம், மிக அதிகம். சாலைகளில் கை வண்டிகள் இன்றும் பார்க்கலாம், பொருட்களை இங்கும் அங்கும் எடுத்து செல்ல. தேரா மற்றும் பர் துபாயில் சில கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கூட பார்க்கலாம். அந்த அளவு நம் மக்கள் இங்கு உள்ளார்கள். துபாய் வந்தால் தவறவிடாதீர்கள்.
என் விருந்தாளிகள் "கோல்ட் சூக்" பார்த்தபிறகு தவறாமல் கேட்கும் கேள்வி, எப்படி இவ்வளவு கடைகள் ஒரே இடத்தில் அதுவும் ஒரு பாதுகாப்பும் இல்லாமல் என்பதுதான். இங்கே சில நேரங்களில் போக்குவரத்து சமிக்கையில் என் பக்கத்து வாகனத்தில் இருப்பது துபாய் மன்னர், நம்ப முடியுமா? என் அலுவலக கட்டிடத்தில் மன்னரின் மனைவி அவர் அலுவலத்துக்கு ஒரு அறிகுறியும் இல்லாமல் வந்து செல்வார். துபாய் மன்னரை நான் 5-6 முறை 10 அடிக்குள் பார்த்திருக்கிறேன். துபாய்க்கே உரித்தான விஷயங்கள். சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அடித்தளத்தில் அரசு மிகவும் சிரத்தை எடுத்து, நிறைய ரகசிய கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கமெராக்கள், முகம் அறியும் தொழில் நுட்பம் எல்லாம் உபயோகப்படுத்தி குற்றங்களை மிக கவனமாக கட்டுப்படுத்துகிறார்கள்.
பர் துபாய் மற்றும் தேரா பார்த்துவிட்டால், கராமா மூன்றாவது இடம். நிறைய தென்னிந்தியர்களும் பிலிப்பினோக்களும் வாழும் இடம். நிறைய இந்திய உணவகங்கள், சரவணபவன், சங்கீதா உட்பட. பழைய துபாயின் அடையாளங்கள் இங்கு உண்டு. முதலாவது காலணிகள் பழுது பார்க்கும் பாகிஸ்தானிய நல்ல மனிதர். அளவுக்கு அதிகம் ஆசை படாதவர். ஒரு கட்டிடத்தின் படிக்கட்டுக்கீழ் பொந்துதான் கடை. ஆனால் அவரிடம் வாடிக்கையாளர்கள் அதிகம்.
மிக நேர்த்தியாக வேலை செய்வார். மிக அன்பாக பேசுவார். எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்லுவார். ஆண்டவன் எனக்கு தேவையானதை கொடுத்துள்ளார். அதிகம் வேண்டாம் என்று சொல்லி மிக குறைவாகவே பணம் வாங்குவார். என்ன ஒரு நல்ல மனோபாவம். அவருக்கு அடுத்தே சற்றே பெரிய கடை, கடிகாரம் பழுது பார்க்கும் மற்றும் நகல் சாவி (Duplicate key) செய்யும் பாலஸ்தீனிய அன்பர். தரமான வேலை, சரியான விலை, சிரித்த முகம், 30 வருடங்களுக்கு ஒரே இடத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களை சம்பாதித்து வைத்துள்ள இடம்.
நானும் மனைவியும் இவர்களை (வடா சாண்ட்விச், காலணி பழுது பார்ப்பவர், கடிகார கடை) துபாயின் சந்தோஷமான, நேர்மையான அடையாளங்களாவே பார்க்கிறோம். நல்ல மனிதர்கள்.
உண்மையில், 15-20 ஆண்டுக்கு முன், கராமா, பர் துபாய் மற்றும் தேரா தான் துபாயின் பிரதான பாகங்கள். அப்புறம் ஜுமேரா என்னும் கடற்கரை ஓரம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி. எல்லாமே பங்களாக்கள். நிறைய வெள்ளையர்களும், அரபி மக்களும் வாழும் இடம். துபாய் அவ்வளவே இருந்தது.
துபாயின் இன்றைய மக்கள் தொகை ஏறக்குறைய 30 லட்சம். பெரும்பான்மை மக்கள் மற்ற நாட்டை சேர்ந்தவர்கள். 175+ நாட்டு மக்கள் துபாயை தங்கள் இருப்பிடமாக கொண்டுள்ளனர். இந்தியர்கள் மிக மிக அதிகம். அடுத்து பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் என பட்டியல் நீளும். எல்லோரும் வேலை நிமித்தமாகவோ தொழில் நிமித்தமாகவோ வந்தவர்கள். சில குடும்பங்கள் 100+ வருடங்களாக 2-3 தலைமுறை கண்டவர்கள்.
20 வருடங்களுக்கு முன், துபாயில் பேருந்து சேவை கிடையாது. மெட்ரோ கிடையாது. அபுதாபி (130 கி மீ, பக்கத்து ஊர், ஐக்கிய அரபி எமிரேட்ஸின் தலைநகர்) செல்ல ஒரு 4 வழி சாலைதான். பெரும்பாலும் மக்கள் ஒருவருக்கொருவர் தெரிந்து வைத்திருப்பார்கள் தமிழர், மலையாளி எனகுழு குழுவாக. எந்த ஒரு வேலைக்கும் / வாங்குவதற்கும் மற்றவரை கேட்டு எனக்கு இவர் தெரியும் அவர் தெரியும் என மலிவாக வேலையை முடித்துக்கொள்ளும் நிலை இருந்தது. சம்பளங்கள் சுமாரான ரகம். ஒரு எளிய ஆனால் நிறைவான வாழ்க்கை.
ஆனால் இந்த 20 வருட அசுர வளர்ச்சி மலைப்பாக உள்ளது. பட்டியலிட்டு முடிக்கமுடியாது (3-4 பாகம் தேவைப்படும்). இந்த கீழ்கண்ட பதிவு துபாயை சுற்றலா செய்ய விரும்பும் மக்களுக்காக.
புர்ஜ் அல் அரப் (Burj Al Arab):
முதலில் புர்ஜ் அல் அரப் (Burj Al Arab) என்னும் 5-நட்சத்திர விடுதி. அதிகாரபூர்வமாக 5 நட்சத்திரம்தான் அதிகபட்சம். 7-நட்சத்திரம் என்று யாராவது சொன்னால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். கடற்கரையில் இருந்து சுமார் 900 அடி தள்ளி கடலினுள் பாறைகளை நிரப்பி (130 அடி ஆழத்துக்கு) அதன் மேல் நிற்கும் பிரம்மாண்ட விடுதி. ஒரு படகின் பாய்மரம் (துபாய் ஒரு காலத்தில் கடல் சார்ந்த நாடாக இருந்தது) போல வடிவமைக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் அழகாக காட்சியளிக்கும். கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனது. அதற்கு முன் அந்த பாறைகளை நிரப்பி கடலினுள் வலுவான அடித்தளம் அமைக்க 3 வருடம் ஆனது. கரையிலிருந்து விடுதிக்கு பிரத்யேக பாலம் உள்ளது. உள்ளேயே சுற்றிப்பார்க்க வழிநடத்தப்பட்ட சுற்றலா உண்டு. நீங்கள் தங்க விரும்பினால், ஓர் இரவுக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாய்.
புர்ஜ் கலிஃபா (Burj Khalifa):
தெரியாத மக்கள் இல்லை. உலகிலே மிக உயர்ந்த கட்டிடம். 2700 அடி உயரம். (முக்கால் கிலோமீட்டர்). கட்டி முடிக்க 6 வருடங்கள். மொத்தம் 163 மாடிகள். 154 வரை பொது உபயோகத்திற்கு. அதற்கு மேல், சில பல உபகரணங்களுக்காக. செலவு நிறைய பூஜ்ஜியங்கள். அது நமக்கு எதற்கு. 124 மாடியில் (1/2 கிலோமீட்டர் உயரம்) பார்வையாளர்கள் அரங்கம் உள்ளது. அதி வேக மின் தூக்கியில் (Lift) காது அடைக்க அழைத்து சென்று காட்டுவார்கள். கட்டணம் 3,000 ரூபாய். 148 மாடிக்கு செல்லலாம் 7,600 ரூபாய் கொடுத்தால். மேலிருந்து துபாய் மால் மற்றும் துபாய் நடனமாடும் நீரூற்று பார்க்கலாம். கீழே எறும்புகள் போல மக்களும் வாகனங்களும் பார்க்கலாம். அப்புறம், என் மாமனார் போல் நம்ம ஊர் மக்கள் தொகை அதிகம், இல்லாவிடில் நாம் துபாயை விட இன்னும் நன்றாக செய்யலாம் என்று அங்கலாய்க்கலாம் (Whine/grumble).
இந்த புர்ஜ் கலிஃபாவில் சிறப்பு தினங்களில் சிறப்பு ஒளியூட்டம் (Lighting) செய்வார்கள். புத்தாண்டுக்கு வான வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். ஷாரூக் கான் போன்ற நட்சந்திரங்களின் பிறந்த நாளுக்கு அவர்களின் படத்தை கட்டிடத்தின் மேல் ஒளிபரப்புவார்கள். என் பிறந்த நாளுக்கும் என்னை அணுகினார்கள். நான்தான் எனக்கு இந்த வீண் புகழ்ச்சி பிடிக்காது என்று பணிவன்புடன் மறுத்துவிட்டேன். என்ன நான் சொல்வது?
வைல்ட் வாடி (Wild Wadi):
வாடி என்றால் அரபிக்கில் பள்ளத்தாக்கு என்று அர்த்தம். இது ஒரு தண்ணீர் விளையாட்டு திடல். குழந்தைகளும் வளர்ந்தவர்களும் விளையாடி குதூகலிக்க நிறைய அம்சங்கள் உள்ளன. ஜுமேரா ஸ்கேரர் (Jumeira Scarer) என்ற தண்ணீர் சறுக்கு விளையாட்டு சற்றே வயிற்றை கலக்கும். இது புர்ஜ் அல் அரப் விடுதியை ஒட்டியே அமைந்துள்ள விளையாட்டு திடல். நுழைவுக்கு 5,200 ரூபாய். ஒரு நாள் முழுவதும் கழிக்கலாம்.
துபாய் மெட்ரோ (Dubai Metro):
ஆரம்பித்து 12 வருடங்கள் ஆகி விட்டது. மிகவும் திறமையான (effecient) சுத்தமான போக்குவரத்து. வழித்தடத்தில் எல்லா முக்கிய இடங்கள், விடுதிகள், வணிக வளாகங்கள் என அனைத்தையும் அடையும் வகையில் அமைக்கப்பட்டது. இன்னொரு சிறப்பம்சம். இந்த வண்டிகளுக்கு ஓட்டுனர்களே கிடையாது. தானியங்கி வண்டிகள். இந்த 12 வருடங்களில் ஒரே முறைதான் நிறுத்தப்பட்டது. ஒரு முறை பயணம் செய்வது முக்கியம்.
வணிக வளாகங்கள் (Malls):
எக்கச்சக்கமான எண்ணிக்கையில். துபாய் மால், சிட்டி சென்டர், பர் ஜூமான், ஷின்டகா சிட்டி சென்டர், பெஸ்டிவல் சிட்டி, மால் ஆப் எமிரேட்ஸ், சூக் அல் பஹார், மரீனா மால், துபாய் ஹில்ஸ் மால், அல் குரைர் மால், வாஃபி, மெற்கட்டோ என ஊரே ஒரு பெரிய மால்தான். மால்களை பார்க்க மட்டும் 10 நாள் வேண்டும். நல்ல செய்தி என்னவென்றால் மால்களை பார்க்க கட்டணமில்லை. (:-)). எனக்கு பிடித்த இடங்கள், வாஃபி, மெற்கட்டோ மற்றும் பெஸ்டிவல் சிட்டி. பிரம்மாண்ட ஐக்யா (IKEA) இந்த பெஸ்டிவல் சிட்டியில்தான் உள்ளது. துபாய் மாலில் மீன் காட்சியகம் மற்றும் நடனமாடும் நீரூற்று பார்க்கவேண்டியவை. மால் ஆப் எமிரேட்ஸில் உள்ள செயற்கை பனிச்சறுக்கு (Indoor Ski) பார்க்கவேண்டிய இடம். ஸ்கி பண்ண விருப்பப்பட்டால் உள்ளேயும் செல்லலாம். கட்டணம் உண்டு. எங்களுக்கு மால்கள் என்பது விருந்தினர் விருப்பத்தை பொறுத்து. எங்களுக்கு அவ்வளவு நாட்டமில்லை.
பாலைவன சஃபாரி (Desert Safari):
துபாய்க்கே உரித்தான அம்சம். நன்கு பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்ட பெரிய வாகனங்களில் (4-Wheel Drives) நல்ல பலசாலியான ஓட்டுநர் உங்கள் இடத்திலிருந்து அழைத்துச்சென்று பாலைவனத்தை அடைந்து சூரிய அஸ்தமனத்தை காட்டி நீங்கள் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் வண்டியில் திருப்பி அமர்த்தி பாலைவனத்தில் உள்ள மணல் குன்றுகளில் சறுக்கி ஏறி இறங்கி வயிற்றை கலக்கி உங்கள் கூச்சலை அனுபவித்து போதும் என நினைக்கும்போது நிறுத்தி உங்களை ஒரு இடத்தில சேர்ப்பார். நல்ல உணவு அருந்தி ஹாய்யாக அமர்ந்து அரேபிய பெண் "பெல்லி" நடனம் ஆடுவதை ரசிக்கலாம். கூட சேர்ந்து ஆட விருப்பமென்றால் ஆடி மகிழலாம். மனைவியுடன் வருபவர்கள் சற்றே யோசிக்கவேண்டும். என் மானமே போச்சு என்று பேச்சு கேட்கவேண்டி வரும். அனுபவத்தில் சொல்கிறேன்.
பாலைவன சஃபாரி துபாயில் செய்ய வேண்டிய (must do) ஒரு அம்சம். கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து.
பாம் ஜுமேரா (Palm Jumeirah)
இந்த அதிசயத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. கடலை வசப்படுத்தி (reclaim) பாராங்கற்களை கொட்டி நிலத்தை உருவாக்கி அதன் மேல் ஒரு பெரிய நகரத்தையே ராட்சத பனை மர உருவில் உருவாக்கப்பட்ட இடம். உள்ளே சென்றால் நம்புவது கஷ்டம். இது இப்போது மிகவும் பிஸியான இடங்களில் ஒன்று.
அபுதாபி (Abu Dhabi), ஷார்ஜாஹ் (Sharjah) மற்றும் மற்ற எமிரேட்டுகள்:
அபுதாபி 130 கி மீ. 90 நிமிடம் பிடிக்கலாம். பேருந்துகள் உண்டு. முக்கியமாக பார்க்க வேண்டிய இடம், ஷேய்க் சயீத் கிராண்ட் மாஸ்க் என்னும் பளிங்குக்கற்கலால் இழைக்கப்பட்ட பிரம்மாண்ட மசூதி. உள்ளே சென்று காணலாம். பாகுபாடு கிடையாது. இதுவும் ஒரு must do அம்சம்.
ஷார்ஜாஹ் மற்றும் இதர எமிரேட்ஸ்களும் அவரவர்களுக்கே உண்டான தனித்தன்மை கொண்டவை. எல்லாமே 2 மணி நேரத்திற்குள் சென்று வரலாம்.
மற்றவை:
இவை இல்லாமல் துபாய் சஃபாரி (வனவிலங்குகள்), துபாய் ஃபிரேம் (வித்தியாசமான கட்டிடம், பார்க்கும் தளம்), அய்ன் துபாய் (ராட்சத சுற்றும் சக்கரம், துபாய் முழுவதையும் பார்க்கலாம், உள்ளே அமர்ந்து), துபாய் அருங்காட்சியகம், சொகுசு படகில் உணவு (Dinner Cruise), சிட்டி வாக், துபாய் கேணல் (Canal), குளோபல் வில்லேஜ் என காசை கரியாக்க நிறைய வழிகள் உண்டு. நிச்சயமாக அனுபவிப்பீர்கள்.
என்னப்பா துபாய் பற்றி அப்படி இப்படி என்று கண்டமேனிக்கு எழுதுகிறாய். அங்கே குறையே இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். நான் இன்னும் சொர்க்கம் பார்த்ததில்லை இருந்தாலும் சொல்கிறேன், துபாய் நிச்சயமாக சொர்க்கம் இல்லை. ஆனால், வளங்கள் ஒன்றும் பெரிதாக இல்லாமல் ஒரு சிறிய இடம், 175+ நாட்டு மக்கள் மிகவும் பாதுகாப்பாக ஒற்றுமையாக வாழும் இடம் இது. குறைகள் உண்டு. நிறைகளும் அதிகம். குறைகளை சரிசெய்து நிறைகள் மேலோங்கி நிற்கும் இடம்.
இது என்னுடைய பார்வையில். எனக்கு வாய்த்த அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இன்னும் சிறப்பாய், சிலருக்கு மிக மோசமாய். இங்கு வந்து ஏமாற்றப்பட்டு இல்லை ஏமாற்றப்படாமல் ஆனால் ஏய்க்கப்பட்டு (Exploited) கஷ்டம் அனுபவித்தவர்கள் சொல்வார்கள் கூழோ கஞ்சியோ நம்மூர் நம்மூர்தான் என்று. நான் துபாய் பற்றி எழுதுவது துபாய் பற்றி சொல்ல மட்டுமே. மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்ய அல்ல. 50+ நாடுகளை (20 நாடுகளை பல முறை) சுற்றியவன், 3 நாடுகளில் வாழ்ந்தவன் என்ற முறையில், என் அனுமானத்தில் துபாய் வசிக்க ஒரு சிறந்த இடம். நல்ல வேலை மற்றும் குடும்பத்துடன் இருந்தால், ஓரளவுக்கு சந்தோஷமாக பாதுகாப்பாக வாழ ஏற்ற இடம்.
துபாயில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் துபாயின் தொலைநோக்கு பார்வை. உதாரணத்திற்கு ஒரு பெரிய வளாகமோ விடுதியோ கட்டும்போதே அதற்கு எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் அந்த இடத்தை அடையவும் வாகனங்களை நிறுத்தவும் எல்லா வசதிகளையும் முன்பே முடித்துவிடுவார்கள். அதே போல், சாலை வசதிகள் மற்றும் மேம்பாலங்கள் வரும் 20-30 வருடங்களுக்கு என்ன தேவையோ அதை இன்றே செய்து முடிப்பார்கள். அந்த புதிய சாலைகள் போடும்போது "தற்காலிக" மாற்று சாலைகள் அவ்வளவு தரமாக இருக்கும். ஏதோ மண்ணை கொட்டி, இங்கே கமிஷன் வெட்டி அங்கே கமிஷன் வெட்டி ரோடு போட்டேன் என அட்டூழியம் பண்ண மாட்டார்கள்.
சாலை கட்டணத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தும்போதே "தொடா" (Contactless) தொழில்நுட்பத்தை (using RFID Tags) தழுவினார்கள். எந்த பொது வாகன நிறுத்துமிடங்களிலும் கைபேசி மூலம் கட்டணம் செலுத்தும் விதமாக அமைத்தார்கள். திடீரென்று வாகனத்தை தொடர்ந்து ஓடி வந்து ஒரு மஞ்சள் சீட்டை கொடுக்கும் அல்லது விவாதம் செய்யும் விஷயமே கிடையாது. (நம்மூரில் கோவில்களில் நிறைய அனுபவங்கள்).
இன்னும் நிறைய எழுதலாம். நிறைவாக ஒரு நிகழ்வை கூறி முடிக்கிறேன். 1992 என்று நினைக்கிறேன். நான் வாகனம் வாங்கியிருக்கவில்லை. இப்போது மாதிரி பேருந்துகளோ , uber-ஓ கிடையாது. என் மேலதிகாரி மறுநாள் காலை வேலை நிமித்தம் ஜெர்மனி செல்ல வேண்டும்,. நான்தான் அந்த நாட்டு அலுவலகத்தை தணிக்கை செய்து அறிக்கை தயார் செய்து தரவேண்டும். எல்லாம் ரெடி. இருந்தும் சில கடைசி நிமிட வேலைகளை காலையில் முடிக்கலாம் என்று அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் செல்ல நினைத்து வாடகை காரை தேடினேன். வரவேயில்லை.
சரி நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். (5-6 கிமீ). நல்ல இருட்டு. சிறிது நேரத்தில், ஒரு வாகனம் எனக்கு மிக அருகில் வந்து நின்றது. பார்த்தால் அது போலீஸ் வாகனம். உள்ளே இருந்த அதிகாரி என்னிடம் "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எங்கே வேலை பார்க்கிறீர்கள்?" என விசாரித்து என் அடையாள அட்டையை சரி பார்த்தார். நான் அலுவலகம் செல்கிறேன் என்றதற்கு, ஏன் இவ்வளவு அதிகாலை என வினவினார். காரணம் சொன்னேன். வண்டியில் ஏறு என்று உத்தரவிட்டார். போலீஸ் ஸ்டேஷனா? என்ன பண்ணுவார்கள்? முன்னே பின்னே செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும் என்று சொல்வார்கள். (யார் என்று கேட்காதீர்கள், ஞாபகம் இல்லை).
ஒன்றும் புரியாமல், சரி இன்னைக்கு நமக்கு கட்டம் சரியில்லை என்று பயந்துகொண்டே ஏறினேன். அவர்கள் என்னிடம் நீங்கள் எந்த ஊர், எப்போது வந்தீர்கள் என விசாரித்துக்கொண்டே சில நிமிடங்களில் என் அலுவலக வாயிலில் என்னை இறக்கி விட்டு, "நல்ல நாளாகட்டும்" (Have a good day) என்று கூறி சென்றுவிட்டார்கள். நம்ப முடியவேயில்லை. அவ்வளவு சந்தோஷம்.
இது ஒரு உதாரணம்தான். பலப்பல இடங்களில், பலப்பல சந்தர்ப்பங்களில் துபாயின் நல்ல முகத்தை நான் பார்த்திருக்கிறேன். எமிராட்டிகளுடன் பழகியுள்ளேன். நல்ல ஊர். நல்ல மக்கள். நல்ல பாதுகாப்பு. சுத்தமான குடிநீர். உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு. சுமூகமான சூழ்நிலை. மொத்தத்தில் துபாய், சுற்றி பார்க்க மற்றும் வாழவும் ஒரு சிறந்த இடம்.
நீங்கள் எல்லோருமே துபாய் பார்த்திருக்கலாம், சொல்லக்கேட்டிருக்கலாம். இங்கே வாழ்பவர்கள் கூட படிக்கலாம். சொல்லுங்களேன். சும்மா சொல்லுங்களேன். துபாய் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் விட்ட இடங்களைப்பற்றியும் சொல்லுங்களேன்.
--சங்கர் வெங்கடேசன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-dubai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக