Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

9 மாத குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; பாதிப்பு ஏற்படுத்துமா புதிய விதி? மருத்துவர் கூறுவது என்ன?

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மோட்டார் வாகன சட்டப் பிரிவு 129-ல் சில திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. இதனடிப்படையில், இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிகள் வரையறுக்கப் பட்டுள்ளன. ``நான்கு வயது வரையிலான குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, ஓட்டுநருடன் குழந்தையை இணைக்கும் வகையில் பெல்ட் அணிவிக்க வேண்டும்.

பைக்கில் ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள்

Also Read: குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்? #DoubtOfCommonman

இந்த பெல்ட் இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (BIS) தர நிர்ணயத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். இணைப்பு பெல்ட் எடை குறைவானதாகவும், நீளத்தைக் கூட்டி, குறைக்க ஏதுவான வகையிலும், நீர்புகா தன்மையுடனும் தரத்துடனும் இருப்பதுடன் 30 கிலோ எடையைத் தாங்கும் வகையிலும் இருக்க வேண்டும். இணைப்பு பெல்ட் தரமான நைலானில் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஓட்டுநர், குழந்தைக்கு நடுவே இணைப்பு பெல்ட்டில் பஞ்சு பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இருசக்கர வாகனத்துக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இதற்கு ஓட்டுநரே பொறுப்பேற்க வேண்டும். பி.ஐ.எஸ் தரத்துடன்கூடிய ஹெல்மெட்டை குழந்தைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது. இந்த வரைவு விதிகள் தொடர்பான ஆட்சேபங்கள், ஆலோசனைகளை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளருக்கு கடிதம் வாயிலாக அனுப்பலாம். commentsmorth@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்" என்று இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைவு அறிக்கை

Also Read: ₹64,000 கோடியில் மோடி தொடங்கி வைத்த மருத்துவ உள்கட்டமைப்புத் திட்டம்; எதற்காக?

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அரசு சிந்தித்தது வரவேற்கத்தக்கது. ஆனால், 9 மாதங்களான குழந்தையின் தலை மிகவும் மென்மையானதாக இருக்கும். அவர்களுக்கு ஹெல்மெட் அணிவது பிரச்னைகளை ஏற்படுத்துமா, அது எப்படிச் சாத்தியம் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து குழந்தைகள்நல மருத்துவர் ராகவனிடம் கேட்டோம். ``டூவீலரில் பயணிக்கும்போது, போதுமான பாதுகாப்பில்லாமல் குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு பயணிப்பவர்களை அதிக அளவில் சாலைகளில் பார்க்க முடிகிறது. அது மிகவும் ஆபத்தான போக்கு. இப்படியான சூழலில், குழந்தைகள் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் வரவேற்கக் கூடியவையே. ஆனால், 9 மாதமான குழந்தைகளுக்கு ஹெல்மெட் என்பதுதான் நடைமுறைக்கு ஒத்துவராத விஷயமாக இருக்கிறது. 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு என்றால் ஓரளவுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

9 மாத குழந்தைகள் தலையில் ஹெல்மெட் அணிவதை எரிச்சலாக உணர்வார்கள். எனவே, பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது ஹெல்மெட்டை கழற்ற முயல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பயணத்தின்போது குழந்தைகள் அப்படிச் செய்யும்போது ஓட்டுநரின் கவனம் சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாது, ஹெல்மெட் அணிவதால் வியர்வையால் அலர்ஜி பிரச்னைகள் வரலாம். ஆகையால் 9 மாத குழந்தைகளுக்கு இதை நடைமுறைப்படுத்துவது கடினமான விஷயம். இந்த விஷயங்களை உள்வாங்கி அரசு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

குழந்தைகள் நல மருத்துவர் ராகவன்

அதேபோல, 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான ஹெல்மெட்டும் அவர்களுக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட வேண்டும். தெர்மாகோலால் ஆன ஹெல்மெட்டோ, தலையில் செய்யப்படும் ஆபரேஷனுக்குப் பிறகு பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும் ஜெல் ஹெல்மெட் போன்றோ குழந்தைகளுக்கு வடிவமைக்கலாம். ஆனால், அவை சாமானியர்களும் வாங்கக்கூடிய விலையில் இருக்க வேண்டும். இவ்வகையான ஹெல்மெட்டுகள் 40 கி.மீ-க்கும் குறைவான வேகத்தில் செல்லும்போது மட்டுமே பாதுகாப்பு கொடுக்கும். அதற்குமேல் அதிகமான வேகத்தில் செல்லும்போது பலனளிக்காது. இதையும் மனதில் கொண்டு குறைவான வேகத்தில் பைக்கை ஓட்ட வேண்டும். 9 மாதங்கள் முதல் ஒன்றரை வயது வரையிலான குழந்தைகளுக்கு வேறு ஏதாவது பாதுகாப்பு நடைமுறைகளை யோசிக்கலாம். வேகக் கட்டுப்பாடு, பெல்ட் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்புடையவை" என்றார்.

அரசின் இந்த அறிவிப்பு குறித்த உங்களது கருத்தையும் ஆலோசனைகளையும் commentsmorth@gov.in மின்னஞ்சல் முகவரி வாயிலாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்குத் தெரியப்படுத்தலாம்!



source https://www.vikatan.com/news/india/doctor-opines-on-govt-draft-that-makes-helmet-mandatory-for-children-above-9-months

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக