Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

`எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்!' - முதலீட்டின் முக்கியமான மந்திரம் இது; ஏன்? - 38

நிதி உலகில் நாம் அடிக்கடி கேள்விப்படும் பழமொழி `அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்' என்பதே. முன்பு பார்த்தபடி, நம் போர்ட்ஃபோலியோவில் தங்கம், வங்கி எஃப்டி, கம்பெனி பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் என்று பலவகையில் முதலீடுகள் செய்யும்பட்சத்தில் ஒன்றின் மதிப்பு இறங்கினாலும், இன்னொன்று ஏறி நம் போர்ட்ஃபோலியோவை சமன்செய்யும். அதே போல் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவுக்குள்ளும் பல்வகைப்படுத்துதலைக் கைக்கொள்வது நல்லது. இந்த வகையில் செக்டோரல் ஃபண்டுகளும், இன்டர்நேஷனல் ஃபண்டுகளும் நமக்கு உதவுகின்றன.

Investment

Also Read: ரிஸ்க் குறைவு; ஆனால், வங்கியை விட அதிக லாபம்; கடன் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றவை? - 36

செக்டோரல் ஃபண்டுகள்:

பொதுவாக சந்தை பதினொன்று செக்டார்களாகப் பிரிக்கப்படுகிறது என்று முன்பு பார்த்தோம். பொதுவான அந்தப் பதினொன்று செக்டார்கள்:

  1. தகவல் தொழில்நுட்பம் (Information Technology).

  2. சுகாதார பராமரிப்பு (Healthcare).

  3. நிதி (Financials).

  4. நுகர்வோர் விருப்பம் (Consumer Discretionary).

  5. தொலைத்தொடர்பு (Communication Services).

  6. தொழில்துறை (Industrials).

  7. நுகர் பொருள்கள் (Consumer Staples).

  8. ஆற்றல் (Energy).

  9. பயன்பாடுகள் (Utilities).

  10. ரியல் எஸ்டேட் (Real Estate).

  11. பொருள்கள் (Materials).

செக்டார் மியூச்சுவல் ஃபண்டுகள், ஒவ்வொரு செக்டாரிலும் உள்ள நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து ஒரு ஈக்விட்டி ஃபண்டை உருவாக்குகின்றன. ஒரு செக்டார் மியூச்சுவல் ஃபண்டில் அந்த செக்டாரைச் சேர்ந்த பங்குகள் மட்டுமே இருக்கும். இப்படி ஐ.டி. ஃபண்ட்ஸ், ஹெல்த்கேர் ஃபண்ட்ஸ், ஃபைனான்ஷியல் ஃபண்ட்ஸ், எனர்ஜி ஃபண்ட்ஸ், ரியல் எஸ்டேட் ஃபண்ட்ஸ் போன்ற பல செக்டார் ஃபண்ட்ஸ் உள்ளன. தங்கம், வெள்ளி, பல்லேடியம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களை உள்ளடக்கிய ப்ரெஷியஸ் மெட்டல்ஸ் ஃபண்ட்ஸ் கூட இருக்கின்றன.

நன்கு வளர்ச்சி பெறும் ஒரு செக்டார் சார்ந்த பங்குகளில் ஒரு சிலவற்றில் மட்டுமே நாம் முதலீடு செய்கிறோம். நாம் தேர்ந்தெடுத்த பங்குகள் சரியாக வளர்ச்சி பெறாவிட்டால் நம் முதலீடு கரையும். திறமை வாய்ந்த ஃபண்ட் மேனேஜர் அந்த செக்டாரில் உள்ள சிறந்த பங்குகள் அனைத்திலும் முதலீடு செய்வதால் ரிஸ்க் பரவலாவதோடு வளர்ச்சியும் அதிகரிக்கிறது. (ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் டெக்னாலஜி டைரெக்ட் ஃபண்ட் மூன்று வருட ஆவரேஜ் வளர்ச்சி 37.31%; டாட்டா டிஜிட்டல் இந்தியா டைரெக்ட் ஃபண்ட் மூன்று வருட ஆவரேஜ் வளர்ச்சி 33.86%). ஆனால், இந்த செக்டார் எதிர்பார்த்தபடி வளர்ச்சி பெறாத பட்சத்தில் நஷ்டமும் அதிகமாகவே இருக்கும்.

Investment (Representational Image)

பொதுவாக, செக்டார்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏறுவதும், பின் இறங்குவதுமாக இருப்பதை சைக்ளிக்கல் என்பார்கள். இந்த ஏற்றத்தையும் இறக்கத்தையும் சரியாகக் கணித்து முதலீடு செய்ய அந்த செக்டார் பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். நம் போர்ட்ஃபோலியோவில் 5% முதல் 10% வரை செக்டார் ஃபண்டுகள் இருப்பது நலம்.

இன்டர்நேஷனல் ஃபண்ட்ஸ்:

விமானம், ஃபோன், இன்டர்நெட் போன்ற தொலைத் தொடர்புகளால் உலகம் கையளவாக சுருங்கிவிட்டது. உலகெங்கிலும் உள்ள சந்தை வாய்ப்புக்களைப் பயன்படுத்த உதவுபவை இன்டர்நேஷனல் ஃபண்ட்ஸ். இவற்றில் பல வகை உண்டு. இன்டர்நேஷனல் ஃபண்டுகள் நாம் வசிக்கும் நாடு தவிர மற்ற நாடுகளின் பங்குகளில் முதலீடு செய்யும். குளோபல் ஃபண்ட்ஸ் உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் (இந்தியா உட்பட) முதலீடு செய்யும்.

ஆசியா, ஜெர்மனி போன்ற பகுதி சார்ந்த ஃபண்டுகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கம்பெனிகளில் மட்டும் முதலீடு செய்யும். இவற்றை ரீஜனல் ஃபண்ட்ஸ் என்பார்கள். சீனா, ஜப்பான் போன்ற தனிப்பட்ட நாடுகளில் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்பவை கன்ட்ரி ஃபண்ட்ஸ்.

மற்ற நாடுகளின் பங்குகளில் முதலீடு செய்வதால் அந்த நாடுகள் பெறும் வளர்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள பங்குகளின் மதிப்பு அளவுக்கதிகமாக உயர்ந்துவிட்ட நிலையில் உலகின் வேறு சில பகுதிகளில் இருக்கும் அண்டர்வேல்யூட் பங்குகளில் முதலீடு செய்ய முடிகிறது. உலகத்தரம் வாய்ந்த அனலிஸ்ட்கள், ஃபண்ட் மேனேஜர்கள் ஆகியோரின் திறமை நமக்கும் பயன்படுகிறது. ஒரே வருடத்தில் 63.34% வளர்ச்சி தந்துள்ள ஈடல்வேஸ் கிரேட்டர் சைனா ஈக்விட்டி ஆஃப்ஷோர் ஃபண்ட், 53.83% வளர்ச்சி தந்துள்ள டி.எஸ்.பி. யூஎஸ் ஃப்ளெக்ஸிபிள் ஈக்விட்டி ஃபண்ட் போன்றவை தரும் லாபம் பல முதலீட்டாளர்களையும் கவர்ந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

Stock Market (Representational Image)

Also Read: மனைவிக்காக வாரன் பஃபெட் தேர்வு செய்த இண்டெக்ஸ் ஃபண்டுகள்; என்ன ஸ்பெஷல் தெரியுமா? - 37

ரிஸ்க் இல்லாத ரிட்டர்ன் இல்லை அல்லவா? அப்படி இந்த ஃபண்டுகளில் இருக்கும் ரிஸ்க்குகளில் கரன்சி ரிஸ்க் முக்கியமானது. உதாரணமாக, சீனா சார்ந்த ஃபண்டில் முதலீடு செய்யும்போது, சந்தை சார்ந்த ஏற்ற இறக்கம் மட்டுமன்றி, அதன் கரன்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் கூட நம் லாபத்தைப் பாதிக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் நாட்டின் அரசியல், சமூக மாற்றங்களும் நம் லாபத்தை முடிவு செய்யும். வேறு எல்லாவிதத்திலும் பல்வகைப்படுத்துதலை மேற்கொண்டபின், ஒரு சிறு தொகையை மட்டும் இதில் முதலீடு செய்யலாம்.



source https://www.vikatan.com/business/investment/why-diversification-is-very-important-in-investment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக