``தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் இருந்து காணாமல் போன சாமி சிலைகளை, கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள், கண்டுபிடித்ததை விட கடந்த 5 மாதங்களில் நாங்கள் 40 சதவீதம் கூடுதலாக சிலைகளை கண்டுபிடித்து மீட்டுள்ளோம்” என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவாரூரில் தெரிவித்தார். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் கமாலாலய குளத்தின் கரை, இடிந்து விழுந்ததை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சேகர்பாபு இதனை தெரிவித்தார்.
தொடர் கனமழையின் காரணமாக, திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தின் தென்கரையில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது, இப்பகுத் மக்களயும் இக்கோயிலின் பக்தர்களையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. ஏதேனும் அசம்பவிதம் நிகழாமல் தடுக்க, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர், மணல் மூட்டைகளையும், சவுக்கு மரங்களையும் கொண்டு தடுப்பு அரண்கள் அமைத்தனர். காவல்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Also Read: இடிந்து 2 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் கமலாலய குளத்தின் சுவர்!
இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இங்கு ஆய்வு செய்ய வந்தார். ஆய்வுக்கு பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘’இக்குளத்தின் தென்கரையில் உள்ள சுற்றுச்சுவர் 101 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்துள்ளது. இக்குளத்தின் சுவர், ஏற்கனவே கடந்த 2012, 2014-ம் ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்து சீரமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது 101 அடி நீளத்திற்கு இந்த மதில் சுவர் இடிந்து விழுந்திருப்பதோடு, மேலும் 40 அடி அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. கமலாலய குளத்தின் சுற்றுச்சுவரின் உறுதி தன்மை குறித்து வல்லுநர்கள் குழு மூலம் ஆய்வு செய்யப்படும். குளத்தின் கரையை சீரமைக்க போதிய அளவு நிதி பெற்று நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்’’ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், ``தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சாமி சிலைகளை பாதுகாக்க, 3,085 பாதுகாப்பு அறைகளை அமைக்கப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவைகள் விரைவில் கட்டி முடிக்கப்படும். திருவாரூரில் கல் தேர் வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றிலும் மரங்கள் நடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் காணாமல் போன சிலைகளை கண்டுபிடித்ததை விடவும், கடந்த 5 மாதங்களில் திமுக ஆட்சியில் நாங்கள் 40 சதவீதம் அதிக அளவு சிலைகளை கண்டுபிடித்து மீட்டுள்ளோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை விவரங்களை திமுக-வின் ஒரு ஆண்டு ஆட்சி நிறைவின்போது நமது முதலமைச்சர் அறிவிப்பார்’’என தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/minister-sekar-babu-talks-about-the-idol-brought-back-under-new-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக