அரபு மண்ணில், கடைசியாக, தாங்கள் ஆடிய 14 டி20 போட்டிகளிலும் வென்று, மரண ஃபார்மில், மிரள வைக்கிறது பாகிஸ்தான். இந்த உலகக் கோப்பையில், இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில், மூன்றிலுமே வெற்றி பெற்று, அரை இறுதியில் மிகச் சுலபமாகத் தடம் பதித்துள்ளது பாகிஸ்தான்.
இந்த வெற்றிகளுக்கான காரணிகளாக பாபர், ரிஸ்வான், ஷாகீன் அஃப்ரிடி எனப் பல பெயர்கள் இருந்தாலும், பைனல் பன்ச் கொடுத்தது ஆபத்பாந்தவனாக வந்த ஆசிஃப் அலிதான்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அதிவேகத்தோடு இருபுறமும் ஸ்விங்காகும் பந்துகள், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் வித்தைகள், அற்புதமான ஃபீல்டிங், ஓப்பனிங் வல்லமை என வாகை சூடுவதற்கான அத்தனை அம்சங்களும் நடப்பு அணியில் கனகச்சிதமாக அமைந்திருக்கின்றன. ஆனால், அதனையும் தாண்டி, கோப்பையைக் கைப்பற்றுவதற்கான பத்தாவது பொருத்தமான பவர் ஹிட்டிங் ஃபினிஷராக யார் இருக்கப் போகிறார் என்பது குறித்துத்தான் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே விவாதங்கள் எழுந்தன.
வலுவான அந்த அணியில், இது ஒன்று மட்டுமே மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அப்படி ஒரு எண்ணம் எழுந்ததற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. சமீப ஆண்டுகளில் பாபரின் வரவுக்குப் பின், அவர்களது டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் வரிசையில் வீரர்கள் பக்காவாகப் பொருந்திப் போய், இலக்கில் பெரும்பங்கு எட்டப்பட்டு விட்டாலும், பல போட்டிகளில் ஃபயர் விடும் ஃபினிஷர்கள் இல்லாமல் நூலிழையில் வெற்றிகள் தவறிப் போய் வந்தன. அதே கதைதான், மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியாமல் போன போதும் நடந்திருந்தது. ஆனால், கடந்த இரண்டு போட்டிகள், தற்போதைக்கு ஃபினிஷர் இடத்துக்கு, "ஆள் தேவை இல்லை!" அறிவிப்பை வெளியிட வைத்துவிட்டது.
உபயம்: பாகிஸ்தானின் தற்போதைய மாஸ் ஹீரோவாக வலம் வரும் ஆசிஃப் அலி!
உள்ளூர்ப் போட்டிகளில் அவர் எப்போதும் வஞ்சனையின்றி ரன் குவிப்பவராகவே வலம் வந்திருக்கிறார், மேட்ச் வின்னராக அவதாரம் எடுத்திருக்கிறார். வெறும் 19 வயதில் மூன்று ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்த போதிலும் கூட, தனக்கு வாய்ப்புக் கிடைத்த முதல் அறிமுக டி20 போட்டியில், முல்தான் டைகர்களுக்கு எதிராக அபாரமான சதத்தைப் பதிவு செய்திருந்தார் ஆசிஃப். இதைத் தவிர்த்து அவரது கேமியோ ரோலுக்காகவே உற்று நோக்கப்பட்டு, நம்பிக்கைக்குரியவராகப் பார்க்கப்பட்டார்.
மிக நளினமாக, இலகுவாகப் பறக்க விடப்படும் அவரது பல சிக்ஸர்களை, உள்ளூர் மைதானங்கள் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றன. இவ்வளவு ஏன், 2018 பிஎஸ்எல்லில் ஷாகீன் அஃப்ரிடி, பந்தால் கோலோச்சினார் என்றால், அந்த ஆண்டு, பேட்டை ஆயுதமாக்கி அதனைத் தனக்காகக் பேச வைத்து, 169 ஸ்ட்ரைக் ரேட்டோடு கலங்கடித்தவர் ஆசிஃப். அந்த சீசனை, இஸ்லாமாபாத் யுனைடெட் வெல்ல ஆசிஃபே பிரதான காரணம். அதே ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவின் மசான்சி சூப்பர் லீக்கில், கேப் டவுனுக்காக ஆடியபோதும், அத்தனை பேருடைய கவனத்தையும் தனது பக்கம் கட்டிப் போட்டார் ஆசிஃப். குறிப்பாக, டர்பன் ஹீட்டுக்கு எதிரான போட்டியில், வெறும் 33 பந்துகளில் 80 ரன்களை விளாசி, மொத்த எதிரணியின் சப்த நாடியையும் ஒடுக்கி நிசப்தமாக்கினார். தனது டி20 கரியரில், 250-க்கும் அதிகமான பவுண்டரிகளை விளாசியிருக்கும் ஆசிஃப், அதற்குச் சமமான சிக்ஸர்களையும் பறக்க வைத்திருக்கிறார், என்னும் உபரித் தகவல் ஒன்றே, அவர் எவ்வளவு ஆபத்தான வீரர் என்பதனை அடிக்கோடிட்டுக் காட்டும்.
Also Read: அவுட், நாட் அவுட் - நடுவே குழப்பும் அம்பயர்ஸ் கால்... DRS ஆல் பாதிக்கப்படும் அணிகள்!
நிற்க! இது எல்லாம், உள்ளூர்க் கதைதான். சர்வதேசத் தளத்தில், எப்போதுமே, சொல்லிக் கொள்ளும்படியான மிகப்பெரிய ஆளுமையாக ஆசிஃப் விளங்கியதேயில்லை. 2018 பிஎஸ்எல்லில், சூப்பர் ஓவரில் அவர் பறக்கவிட்ட, சிக்ஸரும், அதற்கடுத்த போட்டியில் அவர் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்களும், இவர்தான் பாகிஸ்தான் தேடிக் கொண்டிருந்த பவர் ஹிட்டர் எனக் கொண்டாட வைத்து, அவருக்கு பாகிஸ்தான் ஜெர்ஸியை அணிவித்து அழகு பார்க்க வைத்தது. ஆனாலும் கூட, அணி எதிர்பார்த்ததை முழுமையாகச் செய்துவிட ஆசிஃபால் இயலவில்லை.
2018-ல், ஜிம்பாப்வேக்கு எதிராக, அவர் அடித்த, 41 ரன்கள்தான் அவரது அதிகபட்ச டி20 ஸ்கோரே. சரி, ஒருநாள் போட்டிகளில் அவரது ஆட்டத்திறம் எப்படி என்று பார்த்தால், 25.46 ஆவரோஜோடு, மிகச் சுமாரான ஆட்டமே அவரிடமிருந்து வெளிப்பட்டிருந்தது. எனினும், அவர் இறங்கும் பின்வரிசையை மனதில் நிறுத்தி, சராசரியைப் புறந்தள்ளி, ஸ்ட்ரைக் ரேட்டைப் பார்த்தாலும், அதுவும், 122 என சராசரியாகவே இருந்தது. அதையும் தவிர்த்து, 2019 உலகக் கோப்பையில் அடித்த ரன்கள், கடைசியாக பாகிஸ்தான் மேற்கொண்ட தென் ஆப்ரிக்கா தொடரில் இவரது ஆட்டத்திறம் என ஆசிஃப், தொடர்ச்சியாகவே சோபிக்கத் தவறிக் கொண்டிருந்தார்.
குறிப்பாக டி20-ல், சர்வதேச அரங்கத்தில் அவரது பேட் எப்பொழுதுமே சிறப்பாகப் பேசியதுமில்லை, சாதனைக் கதைகள் படைத்ததுமில்லை. உள்ளூர் டி20-களில், 147 என்னும் அதிரடி ஸ்ட்ரைக்ரேட்டை வைத்திருக்கும் ஆசிஃப், இந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக, சர்வதேச அரங்கில் டி20-ல் வெறும் 123.7 என்ற அளவில் மட்டுமே ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார். மொத்தமாகவே அவரது டி20 கரியர், தோல்வி கண்டது எனச் சொல்ல முடியாதுதான் என்றாலும், அவர் இறங்கும் பொசிஷனுக்கு, அவர் முழுமையான நியாயம் கற்பித்துவிடவுமில்லை.
இது எல்லாம்தான், இந்த உலகக் கோப்பைக்கான அணியில் ஆசிஃபின் பெயர் இடம் பெற்றபோது, பல உதடுகளை முணுமுணுக்க வைத்தது. 'பாகிஸ்தானில் பவர் ஹிட்டர்களுக்கா பஞ்சம்?!' எனக் குறைபட்டுக் கொள்ள வைத்தது. பாகிஸ்தான் ரசிகர்களே கூட, இது குறித்து வெளிப்படையாகக் கருத்துக்களைத் தெரிவிப்பதும் கண்டனக் குரலினை எழுப்புவதுமாக இருந்தனர். அத்தகைய சந்தேகங்களும், விமர்சனக் கணைகளும் ஆதாரமற்றவை இல்லை.
ஆசிஃப் கடந்து வந்து காலச்சுவடுகளை, பின்நோக்கிப் பார்த்தால், அவரின் மேல் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தது, இஸ்லாமாபாத் யுனைடெட்டின் தலைமை பயிற்சியாளரான டீன் ஜோன்ஸ்தான். யாருமே வைக்காத, அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் ஆசிஃப் மீது வைத்திருந்தார். அந்த அணி, 2018-ல் சாம்பியன் மகுடம் சூடியதற்கு அணியை இரண்டு தண்டவாளங்களாக இருந்து, முன்னெடுத்துச் சென்ற இவ்விருவருமேதான் காரணகர்த்தாக்கள். தனது இரண்டு வயதுக் குழந்தையை, ஆசிஃப் புற்று நோய்க்குப் பறிகொடுத்து, இடிந்துபோய் இருந்தபோது, அதைப் பற்றி பேச முற்பட்டு பேசவே முடியாமல் கண்கலங்கி விடைபெற்றிருந்தார் டீன் ஜோன்ஸ். அந்த அளவுக்கு இருவருக்கும் இறுக்கமான பிணைப்பு இருந்தது. அந்தச் சமயத்தில் இருந்த அவரது ஆசிஃபுக்கான ஆதரவு, கடைசி வரை நீடித்தது.
2020 ஆண்டு, பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரிலும், இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்த அணியிலும், ஆசிஃபின் பெயர் விடுவிக்கப்பட்ட போதும் டீன் ஜோன்ஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் இந்த முடிவு ஆச்சர்யமளிக்கிறது என, ஆசிஃபுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தார்.
ஆயினும், ரசிகர்களின் ஆதங்கத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. முன்னதாக இங்கிலாந்தில் பேக் டு பேக் அரைசதங்களை அடித்தவர்தான் என்றாலும், 2018 ஆசியக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான அவரின் ஆட்டம் நினைவுகூரத்தக்கதுதான் என்றாலும், அதெல்லாம் பழங்கதை. அவரது சமீபத்திய ஃபார்ம், கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. 2018-ல், உச்சகட்டமாக 139 ஆக இருந்த டி20 ஸ்ட்ரைக்ரேட், 2019-ல் 108 என அதள பாதாளத்திற்குப் பாய்ந்துவிட்டது. 2020-ல் அவரது சராசரி, வெறும் 10 என்பதுதான் உலகக் கோப்பையில் அவரது இடம் குறித்த கேள்வியை ரசிகர்கள் மனதில் எழுப்பியது.
விமர்சனங்களுக்கான விடையை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் விதம் வெல்வேறு மாதிரியாக இருக்கும். சிலர் வார்த்தைகளால் வடிப்பர், சிலர் வஞ்சம் சுமப்பர், ஆசிஃப் அலி போன்ற சிலரோ "காரியம் துணை" என அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவர்.
வார்ம் அப் போட்டியிலேயே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 18 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்து நம்பிக்கை முத்திரையை, தன் மேல் பதித்தார் ஆசிஃப். இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அவர் களம் இறங்க வாய்ப்பின்றி, பாபரும் ரிஸ்வானும், போட்டியை முடித்து வைத்துவிட்டனர்.
Also Read: கிரிக்கெட் போட்டியில் முட்டிபோடாத விவகாரம் ... வருத்தம் தெரிவித்த குவின்டன் டிகாக்... மாற்றம் ஏன்?
தவறவிட்ட அந்த வாய்ப்பு, அடுத்த இரண்டு போட்டிகளிலுமே கிடைக்க, அதனைக் கனகச்சிதமாகப் பயன்படுத்தி இருந்தார் ஆசிஃப். நியூஸிலாந்துக்கு எதிரான 27 ரன்களும் சரி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அவர், 7 பந்துகளில் அடித்த 25 ரன்களும் சரி, டாப் கிளாஸ் கேமியோக்கள். ஷார்ட் பால்கள், ஃபுல் பால்கள் எனச் சந்தித்த அத்தனையும் பவுண்டரி லைனைத் தாண்டிப் பறந்தன.
இந்த உலகக் கோப்பையில், அவர் சந்தித்திருப்பது 19 பந்துகள்தான், அதில் 7 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் பறந்துள்ளன. இந்த உலகக் கோப்பையில் 274 என்னும் அவரது ஸ்ட்ரைக் ரேட்டுக்குப் பக்கத்தில் கூட, வேறு எந்த பேட்ஸ்மேனாலும் தற்சமயம் நெருங்க முடியாது. அப்பட்டியலில் அவர்தான், முதல் இடத்தில் உள்ளார்.
நம்பர்களைத் தாண்டி, அந்த ஆட்டங்களில் அவரிடம் பிரதிபலித்த நம்பிக்கையின் பிம்பம்தான், அவரை ஆகச்சிறந்த ஃபினிஷராக அடையாளம் காட்டியுள்ளது. நவீனைத் தவிர்த்து, அடுத்த ஓவரில் கரீமின் பந்துகளை டார்கெட் செய்த சாமர்த்தியமாகட்டும், முந்தைய ஓவரில், ஷதாப் கானுக்குக் கடைசிப் பந்தில் சிங்கிளுக்கு 'நோ' சொல்லி, ஸ்ட்ரைக்கை தன்வசம் வைத்துக் கொண்ட தன்னம்பிக்கையோடு கூடிய தைரியமாகட்டும், ஷார்ட் பால், ஸ்லோ பால் என்ற பாகுபாடின்றி, 'சிங்கிளால் பேசத் தெரியாது, சிக்ஸரால் மட்டுமே பேசத் தெரியும்' என ஆசிஃப் காட்டிய வாண வேடிக்கையாகட்டும், அத்தனையும்தான் பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தன.
6, 0, 6, 0, 6, 6 என அந்த ஓவரில் அடித்த ஒவ்வொரு சிக்ஸரும், ரசிகர்களின் இதயங்களைச் சுமந்தே உயரத்தில் பறந்தன. நடுவில் மறுக்கப்பட்ட சிங்கள்களும் அவரது ஆளுமையை அடையாளம் காட்டின.
இரண்டு போட்டிகளிலுமே, ஆட்டமிழக்காததோடு, வின்னிங் ஷாட்டையும் அவரேதான் அடித்தார். சவுத்தியின் பந்துகளில், அவரடித்த அடுத்தடுத்த சிக்ஸர்கள் எல்லாம், சாதாரண ஒருவருக்குச் சாத்தியமே இல்லை. இக்கட்டான நிலையில் இருந்த அணிக்கு, இரண்டு போட்டிகளிலுமே வெற்றியைப் பரிசாக வழங்கி உள்ளன ஆசிஃபின் இன்னிங்ஸ்கள்.
ஓப்பனிங் மற்றும் மத்திய வரிசையில் ஏற்கெனவே பலம் கொண்டதாக மாறி நிற்கும் பாகிஸ்தானுக்கு, பின்வரிசைக்கு அபரிதமான பலம் சேர்த்திருக்கிறது, ஆசிஃபின் தற்போதைய ஃபார்ம். எஞ்சியுள்ள போட்டிகளிலும், இது தொடருமேயானால், 2009 சாம்பியன்கள், இந்த வருட கோப்பையை நோக்கியும் ராக்கெட் வேகத்தில் பயணிப்பார்கள்.
source https://sports.vikatan.com/cricket/the-rise-of-a-successful-finisher-asif-ali-and-his-importance-in-the-pakistan-team
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக