Ad

சனி, 30 அக்டோபர், 2021

உயிரிழந்த மகன், கலங்கி நின்ற தாய்; சுடுகாடு வரை சென்று அடக்கம் செய்து நெகிழச் செய்த பெண்!

தஞ்சாவூர் அருகே ஆதரவற்ற தாய் ஒருவர் தன் மகனுடன் பேருந்து நிலையத்தில் வசித்து வந்த நிலையில், உடல்நிலைக் குறைபாட்டால் அவரின் மகன் உயிரிழந்துவிட்டார். ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லாமல் அந்தத் தாய் தனி ஆளாகக் கதறியுள்ளார். இதை அறிந்த சமூக ஆர்வலரான பெண் ஒருவர், நாள் முழுக்க அந்த ஆதரவற்ற தாயுடன் இருந்ததோடு, சுடுகாடு வரை சென்று அவர் மகன் உடலை அடக்கம் செய்ய உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகன் உயிரிழந்த சோகத்தில் தாய்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி. இவரின் கணவர் திருநீலகண்டன் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். பாக்கியலெட்சுமி 6-ம் வகுப்புப் படிக்கும் தன் மகள் சாம்பவியுடன் வசித்து வருகிறார். தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பாக்கியலெட்சுமிக்கு அதில் கிடைக்கக்கூடிய வருமானமே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கஜா புயலில் கிடைத்த நிவாரணப் பணத்தில் பேராவூரணி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு வாலி பால் மைதானம் (கோர்ட்) அமைத்துக் கொடுத்துள்ளார்.

தந்தையின் நினைவு நாளுக்காகத் தன் மகள் சாம்பவி சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காகத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் பாக்கியலட்சுமி வழங்கினார். இதற்காக மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

பேராவூரணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள் என சுமார் 100 ஆதரவற்றவர்கள் சாலையோரத்தில் வசித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பால் அவர்கள் உணவின்றி தவித்ததை அறிந்த பாக்கியலெட்சுமி, `அன்பில் நாம் அறக்கட்டளை, அன்னம் பகிர்ந்திடு' என்ற பெயரில் கடந்த 90 நாள்களாகத் தினமும் மதிய உணவு வழங்கி ஆதரவற்றவர்களின் பசி போக்கி வருகிறார்.

பேராவூரணி அரசு மருத்துவமனையில்

இதற்கிடையில், பேராவூரணி பேருந்து நிலையத்தில் மனவளர்ச்சி குன்றிய தன் 47 வயது மகன் முத்துகிருஷ்ணனுடன் சந்திரா (65) என்ற முதிய பெண்மணி ஆதரவின்றி வசித்து வந்துள்ளார். மகனுக்கு வந்த மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தனக்குக் கிடைத்த முதியோர் உதவித்தொகை ஆகியவை உடல் நிலை பாதிக்கப்பட்ட முத்து கிருஷ்ணனின் சிகிச்சைக்கு செலவாகிவிட, பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவை வாங்கித் தன் மகனுக்குக் கொடுத்து தானும் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை முத்துகிருஷ்ணன் உயிரிழந்து விட, தனக்கு துணையாக இருந்த ஒரே மகனும் தனியாகத் தவிக்க விட்டுச் சென்றுவிட்டதாக அந்தத் தாய் கதறியது பலரையும் கலங்க வைத்தது. அங்கிருந்த சிலர் சந்திராவிடம் பணம் கொடுக்க, ``என் மகனே போயிட்டான், பணத்தை வச்சு என்ன பண்ண போறேன்? அவனுக்கான கடைசி காரியத்தை மட்டும் செஞ்சு கொடுத்தா அவன் ஆத்மா நிம்மதியா அடங்கிடும்" என்று கலங்கியுள்ளார்.

பாக்கியலெட்சுமி மற்றும் சந்திரா

Also Read: என் அம்மாவுக்கும் கணவருக்குமான ஈகோ பிரச்னை; நிம்மதியிழந்த நான்; என்ன செய்ய? #PennDiary 39

இதையடுத்து உடல் கூராய்வுக்காக முத்துகிருஷ்ணன் உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. மகன் மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டுக் கிடக்க, ஆறுதல் சொல்லி தேற்றக் கூட ஆளில்லாமல் சந்திரா தனி ஆளாகக் கதறியது பலரையும் கலங்கச் செய்தது. இதையறிந்த பாக்கியலெட்சுமி மருத்துவமனைக்கு வந்து, சந்திராவுக்குத் துணையாக நின்றதுடன் ஆறுதல் வார்த்தைகளைக் கூறித் தேற்றியிருக்கிறார்.

பாக்கியலெட்சுமி கையைப் பற்றிக்கொண்ட சந்திரா, ``எனக்குனு யாரும் இல்ல; கடைசி வரைக்கும் எங்கூட நில்லும்மா" என்று கண்கள் கலங்கியிருக்கிறார். உதவிக்கு ஆளில்லாமல் மருத்துவமனையின் ஃபார்மாலிட்டிக்காக பாக்கியலெட்சுமி அல்லாடிக் கொண்டிருந்ததைக் கவனித்த திருக்குறள் பேரவையின் உறுப்பினரான செந்தில்குமார், தானும் சந்திராவுக்குத் துணையாக நின்றுள்ளார்.

அடக்கம் செய்யப்பட்ட மகன் உடல்

Also Read: ஒரு மணி நேரத்தில் பெண்ணுக்கு வீடு வழங்கிய ஆட்சியர்; கடிதம் மூலம் பாராட்டிய தலைமை செயலாளர்!

இந்தத் தகவல் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் கவனத்திற்குச் செல்ல, அவர் முத்துகிருஷ்ணனின் இறுதிச் சடங்குக்கான செலவை ஏற்றுக்கொண்டார். உடல் கூராய்வு முடிந்து உடல் ஒப்படைக்கப்பட்டதும் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாக்கியலெட்சுமியும் சுடுகாட்டிற்குப் புறப்பட, அங்கிருந்த பெண்கள் சிலர், `பொண்ணுங்க சுடுகாட்டுக்குப் போகக் கூடாது' என்று தடுத்துள்ளனர். ``சந்திரா மட்டும் போய் அங்க அழுதுட்டு இருப்பாங்க. அவங்களைத் தேற்ற யாராவது கூட இருக்கணும், நான் போறேன்" என்று சொல்லிவிட்டுச் சுடுகாட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் பாக்கியலெட்சுமி, செந்தில்குமார், போலீஸ் ஏட்டு சக்திவேல் உள்ளிட்டோர் சுடுகாட்டிற்குச் சென்றதுடன் பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் உடலை அடக்கம் செய்தனர். ``இனி நான் இருந்து என்ன பண்ணப் போறேன், என் மகனோடு சேர்த்து என்னையும் புதைச்சுடுங்க" என்று சந்திரா கதற, ``மகளா இருந்து நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி சந்திராவை நெஞ்சில் சாய்த்துக்கொண்டார். பொதுவாக பெண்கள் சுடுகாட்டிற்குச் செல்ல மாட்டார்கள். அதுவும் கிராமங்களில் அவர்களை அனுமதிப்பதே இல்லை.

ஆதரவற்ற தாய்

Also Read: வாட்ஸ்அப் மூலம் திரட்டப்பட்ட ₹6 லட்சம் நிதி; முதிய தம்பதிக்கு வீடு கட்டிக் கொடுத்த தோழர்கள்!

இந்நிலையில், ஒரு நாள் முழுக்க ஆதவற்ற தாயுடன் இருந்து சுடுகாடு வரை சென்று உடலை அடக்கம் செய்வது வரை இருந்து அனைத்தையும் செய்திருக்கிறார் பாக்கியலெட்சுமி. சந்திராவுக்கு புதிய உடைகள் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்து, அவர் தற்காலிகமாகத் தங்குவதற்கான ஏற்பாட்டையும் செய்து கொடுத்திருக்கிறார். மருத்துவமனையில் தொடங்கி பல செலவுகளுக்கும் ரூ. 4,000 வரை செலவழித்திருக்கிறார். போலீஸ் ஏட்டு சக்திவேல், ``ஒரு பெண்ணு தைரியமா சுடுகாடு வரை வந்துடன் தேவையானதையும் செய்து கொடுத்தாங்க' என்று பாக்கியலெட்சுமி பற்றி நெகிழ்கிறார். பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

பாக்கியலெட்சுமியிடம் பேசினோம். ``ஆதரவற்றவர்களுக்கு தினமும் மதியம் உணவு கொடுத்துட்டு வர்றேன். அப்ப சந்திராவுக்கும், அவங்க மகனுக்கும் கொடுப்பேன். பணமும் இல்ல, சனமும் இல்ல, ஆதரவற்றுக் கிடக்கிறோம்னு சந்திரா அடிக்கடி கலங்குவாங்க. தன் மகனுக்காவே தான் வாழ்ந்துட்டு இருப்பதா சொல்வாங்க. மகன் பிரிவைத் தாங்க முடியாம சந்திரா தவித்த தவிப்பை என்னால உணர முடிந்தது. அதுவே என்னை சுடுகாடு வரை போகவெச்சது. காரியம் முடிஞ்ச பிறகு, கண்ணீரும் நெகிழ்ச்சியுமா என்கிட்ட பேசினாங்க. துன்பத்துல இருக்கும்போது ஆதரவும் இல்லாம இருக்குறவங்களுக்கு `நாங்க இருக்கோம் உங்களுக்கு'னு சொல்றது நம்ம ஒவ்வொருத்தரோட கடமை'' என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/thanjavur-woman-helped-a-stranded-poor-old-woman-to-conduct-last-rites-of-her-son

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக