Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

முல்லைப்பெரியாறு அணை: கேரளாவின் ஆய்வு, தொடர் கோரிக்கை.. இரண்டு மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு!

முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும், இதனால் பல லட்சம் மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் கேரளத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ச்சியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 16 -ம் தேதி கேரளாவில் தொடர்மழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்குவதை கைவிட வேண்டும் வேண்டும் என்ற போர்கொடி மேலும் உயரத் தொடங்கியது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் மலையாள நடிகர் பிரித்விராஜ், 125 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை செயல்படுவதை அனுமதிக்க முடியாது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து மலையாள நடிகர்களின் ரசிகர்கள் `டிகமிஷன் முல்லைப் பெரியாறு டேம்’ என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

டேம்

இதற்கு தமிழகத்தில் இருந்து கண்டன குரல்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் ``முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதேவேளையில் முல்லைப்பெரியாறு அருகே ரூ.1500 கோடி மதிப்பீட்டில் புதிய அணை விரைவில் கட்டப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே ரூல் கர்வ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் கேரளா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணையில் 139.50 அடி நீரை நவம்பர் 11 ஆம் தேதி வரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், பீர்மேடு எம்எல்ஏ வாலுர் சோமன், இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் முல்லைப்பெரியாறு அணையின் ஷட்டர் பகுதியைப் பார்வையிட்டனர். இதையடுத்து தேக்கடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரோஸி அகஸ்டின், ``இன்றைய(நேற்று) நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.20 ஆக உள்ளது. விரைவில் 139.50 அடியைக் கடந்துவிடும். எனவே அக்டோபர் 29-ம் தேதி(இன்று) காலை 7 மணிக்கு அணையைத் திறப்பது உறுதி எனக் கூறியுள்ளார்.

பார்வையிட்டனர்

முன்னதாக, கேரள நீர்வளத்துறை சார்பில், முல்லைப்பெரியாறு அணையில் அக்டோபர் 29 ஆம் தேதி காலை 7 மணிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. எனவே வல்லக்கடவு, வண்டிப்பெரியார், உப்புதுறை, சப்பாத்து, இடுக்கி ஆகிய பகுதிகளில் முல்லைப்பெரியாறு கரையோர வசிக்கும் மக்களுக்கு தண்டோரா போட்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் மேடான பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இடுக்கி மாவட்ட முல்லைப்பெரியாறு கரையோரப் பகுதிகளில் தண்டோரா போடப்பட்டுள்ளது.

Also Read: முல்லை பெரியாறு: கேரள அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் இந்த வரலாறு தெரியுமா?

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். `முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோது, முதல் கட்ட எச்சரிக்கையும், 138 அடியை எட்டினால் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும் விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 142 அடி வரை நீர் தேக்க உத்தரவு பெறப்பட்டுள்ள நிலையிலும், பழைய முறைப்படி 136 மற்றும் 138 அடி எட்டியபோது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தவறானது. முதல் எச்சரிக்கை 140 அடி எட்டியபிறகும், இரண்டாம் எச்சரிக்கை 142 எட்டிய பிறகும் விடப்பட்டிருக்க வேண்டும். தமிழக கட்டுபாட்டில் உள்ள அணையை கேரள அதிகாரிகளால் திறக்க முடியாது’ என்றனர். ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ``தமிழ்நாடு அரசு அணையை திறப்பது குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் அணையை திறக்கப்போவதாக இடுக்கி மாவட்டத்தின் முல்லைப்பெரியாறு கரையோரப் பகுதிகளில் காலை 7 மணிக்கு அணை திறக்கப்பட உள்ளதாக தண்டோரா போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் அணைக்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளார். கேரள அரசு அறிவித்துள்ளது என இந்திய இறையாண்மைக்கு எதிரானது. கேரள அரசு தமிழக முதல்வரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டதாக கூறுகின்றனர். இதில் வாய்மொழி உத்தரவு எதுவும் செல்லாது. எழுத்துப் பூர்வமான உத்தரவு மட்டுமே செல்லுபடியாகும். முல்லைப்பெரியாறு அணையில் 139.50 அடி நீரை நவம்பர் 11 ஆம் தேதி வரை தேக்கிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடைபிடித்தாக வேண்டும்” என்றார்.

முல்லை பெரியாறு அணை

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை இன்று காலை திறக்கப்பட்டது. மொத்தம் 13 மதகுகள் கொண்ட அணையில் இருந்து 534 கன அடி நீர் 3, 4வது மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால் 1000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை முதல் இடுக்கி அணை வரை உள்ள கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னதாக கேரள முதல்வர் முல்லை பெரியாறு அணைடை திறப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mullaiperiyar-dam-issue-and-opened-after-kerala-request

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக