பூமியின் சுழற்சி யாருடையத் தேவைகளுக்காகவும் அவசியத்திற்காகவும் தன் வேகத்தை மட்டுப்படுத்துவதோ வேகப்படுத்துவதோ கிடையாது. ஆனால் வருடத்திற்கு முன்னூற்றி அறுபத்திஐந்தே கால் நாட்கள். ஒரு நாளுக்கு இருபத்தி நான்கு மணி நேரங்கள். ஒரு மணி நேரத்திற்கு அறுபது நிமிடங்கள். ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் எனக் கூறு போட்ட மனிதர்களுக்கு மட்டும் அதீத சந்தோஷத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் காலம் மற்றும் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை அறியாமல் பயத்தோடு நகர்த்துகிற காலம் என இரண்டு காலத் தருணங்களிலும் பூமியின் வேகம் மிக மெதுவாகவும் இன்னும் ஒரு சிலருக்கோ மிக மிக மெதுவாகவும் நகர்வதாய் உணர்கிறார்கள். விஜயாவின் ஒரு கையில் கண்ணகப்பையும் மறுகையில் ரோஸ் நிறக் கார்ட்டையும் பார்த்ததும், பூமி மிக மிக மெதுவாகச் சுழல்வதாய் தான் ரவிக்குத் தோன்றியது.
முதலில் அவனுள் தோன்றிய சந்தேகம் அம்மா கையில் இருப்பது ப்ரோக்ரஸ் கார்ட் தானா என்பதில் துவங்கி அடுத்ததாக அது ப்ராகரஸ் கார்டாகவே இருக்கும் பட்சத்தில் அந்தக் கார்ட் தன்னுடைய கார்டா அல்லது தம்பி சந்திரனுடைய கார்டா என்பதில் வந்து நின்று சற்று இளைப்பாறியது. அது இளைப்பாறியத் தருணத்தில் சந்திரன் அமர்ந்து பனங்கிழங்கைச் சாப்பிடும் அழகைப் பார்த்தால் அவனுடையக் கார்டாக இருக்க வாய்ப்பில்லை என்கிற கணிப்பில் ஆரம்பித்து அது தன்னுடையக் கார்டாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற ஊர்ஜிதத்தில் வந்து நின்றது.
மனம் ஊர்ஜிதம் செய்ததும், விஜயாவின் கையில் இருப்பது ப்ராகரஸ் கார்ட் தானா என்கிற சந்தேகம் அவனை விட்டு அகன்றுவிட்டது. குறைந்தளவு மார்க் வாங்கியதோ அல்லது சிவப்பு மசியால் கோடு போட்டு ஃபெயில் என்று காட்டியிருக்கும் மார்க்கையோ குறித்து கவலையில்லை ஏதேனும் சொல்லித் தப்பிவிடலாம். மாறாக மொத்த மதிப்பெண்களுக்குக் கீழாக வருகை என்று இருக்கும் கட்டத்தினுள் 18/18 என்று இல்லாமல் 13/18 என்று இருப்பதைப் பார்த்திருந்தால் என்ன செய்வது. அதை எப்படி சமாளிப்பது. அந்த ஐந்து நாட்களுக்கும் பள்ளிக்குச் செல்லாமல் எங்கே சென்றாய் என்று அடுத்த கேள்வி வருகையில் எங்கே சென்றதாய் சொல்வது என யோசிக்க யோசிக்க, அவனுடைய பாதத்தில் துளிர்த்த வேர் பூமியை சுற்றவிடாமல் தடுத்து நிறுத்தியிருப்பதாய் தோன்றச் செய்தது. அப்படியே திகைத்துப் போய் நின்றவன் மனதினுள் முதன் முதலாக ஒரு தீர்க்கமான கேள்வி எழுந்தது. ‘நமக்கெ ப்ராகரஸ் கார்டு எப்படி அம்மெக்க கைல வந்திச்சி’
தான் நின்ற இடத்திலிருந்து நகராமலே தலை மட்டும் திருப்பிச் சந்திரனைப் பார்த்தான். அவன் இன்னமும் பனங்கிழங்கை கடித்து மென்று தின்றுக் கொண்டிருந்தான். அவன் பனங்கிழங்கை மெல்லும் சப்தம் அங்கிருந்த நிசப்தத்தைக் கிழித்ததோடு அல்லாமல் ரவியின் செவிப்பறையையும் கிழிப்பதைப் போல ரவிக்குத் தோன்றியது. ‘இவந்தா வாங்கிட்டு வந்து கொடுத்துருப்பான்’ அவனுள் எழுந்த கோபத்தை அவன் கண்கள் வெளிப்படுத்தின.
Also Read: ஊசிப்புட்டான்: ``இப்ப யார் குடியைக் கெடுக்கப் போறே?” | அத்தியாயம் - 5
“லேய் அவன ஏம்ல மொறைக்குத” விஜயாவின் குரல் கோபமாக வெளிப்படாமல் அவளுக்கே உரித்தான அதிகாரத்தோடு வெளிப்பட, ரவிக்கு குழப்பம் இன்னும் அதிகமாகியது. ‘ஒருவேள அம்மெக்க கைல யிருக்கெது நமக்க ப்ராகரஸ் கார்டு இல்லியா’ திரும்பி மீண்டும் விஜயாவைப் பார்த்தான்.
“லேய் ஒன்னத்தாம்ல கேக்கேன். அவன ஏம்ல மொறச்சி பாக்குத…?”
“ந்நா ஒன்னும் மொறக்கலியே” சமாளிக்கும் குரலில் ரவி சொல்ல, “ப்போ ப்போய் கண்ணாடில ஒன் மொகரைய பாரு. தெரியும்.” சொல்லிவிட்டு அவள் மீண்டும் அடுக்களைக்குள் செல்லவும், ‘அப்பாட அம்மெக்க கைல இருக்கெது நமக்கெ ப்ராகரஸு கார்டு இல்ல’ ரவியிடமிருந்து நிம்மதி பெருமூச்சொன்று வெளியேறியது.
‘அடச்சை, யெலவுல கொஞ்ச நேரத்தில என்னெல்லாம் நெனச்சி பயந்து தொலச்சிட்டேன்’ அவனது பயம் அவனுக்கே சிரிப்பை வரவழைக்க, புன்னகைத்துக் கொண்டான். பூமியின் சுற்றல் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பியதைப் போல அவனுக்கு இருந்தது
“கெழங்கு சாப்பிடுதியாலே” அடுக்களையிலிருந்து விஜயாவின் குரல் கேட்டது.
“ம்ம்ம் குடும்மா” உற்சாகமாய குரல் கொடுத்தான் ரவி.
“மொதல்ல போய் பள்ளிக்கூட ஊனிஃபாம மாத்திட்டு மொகம் கழுவிட்டு வா” என்றாள்
“கெலங்க தின்னுட்டு மாத்திக்கறேன்” என்றான் பதிலுக்கு ரவியும் நிதானமாக.
“சட்டயயும் நிக்கரயும் மாத்துரதும் கெடயாது கொண்டாடுறதும் கெடையாது. தொவைக்கிறபெல்லாம் ஒரு சொமட்டுக்கு அலுக்கு போகுது.” என்று சொன்ன விஜயாவின் குரல் ஒரு நொடி நின்று பின் சற்று சந்தேகத் தொனியில்,
விஜயாவின் அந்தச் சந்தகேக் கேள்வியால் சற்று நிலைத் தடுமாறிய ரவியிடமிருந்து பதில் வராது போகவே, “சட்டெயெல்லாம் பெருசா கசங்குன மாதிரியும் இல்ல. ஸ்கூலுக்கு ஒலுங்கா தான் போறியா” என அடுத்த சந்தேகக் கேள்வியைக் கேட்டாள் விஜயா.
முதல் சந்தேகக் கேள்வியிலிருந்தே வெளி வந்திராத ரவியிடம், அடுத்தக் கேள்வியின் கொக்கி விழ, அதைச் சமாளிக்கத் தெரியாத ரவியோ கோபமாக, “அவ்ளோ சந்தேகமிருந்துன்னா ஸ்கூல்ல வந்து வாத்தியாருகிட்ட கேட்டுக்க வேண்டியதான” என ஏறக்குறையக் கத்தினான்.
ரவியின் கோபக் குரலைக் கேட்டு அடுக்களையிலிருந்து வெளியே வந்தவள், கோபமாக, “லேய் என்னல இது புது பழக்கம்…?” என்றாள்.
“என்னது, என்ன புது பழக்கம்” என அதே கோபத்தோடே கேட்டான் ரவி.
“இப்படி எடுத்தெறிஞ்சி பேசுற பழக்கம்”
“பின்ன என்ன முன்னாடிலெல்லாம் ஏம்ல சட்டையயும் நிக்கரயும் இப்படி அழுக்காக்கிட்டு வரன்னு கேப்ப. இப்ப என்னடான்னா சட்டயும் நிக்கரும் ஏன் அழுக்காகலன்னு கேக்க. நான் இப்ப என்ன தான் பண்ணனும்னு சொல்ற” பேசியபடியே சட்டையைக் கழட்டித் தரையில் எறிந்தான் ரவி.
“என்னல பெத்த அம்மெகிட்ட பேசுறோங்கிற மரியாத இல்லாம பேசுக. இனி ஒரு வார்த்த இப்டி பேசுனேன்னா, கைல கண்ணாப்ப சூடா தா இருக்கு. வாயில சூடு போட்டு விட்ருவேன். பாத்துக்க” கண்களில் அனல் தெறிக்க, வலக்கையில் பிடித்திருந்த கண்ணகப்பையை ரவியின் முகத்துக்கு நேராக நீட்டிப் பேசினாள் விஜயா.
பள்ளிக்கூடத்திற்கு சரியாகப் போகாதது தெரிந்துவிடுமோ என்கிற பயத்தில் பதட்டத்தில் அவன் கோபமாகப் பேசியது அப்பொழுது தான் அவனுக்கு உரைத்தது.
“நானும் கொஞ்ச நாளா உன்ன கவனிச்சிட்டு தாம்ல இருக்கேன். ஒன் பேச்சு, போக்கு, நடவடிக்கன்னு ஒன்னு கூட சரியா படல எனக்கு” ரவியின் மௌனக் குளத்தின் மேல் மீண்டும் ஒரு கல் வந்து விழுந்தது.
“இந்த மாசத்திக்க ப்ராகரஸ் கார்டு எங்கல” என விஜயா அதட்டிக் கேட்கவும், என்ன பதில் பேச எனத் தெரியாமல் ரவி உறைந்து போய் அவளைப் பார்த்தான்.
“கேக்கேம்லால ப்ராகரஸ் கார்ட எங்கல?”
“அது… அது… இன்னும் தர்ல” தட்டுத்தடுமாறி ரவி பதில் சொல்கையில், அவன் குரலோடு கால்கள் வரையிலும் நடுங்கின.
“சந்த்ரா அடுப்பு பக்கத்துல இவங்கார்ட் இருக்கு அத எடுத்துட்டு வால” என்று விஜயா சொல்ல, சந்திரன் தான் இருந்த இடத்திலிருந்து இறங்கி அடுக்களைக்குள் சென்றான்.
‘அப்படீன்னா அம்மெக்க கைல இருந்தது யென்னோட ப்ராகரஸ் கார்டு தானா’ அந்த நிமிடமே பூமி இரண்டாய் பிளந்து தன்னை உள்வாங்கிவிடாதா என ரவிக்குத் தோன்றியது.
சந்திரன் எடுத்து வந்து கொடுத்த ப்ரோகரஸ் கார்டை ரவியின் முகத்தை நோக்கி விசிறியடித்தாள் விஜயா.
“வழக்கமா ரெண்டு இல்ல மூணு பாடத்துல தானல பெயிலாவ. இந்த தடவ என்னல நாலு பாடத்துல பெயிலாயிருக்க” தன் முன்னால் கிடந்த ப்ராகரஸ் கார்டை எடுத்து ரவி பார்த்தான். நாலு பாடத்தில் சிவப்புக் கோடும் ஒரு பாடத்திற்கு ‘a’ என்றும் போட்டிருந்தது. ‘கணக்கு பரிச்ச அன்னிக்கு நான் போகலியா’ எனத் தோன்றிய அதே வேளையில், ‘அட்டெண்டன்ச அம்மெ கவனிக்கல’ என்கிற நினைப்பு அவனுக்கு ஆறுதலாய் இருந்தது.
“என்னல நான் பாட்டுக்கு கேட்டுட்டே யிருக்கேன். நீ ஒம்பாட்டுக்கு கல்லூலிமங்கன் மாதிரி நிக்க”
விஜயாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லிச் சமாளிப்பது எனத் தெரியாததால் தலைக் குனிந்தபடியே நின்றான் ரவி.
“கொஞ்ச முன்னாடி வாய் கிழிய பேசுனேலால. அந்த வாய இப்பத் தெறந்து பேசேம்ல. வாய்ல என்ன பழையாத்து மண்ண கொழச்சா அடச்சி வச்சிருக்க...?”
“நீ நல்லா படிச்சு எங்களக் காப்பாத்துவேன்னு உங்கப்பா நம்புனாரு. அப்படி நம்பிக்க வெச்ச மனிசன பாதிலயே” கண்களில் கண்ணீர் திரண்டு வெளிவந்து குரல் அடைத்துக் கமற, ஒரு நொடி நிதானித்து உடுத்தியிருந்தச் சேலையின் தலைப்பால் கண்ணில் திரண்டிருந்தக் கண்ணீரைத் துடைத்தபடியே தீர்க்கமான குரலில், “நீ நல்லா படிச்சு என்னயவெல்லாம் காப்பாத்த வேணாம். உன்னயே நீ காப்பாத்திகிட்டா போதும். இல்ல நான் என் விருப்பப்படி தான் வாழுவேன்னு நினைச்சேன்னா,
அடுக்களைக்குள் சென்ற விஜயாவை, ‘அவசரப்பட்டு கோவப்பட்டுட்டோமே’ என்கிற குற்றவுணர்வு மேலிடப் பார்த்தபடியே நின்றான் ரவி.
திண்ணையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவன் காதுகளில் இரவின் அமைதியைக் குலைக்கும் விதமாக யாரோ ஒருவர் நடந்து வரும் காலடி சப்தம் கேட்கவும், அரைக்கண் திறந்துப் பார்த்தான். அவன் முன்னால் முழு நிலவின் பின்னணியில், ஓங்குத்தாங்காய் வளர்ந்த கரிய உருவம் ஒன்று நிற்பது தெரிந்தது. அந்த இருளிலும் அந்த உருவத்தின் கண்களில் ஒரு வெளிச்சம். நிற்பது யாரென உற்றுப் பார்த்து அவன் சூதாரிக்கும் முன்னமே அந்த உருவம் அவன் அருகிலிருந்து நகர்ந்து, வீட்டு வாசற்கதவைத் திறந்து, ஒரு கணம் நின்று ரவியைப் பார்த்தது. நிலவின் வெளிச்சத்தில் தெரிந்த அந்த முகத்தை ரவி உற்றுப் பார்க்க, அந்த உருவம் எந்த விதமான சப்தத்தையும் எழுப்பாமல் வீட்டினுள் நுழைந்தது.
நிலவின் வெண்ணிற ஒளியில் தெரிந்த சுவடுகளை வைத்து அந்த முகம் யாருடைய முகமென ரவி யோசிக்க யோசிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அந்த முகம் யாருடையது என அவனுக்குப் புலப்பட ஆரம்பித்தது. ‘நம்பிக்க துரோகத்த மாதிரி ஒரு மோசமான துரோகம் இந்த உலகத்துல எதுவுங் கெடயாது’ சின்னத்தம்பியின் குரல் அசரீரியாய் ரவியின் காதுகளில் ஒலித்தது.
‘பால்ராஜ் மாமா ஏன் இந்த நேரத்துல நம்ம வீட்டுக்கு வாறாரு’
Also Read: ஊசிப்புட்டான் - `நம்பிக்கை வெச்சவனை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்!' | அத்தியாயம் - 4
source https://www.vikatan.com/arts/literature/story-of-a-boy-nicknamed-as-oosipputtan-part-6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக