சர்க்கரைநோயின் தாக்கத்தால் உடல் எடை வேகமாகக் குறைகிறது. உடல் எடை அதிகரிக்க ஆலோசனைகள் சொல்லவும்.
- சுந்தர பாண்டியன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.
``சர்க்கரைநோய் இல்லாத மற்றவர்களைப் போலவே சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைய பல காரணங்கள் இருக்கலாம். எனவே உடல் எடை குறைவதற்கு உங்களுக்கு இருக்கும் நீரிழிவு பாதிப்புதான் காரணமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வேறு சில காரணங்களாலும் உடல் எடை குறையலாம்.
அவை:
- மன அழுத்தம், மனச்சோர்வு
- மிகை தைராய்டு
- புற்றுநோய்
- ஹெச்ஐவி பாதிப்பு
- சத்துகளை உட்கிரகிப்பதில் உள்ள கோளாறு
- காசநோய்
- உணவை விழுங்குவதில் உள்ள பிரச்னை
- மனநோய்கள்
- புகை மற்றும் போதைப் பழக்கங்கள்
சிலர் அடிக்கடி உடல் எடையை செக் செய்வார்கள். அரை கிலோ, ஒரு கிலோ குறைந்தாலே எடை குறைந்துவிட்டதாகப் புலம்புவார்கள். இதை உடல்நல பாதிப்பாகக் கருத முடியாது. குறுகிய காலத்தில் நான்கைந்து கிலோவுக்கும் அதிகமாக எடை குறைந்தால்தான் அது பற்றிக் கவலைப்பட வேண்டும். அதாவது 6 மாதங்களுக்குள் மொத்த எடையில் 5 சதவிகிதம் குறைந்தால்தான் அது குறித்து யோசிக்க வேண்டும்.
Also Read: Doctor Vikatan: நன்றாகச் சாப்பிடுகிறேன்; ஆனாலும் எடை கூடவில்லை; என்னதான் தீர்வு?
சர்க்கரைநோயாலும் உடல் எடை குறையலாம். ஆனாலும் அது டைப் 1 டயாபடீஸ் எனப்படும் முதல்வகை சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் ஏற்படும். இவர்களது உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரப்பு இருக்காது. டைப் 2 வகை நீரிழிவாளர்களுக்கும் பீட்டா செல்கள் தொடர்ந்து நலிவடைவதால் இன்சுலின் சுரப்பு பெருமளவு குறைந்து உடல் எடை குறையலாம்.
இன்சுலின் இல்லாத காரணத்தாலும் அதன் சுரப்பு குறைவதாலும் உடல் செல்களால் ரத்த குளுக்கோஸை பயன்படுத்த முடியாது. எனவே இதைச் சரிசெய்ய உடலிலுள்ள புரதமும் கொழுப்பும் கரைய ஆரம்பிக்கும். இதன் மூலம் தேவையான சக்தியைத் தர உடல் முயற்சி செய்யும். இதன் காரணமாக இவர்களுக்கு உடல் எடை குறையும். ஆக... இவர்களுக்கு இன்சுலின் தேவைப்படும். இவர்கள் உட்கொள்ளும் உணவின் கலோரியை உடல் எடைக்கும் செய்யும் வேலைக்கும் ஏற்ப முறைப்படுத்த வேண்டும். புரதச் சத்துள்ள உணவுகளை போதுமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், ரத்தச் சர்க்கரை அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தாக்காமலும் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் தங்கள் வயது, உயரம், பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ற எடையைத் தக்கவைத்துக்கொள்ள முயல வேண்டும்.
Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா?
ஒல்லியாக இருப்பவர்களும், பருமனாக இருப்பவர்களும் அடுத்தவரைப் பார்த்து எடை கூடவோ இளைக்கவோ ஆசைப்பட்டு தவறான விஷயங்களைப் பின்பற்ற நினைக்கக்கூடாது. பி.எம்.ஐ எனப்படும் உடல்நிறைக் குறியீட்டின்படி உயரத்துக்கேற்ற சரியான எடையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகளைப் பின்பற்ற வேண்டும்.
உடல் எடையில் திடீரென அசாதாரண மாற்றங்களை உணர்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/how-to-stop-the-weight-loss-that-occur-due-to-diabetes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக