Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

யூரோ டூர் 12: சரிந்த பேரரசுகள், உருவான புதிய நாடுகள்... முதல் உலகப்போரின் உண்மையான வெற்றியாளர் யார்?

முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மன், ரஷ்யா, ஆஸ்திரியா - ஹங்கேரி, மற்றும் ஒட்டோமான் எனும் நான்கு பெரும் பேரரசுகள் சரிந்தன. ஜெர்மனியில் House of Hohenzollern, ரஷ்யாவின் Romanovs in Russia மற்றும் ஆஸ்திரியா - ஹங்கேரியின் Habsburg-Lorraine எனும் ஐரோப்பாவின் மூன்று சக்திவாய்ந்த முடியாட்சிகள் முடிவுக்கு வந்தன. உலகின் பொருளாதார சமநிலை மாறியது. ஐரோப்பிய நாடுகள் கடனில் மூழ்கின. அமெரிக்கா வல்லரசாக ஓங்கியது.

போரின் பின்னர் வெடித்த புரட்சிகளும், புதிதாய்ப் பிறந்த நாடுகளும்

உலகப்போர்தான் முடிவுக்கு வந்ததே தவிர ஐரோப்பாவிற்குள் சண்டையும் சச்சரவுகளும் முடிவுக்கு வரவே இல்லை. மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைந்து கொண்டே இருந்தன. முதல் உலகப்போரின் இறுதியில் ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட தீவிர அரசியல் கருத்துக்களின் பரவல், தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்களுக்கும், தீவிர கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சக்திகளுக்கு இடையே மோதல்களுக்கும் வழிவகுத்தது. அதே போல பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனித்துவத்துக்குள் அதிருப்தி அடைந்த நாடுகள் சுதந்திரத்திற்காக போராடின.

முதல் உலகப்போர்

முதல் உலகப் போர் ஐரோப்பாவின் வரைபடத்தையே மாற்றி வரைந்தது. அத்திப்பட்டி போல சில நாடுகள் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போயின. பல புதிய நாடுகள் உருவாகின. ஆஸ்திரியா-ஹங்கேரி எனும் ஒரு பெரும் சாம்ராஜ்ஜியம் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு ஆஸ்திரியா, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா போன்ற புதிய நாடுகள் பிறந்தன.

பால்டிக்கில் லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய மூன்று நாடுகள் புதிதாக முளைத்தன. ஆனால் இவை எதுவுமே போருக்குப் பிந்தைய ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுபோல இந்த நாடுகள் அனைத்தும் ரஷ்யப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து உருவான பெரும் குழப்பத்தைப் பயன்படுத்தி தத்தமது சுதந்திரத்தை அறிவித்துக்கொண்டன.

ரஷ்ய புரட்சி 1917-1923

1917 ரஷ்ய புரட்சிகள் போல்ஷிவிக்குகளின் செம்படைக்கும் (Red Army of the Bolsheviks), ரஷ்ய கம்யூனிச எதிர்ப்பு சக்திகளின் கூட்டமைப்பான வெள்ளை ராணுவத்திற்கும் (White Army of union of Russian anti-communist forces) இடையே ஒரு சிக்கலான போராட்டத்தைத் உருவாக்கியது. அதோடு சேர்த்து பசுமை ராணுவம் (Green Armies) எனப்படும் விவசாயிகளின் குழுக்கள் வேறு தங்கள் சமூகங்களை இரு தரப்பு கொள்கையிலிருந்தும் பாதுகாக்க ஆயுதம் ஏந்தின. இவை மூன்றுக்கும் இடையிலும் பயங்கரமான சண்டை நடந்தது. இறுதியில் வெள்ளை ராணுவம் தோற்கடிக்கப்பட்டு, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம், டிசம்பர் 1922 இல் உருவாக்கப்பட்டது.

பின்லாந்து | Finland

பின்லாந்து சிவில் யுத்தம் – 1918

முதல் உலகப் போர் தொடங்கியபோது பின்லாந்து ரஷ்ய பேரரசின் ஒரு பெரிய ஆட்சிப்பகுதியாக இருந்தது. 1917இல் உருவான ரஷ்யப் புரட்சி, பின்லாந்தில் ஒரு பெரும் அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியது. ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரத்தை விரும்பும் ஒரு குழுவுக்கும், அந்தப் பிரிவினையை எதிர்த்த குழுவுக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம் உருவானது. 1919ல் பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து பிரிந்து, ஒரு சுதந்திரக் குடியரசாக மாறியது.

ஜெர்மன் புரட்சி 1918-1919

பிரிட்டிஷ் கடற்படைக்கு எதிரான கடைசிப் போரில் தற்கொலைத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதால், ஜெர்மன் மாலுமிகள் அக்டோபர் 1918-இல் அதிகாரிகளுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட்டனர். முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், போரின் போது அவர்கள் அனுபவித்தத் துன்பத்திற்கும், இழப்புகளுக்கும் மக்கள் தங்கள் தலைவர்களைக் குற்றம் சாட்டியதால், உள்நாட்டு கலவரம் ஜெர்மனி முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து பேரரசர் கைசார் பதவி துறந்து நெதர்லாந்துக்கு நாடு கடத்தப்பட, ஜெர்மன் ஒரு சுதந்திரக் குடியரசாக நவம்பரில் அறிவிக்கப்பட்டது.

Also Read: யூரோ டூர் - 11 | விக்டோரியா மகாராணியின் பேரனே ஏன் பிரிட்டனுக்கு எதிராகப் போர் தொடுத்தார்?

எஸ்டோனியன் – ரஷ்ய போர் 1918-1920

முதல் உலகப் போர் தொடங்கியபோது எஸ்டோனியா, ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்து, போரின் இறுதி ஆண்டில் அது ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டது. ரஷ்ய புரட்சி மற்றும் ஜெர்மனியின் தோல்வியைத் தொடர்ந்து பின்லாந்தைப் போலவே எஸ்டோனியாவும் ஒரு சுதந்திர நாடாக மாறியது. நவம்பர் 1918இல் ஜெர்மன் துருப்புகள் சரணடையத் தொடங்கியதை சாதகமாகப் பயன்படுத்தி சோவியத் ரஷ்யா மீண்டும் எஸ்டோனியாவைக் கைப்பற்றும் நோக்கில் தாக்கத் தொடங்கியது. ஆயினும் லாட்வியா, பிரிட்டன், White Russian படைகள் மற்றும் ஸ்காண்டிநேவியா நாடுகள் எஸ்தோனியாவுக்கு உதவியது. இறுதியில், பிப்ரவரி 1920இல், ரஷ்யா எஸ்டோனியாவை கைவிட்டுச் செல்ல, அது ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

முதல் உலகப்போர்

லாட்வியன் - ரஷ்யா போர் 1918-1920

எஸ்டோனியாவைப் போலவே, லாட்வியாவும் முதல் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து சுதந்திரம் பெற்று தனி நாடானது. லாட்வியன் ராணுவம், ஜெர்மன் மற்றும் எஸ்டோனிய ராணுவத்தின் உதவியோடு ரஷ்யா வசம் இருந்த தங்கள் நிலத்தின் பெரும்பகுதியை போரிட்டு திரும்பப் பெற்றது. ஆனால் உதவி என்ற பெயரில் ஓடி வந்த ஜெர்மன், அந்த பிரதேசத்தை ஆதிக்கம் செலுத்த முயன்றது சிறிது காலத்துக்குள்ளேயே லாத்வியாவுக்கு புரிந்ததால் லாட்வியன் மற்றும் எஸ்டோனியப் படைகள் நேச நாடுகள் தலையிடும் வரை மீண்டும் ஜெர்மனிக்கு எதிராக தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. இறுதியில் ஆகஸ்ட் 1920 இல், ரஷ்யா, லாட்வியன் சுதந்திரத்தை அதன் கையில் ஒப்படைத்து விலகிக் கொண்டது.

போலிஷ் - ரஷ்யன் போர் 1919-1921

ஜெர்மன், ஆஸ்ட்ரோ - ஹங்கேரியன் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளை உள்ளடக்கி தனக்கான ஒரு தனி நாட்டை உருவாக்கி, முதல் உலகப் போரின் முடிவில் போலந்து தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தது. போலந்துக்கும் ரஷ்யாவிற்குமான போர், சோவியத் ரஷ்யாவுடன் எல்லைப் பிரச்னையாகத் தான் ஆரம்பத்தில் தொடங்கியது. பின்னர் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் கொள்கைகளை மேற்கு நோக்கி விரிவாக்க, இந்தப் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது ரஷ்யா. போலந்து ஆரம்பத்தில் சில வெற்றிகளை ஈட்டினாலும் பிறகு தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து கிட்டத்தட்ட வார்சா வரை பின்வாங்கியது. பின் வார்சாவில் வைத்து திருப்பி அடித்து ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு மார்ச் 1921இல் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.

போலிஷ் - உக்ரைனியன் போர் 1918-1919

அக்டோபர் 1918இல் ஆஸ்ட்ரோ - ஹங்கேரிய சாம்ராஜ்யம் சரிந்த உடனேயே, உக்ரேனிய மக்களும் தம் சுதந்திரத்தை நாடி, மேற்கு உக்ரேனிய மக்கள் குடியரசை தனி நாடாக பிரகடனப்படுத்தினார். ஆனால் அவர்கள் அறிவித்த சில பிரதேசங்கள் ஏற்கெனவே போலந்தால் உரிமை கோரப்பட்டதால் அந்த இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் போர் தொடங்கியது.

உக்ரேனிய ராணுவம் தம் எல்லையை மீட்க மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியுற்றன. ஜூலை 1919ல் போதுமான ஆயுதங்களும் வெடிபொருள்களும் இல்லாத காரணத்தால் உக்ரைன் போலந்திடம் தோற்று தனது மேற்கு உக்ரேனிய நிலங்களை போலந்துக்குப் பறிகொடுத்தது.

போலந்து | Poland

போலிஷ் - லிதுவேனியன் போர் - 1920

முதல் உலகப் போருக்கு முன்னர் வரை ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த லிதுவேனியா 1915 முதல் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வியைத் தொடர்ந்து அதுவும் ஒரு சுதந்திர நாடாக மாறியது. முதலில் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட லிதுவேனியா, ஜூலை 1920 சமாதான ஒப்பந்தத்துடன் போரை முடித்துக்கொண்டது. அதன் பின் போலந்து - ரஷ்யா சோவியத்துக்கு இடையேயான போரில் போலந்து பின்வாங்குவதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட லிதுவேனியா, முன்னர் ரஷ்யாவுடனான உடன்படிக்கையில் ரஷ்யா பறித்துக்கொண்ட கொண்ட தமது நிலங்களை மீண்டும் கைப்பற்றியது. இவர்களுக்கு இடையேயான இந்தப் போர் நவம்பர் 1920 இல் லீக் ஆஃப் நேஷன்ஸின் உதவியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கிரேக்க - துர்கிஷ் போர் 1919-1922

முதல் உலகப் போரில் ஒட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்ட பின், அதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலப்பரப்பை கிரேக்கத்திற்கு தருவதாக நேச நாடுகள் உறுதியளித்தன. கிரேக்கப் படைகள் மே 1919இல் ஸ்மிர்னாவில் (இஸ்மிர்) தரையிறங்கி அனடோலியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றின. ஆனால் துருக்கியோ நிலங்களைப் பிரித்து ஆக்கிரமிப்பு செய்வதை எதிர்த்தது. வலிமைமிக்க துருக்கி ராணுவம் கிரேக்கத்துக்கு எதிரான போரில் அவர்களை தோற்கடித்து செப்டம்பர் 1922இல் மீண்டும் அந்த நிலங்களைக் கைப்பற்றின. இந்த மோதலின் போது இரு தரப்பிலும் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு பல குடியிருப்புகள் அழிக்கப்பட்டன. இந்த யுத்தத்தின் வெற்றியின் மூலம் நவீன துருக்கியின் இன்றைய எல்லைகள் நிறுவப்பட்டன.

எகிப்தியன் புரட்சி - 1919

பிரிட்டிஷ் படைகள் 1882இல் எகிப்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து முதல் உலகப் போர் தொடங்கியபோது, இது நம்ம ஆள் என்பது போல எகிப்தை பிரிட்டிஷின் ஆட்சியின் கீழ் இருக்கும் நாடாக பிரிட்டன் அறிவித்தது. ஆனால் முதல் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் தாம் நடத்தப்பட்ட விதத்தில் அதிருப்பதி அடைந்த எகிப்தியர்கள், போர் நிறுத்தப்பட்டவுடன் பிரிட்டிஷிடம் இருந்து தமது சுதந்திரத்திற்காக போராடத் தொடங்கினார். 1919இல் நிகழ்ந்த தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் பல புரட்சிகளில் சுமார் 800 எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மேலும் எகிப்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது சாத்தியமில்லை என்று உணர்ந்த பிரிட்டன் பிப்ரவரி 1922இல் எகிப்திய சுதந்திரத்தை அறிவித்தது.

போரில் இறந்த ராணுவ வீரர்

ஐரிஷ் போர் 1919-1921

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயர்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் ஐரிஷ் Sinn Féin கட்சி 1918 பொதுத் தேர்தலில் அதிக ஆதரவைப் பெற்று ஐரிஷ் குடியரசை சுதந்திர தனி நாடாக அறிவித்தது. இதனால் அயர்லாந்துக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே கொரில்லா போர் ஆரம்பமானது. இதன் விளைவாக 1921ல் கைச்சத்திடப்பட்ட ஆங்கிலோ-ஐரிஷ் ஒப்பந்தம் அயர்லாந்து தனிப் பிராந்தியமாகப் பிரிவதை உறுதி செய்தது. ஒரு தன்னாட்சி நாடாக ஐரோப்பிய கண்டத்தில் தெற்கு அயர்லாந்து மாற, வடக்கு அயர்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்தது.

உண்மையான வெற்றி யாருக்கு?

என்னதான் இந்த நாடுகள் தமக்கான சுதந்திரத்தை பெற்றுக்கொண்டாலும் முதல் உலகப் போரின் உண்மையான வெற்றியாளர் அமெரிக்காதான். மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட்ட அமெரிக்கா போர் முடியும் தறுவாயில்தான் உள்ளே நுழைந்தது. இதனால் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் ரத்தக்களரி இவர்களுக்கு ஏற்படவில்லை. பொருளாதாரம் சீர் குலையவில்லை. புரட்சிகள் வெடிக்கவில்லை. மாறாக மற்ற நாடுகளை விடவும் மிகவும் வலிமை பொருந்தியதாக அசுரத்தனமாக எழுச்சியுற்றது. ஒரே இரவில், உலகின் பொருளாதார பலம் பொருந்திய முன்னணி சக்தியாக மாறியது.

அமெரிக்க போர் விமானம்
புதிதாக முளைத்த நாடுகள் உண்மையிலேயே அவர்களுக்கான சுதந்திரத்தை அனுபவித்தார்களா? முதல் உலகப்போருக்கு பிந்தைய ஐரோப்பா எப்படி இருந்தது? போரின் பின்னரான அவர்கள் வாழக்கை எப்படி மாறியது? அதல பாதளத்துக்குள் வீழ்ந்த ஐரோப்பா மீண்டும் எழுந்தது எப்படி? அடுத்த 20 வருடங்களில் மறுபடியும் ஒரு உலக யுத்தம் வெடிக்கக் காரணமாக நிகழ்ந்த சம்பவங்கள் என்னென்ன? வரும் வாரங்களில் பார்க்கலாம்!

யூரோ டூர் போலாமா?



source https://www.vikatan.com/social-affairs/international/euro-tour-the-aftermath-of-world-war-1-and-how-it-changed-europe

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக