சமீப நாட்களாக சசிகலா புயல் அதிமுக-வுக்குள் வீசத் தொடங்கியிருக்கிறது. அதிமுக நிறுவன நாளான அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் பேசிய சசிகலா, ‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என தூதுவிட்டார். சமீபத்தில் சசிகலா குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., ‘சசிகலாவை இணைப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்’ என்றார்.
ஓ.பி.எஸ்-ஸின் இக்கருத்து கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. கட்சியின் அமைப்புச் செயலாளரும், பன்னீர் ஆதரவாளருமான ஜெ.சி.டி.பிரபாகர், ‘ஓ.பி.எஸ் பேசியதில் தவறேதும் இல்லை’ என்றார். தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு தஞ்சை சென்றிருந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனோ, ‘ஓ.பி.எஸ் சரியாகத்தான் பேசினார்’ என்றார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் இதையே குறிப்பிட்டார். சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை பன்னீர் சொல்லியிருப்பதை வைத்து, பன்னீருக்கு ஆதரவாக இத்தனை பேர் பேசினர்.
பன்னீரின் கருத்தை எதிர்த்து ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் பேசியனர். தனக்கு மேல் உள்ள ஒரு கட்சி பொறுப்பில் இருக்கும் பன்னீர் செல்வத்திடம், எப்படி எதிர்த்துப் பேசலாம்? என்ற ஆதங்கத்தோடு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் அ.தி.மு.க-வின் சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளர் (முன்னாள்) ஜெ.எம்.பஷர்
``அதிமுக-வில் இஸ்லாமியர்களுக்கு மரியாதை இல்லை, பாதுகாப்பு இல்லை. சி.ஏ.ஏ சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததே முஸ்லிம் மக்கள் அ.தி.மு.க-வை வெறுக்கக் காரணம். மறைந்த எம்.பி முகமது ஜான் இறப்புக்குக் கூட எடப்பாடி செல்லவில்லை. முதல்வராக இருந்த நான்காண்டுகளில் காயிதே மில்லத் பிறந்தநாள், நினைவு நாளுக்கும் எடப்பாடி சென்றதில்லை. எடப்பாடி ஒரு பச்சைத் துரோகி. ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, எடப்பாடியை கட்சியை விட்டே நீக்க வேண்டும்” என்று உணர்ச்சிப் பெருக்கில் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த வேளையிலேயே, ‘கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்குடன் செயல்பட்ட ஜெ.எம்.பஷீர் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்’ என்கிற அறிக்கை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் கையெழுத்துடன் வெளிவந்தது.
இதனால் முகம் வாடிப்போன பஷீர், எப்படியோ மீடியாக்களின் கேள்விகளைச் சமாளித்துவிட்டுக் கிளம்பினார். அவரைத் தனியாக சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
``எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டை ஏன் அவர் முதல்வராக இருக்கும்போதே சொல்லவில்லை?”
``உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது ஆட்சியமைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினின் சில செயல்பாடுகளைப் பார்த்த பிறகுதான் 'எடப்பாடி ஏன் இப்படி இருக்கவில்லை?’ என்று எண்ணினேன். இருந்தபோதும், சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள், முஸ்லிம்களுக்கு தேர்தலில் வாய்ப்பளியுங்கள், காயிதே மில்லத் போன்றவர்களை மதியுங்கள் என ஒவ்வொன்றுக்கும் எடப்பாடிக்குக் கடிதமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் உதாசீனப்படுத்திவிட்டார். இப்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். கட்சித் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவரை எதிர்த்து எடப்பாடி உள்ளிட்ட சிலர் பேசுகிறார்கள். இன்னும் நிறைய பேர் ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் நாம் மட்டுமே ஏன் இன்னமும் மௌனமாக இருக்க வேண்டும்? என்ற எண்ணத்தில் இன்று பேசினேன்.”
``பேசிக்கொண்டிருக்கும்போதே கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களே?”
``நீக்கப்படுவேன் என்பது தெரியும். தெரிந்துதான் பேச முன்வந்தேன். ஓ.பி.எஸ் கையெழுத்து அதில் இடம்பெற்றிருந்தாலும் அது கையெழுத்தா அல்லது சீலா என்பதில் சந்தேகம் உள்ளது. ஒருவேளை உண்மையிலேயே கையெழுத்தாக இருந்தால், இந்த விஷயத்தில் கூட பன்னீரை, எடப்பாடி தரப்பு எந்தளவுக்கு நெருக்குதலுக்கு உள்ளாக்குகிறது என்பது விளங்கும். எனினும், கட்சியை நம்பி நானில்லை. நான் கட்சிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தேன். கட்சிதான் நல்ல தொண்டனை இழந்துவிட்டது.”
``ஓ.பி.எஸ் தூண்டுதலின்பேரில்தான் பேச வந்தீர்கள் என்கிறார்களே?”
``ஓ.பி.எஸ் எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். யார் சொல்லியும், தூண்டியும் நான் பேசவில்லை. நான் சிறுபான்மைச் சமூகம் என்பதால் கட்சியில் எனக்கான உரிமையைக் கேட்டேன். அத்தோடு, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை மதிக்காத எடப்பாடியை நீக்க வேண்டும் என்றேன். என்னையே நீக்கிவிட்டனர்.”
``சசிகலா குறித்து தனிப்பட்ட முறையில் உங்கள் கருத்தென்ன?”
``நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் என எல்லாவற்றிலும் கட்சி பலவீனம் அடைந்துகொண்டே செல்கிறது. அதனால், சசிகலா கட்சிக்குள் வந்தால் பலம் கூடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. கட்சித் தொண்டர்கள் பலரின் எண்ணமும் கூட இதுவாகத்தான் இருக்கும்.”
``அடுத்தக்கட்ட பிளான் என்ன? தி.மு.க செல்வதாகச் சொல்கிறார்களே?”
``எனக்கு எந்தப் பிளானும் இல்லை. முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் கட்சியில் நான் அங்கம் வகிக்க விரும்புகிறேன், அவ்வளவுதான். மற்றபடி, தி.மு.க ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்பதோடு முடித்துக்கொண்டு கிளம்பினார் பஷீர்.
source https://www.vikatan.com/news/politics/i-told-to-remove-edappadi-from-admk-but-i-was-fired-says-basheer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக