Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

`வீட்டையும், காரையும் எடுத்துக்கொள்ளுங்கள்' -பாதுகாப்பு குறைப்பால் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ஆவேசம்

கேரள மாநில எதிர்க்கட்சி தலைவருக்கான இசட் பிரிவு பாதுகாப்பை ஒய் பிளஸ் என குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.பி.எம் ஆளும் கேரளத்தில் எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீ.டி.சதீசன் உள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை, ஒய் பிளஸ் பாதுகாப்பாக குறைக்க மாநில அரசு தீர்மானம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் வீ.டி.சதீசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், இது தன்னை தனிப்பட்ட முறையில் பாதிக்காது எனவும், இது எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை தரம்தாழ்த்தும் செயல் எனவும் வீ.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டசபை

இதுகுறித்து கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசன் கூறுகையில், ``எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது பற்றி செய்திகள் மூலம் அறிந்துகொண்டேன். எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டது பெரிய விஷயம் அல்ல. எதிர்கட்சி தலைவர் பதவி சிறியது என்று எனக்கும், பொதுமக்களுக்கும் அறிவிக்கும் விதமாக அரசு பாதுகாப்பை குறைத்துள்ளது. இனி இருப்பது அரசு பங்களாவும், அரசு காரும்தான். அரசு கேட்டுக்கொண்டால் அரசு பங்களாவோ, காரோ எந்த வசதியை வேண்டுமானாலும் திரும்ப ஒப்படைப்பதற்கு தயாராக இருக்கிறேன்.

Also Read: முல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்!' - கொந்தளிக்கும் விவசாயிகள்

இதுபோன்ற எதைக் கண்டும் பிரமிக்கும் ஆள் நான் இல்லை. இவை என்னை பாதிக்கக்கூடிய விஷயங்கள் அல்ல. தனிப்பட்ட முறையில் இது சம்பந்தமாக எனக்கு புகார் எதுவும் இல்லை. வருடக்கணக்கில் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்ற பதவி இருந்து வருகிறது. அதை தரம்தாழ்த்த வேண்டும் என அரசு நினைத்தால் அது எனது ஸ்தானத்தை பாதிக்காது. இது எதிர்க்கட்சி தலைவர் என்ற ஸ்தானத்தின் மகத்துவத்தை குறைக்கும் நடவடிக்கையா என எனக்கு தெரியவில்லை.

வீ.டி.சதீசன்

நான் எதிர்க்கட்சி தலைவர் பதவி ஏற்றபோது இசட் பிரிவு பாதுகாப்பு உண்டு என காவல்துறை அதிகாரிகள்தான் என்னிடம் தெரிவித்தார்கள். அப்படியானால் தண்டர்போல்டோ, எஸ்கார்டோ மற்றபடியான பெரிய பாதுகாப்போ வேண்டாம் என போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அத்தியாவசிய பயணங்களின்போது பைலட் வாகனம் மட்டும் போதும் எனவும் கூறியிருந்தேன். எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பு தலைமை கொறடாவை விட குறைந்த பாதுகாப்பாகத்தான் உள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-opposition-leader-statement-on-security-reducing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக