1992-ம் ஆண்டு, உலக நாடுகள் `பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு’ (United Nations Framework Convention on Climate Change) என்னும் பெயரில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும், தீர்வு காணவும், உலகளாவிய சட்டங்களையும், விதிகளையும், வகுக்க இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது. 1995-ல் முதல் உச்சி மாநாடு ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்றது. தற்போது க்ளாஸ்கோவில் நடைபெறவுள்ளது 26-வது உச்சி மாநாடாகும்.
உலக வெப்பமயமாதலுக்குக் காரணமாக விளங்கும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் முதல் முறையாக அங்கீகரித்துள்ளன. இச்சிக்கலான பிரச்சினைக்குத் தனியொரு நாடு தீர்வைக் காண முடியாத சூழலில், பன்னாட்டுச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் உதவியுடன் உலக நாடுகள் கூட்டாக ஆலோசிக்கும். 2015 பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானது பருவநிலை மாற்றப் பேரழிவைத் தவிர்க்க உலகளாவிய வெப்பத்தை 20 செல்ஷியஸ் (3.6F) அளவுக்குக் குறைவாகக், குறிப்பாக 1.50 செல்ஷியஸ் (2.7F) அளவில் வைத்திருக்க வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்க ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோ நகரில் 26-வது சிஓபி உச்சிமாநாடு அக்டோபர் 31- நவம்பர் 12 வரை இரு வாரங்கள் நடைபெறும். இந்த உச்சிமாநாட்டை இத்தாலியும், இங்கிலாந்தும் கூட்டாக நடத்தும். 2015 பாரிஸ் ஒப்பந்த மாநாட்டுக்குப் பிறகு இந்த மாநாடு 196 நாடுகளின் 30,000 பிரதிநிதிகள் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய இந்த உச்சிமாநாடு கோவிட் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இப்போது நடைபெற உள்ளது.
பருவ மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசுகளுக்கு இடையேயான குழு (ஐபிசிசி) 2021 ஆகஸ்டில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் `மனித இனத்தின் மனிதாபிமானமற்ற செயல்களே உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் என்றும் அதன் விளைவாக இன்றைக்கு பருவநிலை விரிவாகவும், வேகமாகவும், தீவிரமாகவும் மாறி வருகிறது’ என்றும் எச்சரித்துள்ளது.
`தட்பவெப்பம் நிலை தீவிரமாதல், அதீத வெள்ளப் பெருக்கு, கடுமையான வெப்பம், கொடுமையான வறட்சி, உயிரினங்கள் முற்றிலுமாக அழிதல், பனி மலை உருகுதல், கடல் மட்டம் உயருதல்’ உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களுக்குப் பருவநிலை மாற்றம் காரணமாகிறது என ஐபிசிசி விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
`மனித இனத்துக்கான சிகப்பு அபாயக் குறியீடு’ என ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலர் அண்டோனியோ குட்டெரஸ் இந்த அறிக்கையில் சுட்டிக் காணப்பட்டுள்ள அபாயங்களை விவரித்துள்ளார்.
பசுமை இல்ல வாயு ஏற்கனவே வெளியேறி வளிமண்டலத்தில் பரவி அங்கேயே நிலை பெற்றுள்ளது. ஆகவே உலக நாடுகள் இணைந்து வாயு வெளியேற்றத்தை இப்போதே உடனடியாகத் தடுத்து நிறுத்தினாலும் கூட, தட்ப வெப்ப நிலை அதிகரிப்பு இந்த நூற்றாண்டின் பாதி வரை தொடர்ந்து நீடிக்கும். ஆனால் இந்த இலக்கை எட்ட ஒரேயொரு வாய்ப்புண்டு. உலக நாடுகள் பசுமை இல்ல வாயுவை `நிகர பூஜ்யம்’ (Nett Zero) ஆகக் குறைக்க முடிந்தால், 2050-ல் உலக வெப்பமயமாதலை நிச்சயம் 1.50 செல்ஷியஸ் (2.7F) அளவுக்குக் கொண்டு வர முடியும். இந்த இலக்கை எப்படி எட்ட என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதைத்தான் உலக நாடுகள் கூடி முடிவெடுக்க வேண்டும்.
Also Read: காலநிலை மாற்றம்: `நம் அடுத்த தலைமுறை பாதுகாப்பாக இல்லை!' - குழந்தைகள் குறித்த யுனிசெப் எச்சரிக்கை
உச்சி மாநாட்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சுமார் 120 நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், பங்கேற்று பருவ நிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க தங்கள் உறுதிப்பாட்டை விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகள், ஆய்வறிக்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு புதிய முனைவுகளை மேற்கொள்ள உறுதி கூறுவார்கள். அரசு சாரா அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களும், பருவநிலை மாற்றத்தால் காடுகள், விவசாயம், பொருட்காட்சி ஆகியவற்றுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்த அமர்வுகளில் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வார்கள்.
அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உச்சி மாநாடு வழக்கம்போல் நிறைவடையும். முந்தைய சிஓபி25 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலர் அண்டோனியோ குட்டெரஸ் தனது ஆதங்கத்தையும், வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். எனவே நடப்பு சிஓபி26 உச்சி மாநாட்டில் அவரது கருத்து தொடர்பான வாத விவாதங்கள் எழுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
சிஓபி உச்சி மாநாடு ஒவ்வொரு வருடமும் நடைபெற்றாலும், பங்கேற்கும் தலைவர்கள் பருவநிலை மாற்றத்தைக் குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் சமர்ப்பிக்க வேண்டுமென பாரிஸ் உச்சி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. நடப்பு ஆண்டுக் கூட்டத்தில் 2030க்குள் எட்ட வேண்டிய இலக்குகளையும் தெரிவிக்க வேண்டும். மேலும் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வளர்ச்சி அடையாத நாடுகள் பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்கும் கோரிக்கைக்கும் சிஓபி26 உச்சி மாநாடு முடிவெடுக்குமெனத் தெரிகிறது. வளர்ந்த பணக்கார நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் ஏழை நாடுகளுக்கு வழங்குவதாக 2009 உச்சி மாநாட்டில் அறிவித்தன. ஆனால் இது நடைமுறைக்கு வராமல் அறிக்கையோடு நின்றுவிட்டது. 2021 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட இலக்குகள் மிகவும் பலவீனமாக இருப்பதால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக வெப்பமயமாதல் 2.70 செல்ஷியஸ் (4.9F) அளவுக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
Also Read: "காலநிலை மாற்றம் என்பது பொய்!"- ட்ரம்ப் வாதத்துக்கு இயற்பியல் நோபல் பரிசு சொல்லும் பதில் என்ன?
பருவநிலை மாற்றத்தைக் குறைக்க உச்சி மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் ஏட்டளவில் ஒப்புக் கொண்டாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பல்வேறு பிரச்சினைகளால் தயக்கம் காட்டுகின்றன. அதிக அளவு பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும் சீனா முந்தைய உச்சி மாநாட்டில் அளித்த உறுதிமொழியில் சில திருத்தங்களை அக்டோபர் 28 அன்று வெளியிட்ட என்டிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதை படிம எரிபொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலியா மற்றும் ரஷிய நாடுகள் தங்கள் உறுதிமொழியைக் காப்பாற்றுவதில் ஆர்வமின்றி உள்ளன. சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தொடர்ந்து உற்பத்தி செய்வோம் என்று கூறுகிறது. நிலக்கரி உற்பத்தி, இறக்குமதி மற்றும் நுகர்வில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா இதுவரை எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா மற்றும் மெக்சிகோ நாடுகளும் இதேபோல் தயக்கம் காட்டுகின்றன. உலகின் மிகப் பெரிய மழைக் காடாகவும், பல்லுயிர்களின் வாழ்விடமாகவும், வளிமண்டலத்தில் கரியமில வாயுவை அகற்றுவதிலும் முக்கியப் பங்களிக்கும் அமேசான் காடுகளை அழிப்பதில் பிரேசில் தீவிரம் செலுத்துவது கவலையளிக்கும் விஷயமாகும்.
மொத்தத்தில் 2030-ம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 45% குறைக்கும் இலக்குக்கான உறுதிமொழி சிஓபி26 உச்சி மாநாட்டில் வலுப்பெறாது என்றே தோன்றுகிறது. இதன் காரணமாக நிகர பூஜ்ய வாயு வெளியேற்றம் மற்றும் 1.5 செல்ஷியஸுக்கும் குறைவான உலக வெப்பமயமாதல் ஆகியவை 2050-ல் சாத்தியப்படாது. ஆனால் இந்தத் தோல்வி வானியல் ரீதியாக பேரழிவை ஏற்படுத்தலாம். 1.5 மற்றும் 2 செல்ஷியஸுக்கு இடையேயான பருவநிலை மாற்றம் சிறு தீவுகளை மூழ்கடிக்கலாம், பவளப் பாறைகளை அழிக்கலாம். கடுமையான வெள்ளப் பெருக்கு, கொடுமையான வெப்ப அலைகள், பயங்கரமான காட்டுத் தீ, பயிர் விளைச்சல் பொய்த்துப் போதல் ஆகியவற்றுக்கும் வழிவகுக்கலாம்.
Also Read: காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? | Doubt of Common Man
மேற்கண்டவை நிகழும் பட்சத்தில் அகால மரணங்கள், பெரிய அளவிலான இடப் பெயர்வுகள், கடுமையான பொருளாதார இழப்புகள், மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழத் தகுதியற்ற நிலங்கள் உருவாதல், நீர் ஆதாரங்கள் அழிவு மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஆகியவை ஏற்படலாம் என்று எச்சரித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலர் இதை, `நரக எதிர்காலம்’ (Hellish Future) எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.
- ஜனனி ரமேஷ்
source https://www.vikatan.com/social-affairs/environment/why-the-cop26-summit-is-very-important-for-our-planet-at-this-juncture
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக