Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

AKS - 48 | சுந்தர், பரத் இருவருக்கும் இருப்பது ஒரே பிரச்னைதானா? காயத்ரி என்ன செய்யவேண்டும்?

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்ல காயத்ரி சாலையில் ஆட்டோவிற்காகக் காத்திருக்கிறாள். அவளது வீடு இருக்கும் இடத்திற்கு ஆட்டோக்காரர்கள் வர மறுக்க, வெகுநேரம் நிற்கிறாள். அந்த வழியாக பைக்கில் வரும் சிவா, காயத்ரிக்காக ஆட்டோ பிடித்து தருவதாக சொல்லி முயற்சி செய்கிறான். ஆட்டோ கிடைக்காததால் காயத்ரியை பேருந்து நிலையத்தில் இறக்கி விடவா என சிவா கேட்க, தன்னை நேராக வீட்டிலேயே இறக்கி விடச் சொல்லி காயத்ரி சொல்கிறாள். சிவா காயத்ரியை அவள் வீடு இருக்கும் தெருமுனையில் இறக்கிவிடுகிறான்.

வீட்டில் சுந்தர் கோபமாகக் காத்திருக்கிறான். காயத்ரியிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து செல்கிறான். காயத்ரி சிவாவுடன் வந்ததை தான் பார்த்ததாக சுந்தர் சொல்கிறான். காயத்ரி உடனே என்ன சொல்வது என்று தெரியாமல் பதற்றப்படுகிறாள்.

காயத்ரியின் மனதில் சிவாவின் மீது விருப்பம் இருக்கிறது. அவள் தானாக கேட்டுத்தான் சிவாவுடன் பைக்கில் வந்தாள். ஆனால் சுந்தர் தவறாக நினைக்கக் கூடும் என்று எண்ணி அவள் தெருமுனையிலேயே இறங்கிக் கொள்கிறாள். சுந்தர் கேட்கும்போது காயத்ரி அதையே சொல்கிறாள். காயத்ரி அவ்வாறு சொன்னதும் சுந்தர் கோபப்படுகிறான்.
AKS - 48

ஒரு பக்கம் காயத்ரிக்கு சுந்தருடன் நிச்சயமாகி இருக்கிறது. சுந்தர் பார்த்துக் கொடுத்த வீட்டில் குடியிருக்கிறாள். மறுபக்கம் சிவாவை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்காக சாப்பாடு செய்து கொண்டு போய் கொடுக்கிறாள். அவனுடன் பைக்கில் வருவதில் மகிழ்ச்சி அடைகிறாள். ஆணும், பெண்ணும் நண்பர்களாக பைக்கில் செல்வது தவறல்ல. ஆனால் காயத்ரி ஏற்கெனவே சுந்தருடன் நிச்சயமாகி இருக்கும் சூழ்நிலையில் அந்தத் திருமணம் தேவையா இல்லையா என முடிவெடுக்க முடியாமல் திணறுகிறாள். காயத்ரி சிவாவிற்கு சாப்பாடு செய்து கொண்டுபோவது நட்பின் பெயரால் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிவாவுடன் நன்றாக பேசுவதாலும், பைக்கில் செல்வதாலும் காயத்ரிக்கு தன் மேல் விருப்பம் இருப்பதாக சிவா புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆக, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் நம்பிக்கை அளித்து இருவரையும் காயத்ரி குழப்புகிறாள்.

சுந்தர் காயத்ரியிடம் பேசும்போது இரண்டு எதிரெதிர் நிலையிலிருந்து பேசுகிறான். காயத்ரியை சிவா தெருமுனையில் அல்லாமல் வீட்டிற்கே கொண்டு வந்து விட்டிருக்க வேண்டும் என்கிறான். அதே சமயம் சிவாவிடம் எச்சரிக்கையாக இரு என்று காயத்ரியிடம் சொல்கிறான். சிவாவுடன் வந்தது தவறு இல்லை. ஆனால் தெருமுனையில் இறக்கிவிட்டதால்தான் தவறாகத் தெரிகிறது என்கிறான். காயத்ரி தன்னை தவறாக நினைத்திருப்பதற்கு சுந்தர் வருத்தப்பட்டு அழுகிறான்.

இது போன்ற விஷயங்களை தான் புரிந்து கொள்வதாக சொல்வதோடு தன்னிடம் இனிமேல் எதையும் மறைக்கக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறான். காயத்ரி தன்னிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அவளை ஒருவிதமாக மிரட்டி பிறகு அவளை புரிந்து கொண்டதாகவும், அவள் கனவுகளை மதிப்பதாகவும் சொல்லி பணிய வைக்கிறான்.

சுந்தர் இவ்வாறு சொல்லும்பொழுது காயத்ரியின் இடத்தில் இருக்கும் யாருக்கும் அவன் தன் மீதுள்ள அக்கறையில் சொல்கிறான் என்கின்ற நம்பிக்கை ஏற்படும். இந்த அக்கறையின் மூலமாக சுந்தர், காயத்ரி மீது உரிமை என்கிற பெயரில் அவளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறான்.
AKS - 48

உண்மையில் காயத்ரி நிச்சயமான பெண் என்று உறுதியாக தெரிந்த நாளிலிருந்து சிவா காயத்ரியிடம் ஒதுங்கி இருக்கிறான். காயத்ரிதான் அவனிடம் வலிய சென்று பேசுகிறாள். அவனுக்கு உணவு கொண்டுவந்து தருகிறாள். அவனை வீட்டில் டிராப் செய்ய சொல்லி கேட்கிறாள்.

சிவா, காயத்ரி உறவை பொருத்தவரையில் ஒருவேளை காயத்ரியே கூட சிவாவிடம் முதலில் காதலை சொல்லலாம். ஒரு ஆண் ப்ரபோஸ் செய்வது என்பது அவனது குற்றமாகவும், பெண் அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பது போலவும் ஏன் பார்க்கப்படுகிறது? அப்படியே ஒருவேளை காயத்ரியிடம் சிவா ப்ரொபோஸ் செய்தாலும் தனக்கும் சுந்தருக்கும் நிச்சயமானதை காரணம் காட்டியோ, அல்லது உண்மையில் விருப்பம் இல்லாவிட்டால் இல்லை என்று காயத்ரி சொல்ல முடியும்.

புனிதாவும், கிஷோரும் கிஷோரின் அறை பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்ததை பார்த்து விட்டு கோபமாக வீட்டிற்கு வரும் பரத், புனிதாவிடம் அது பற்றிக் கேட்கிறான். கிஷோருக்கு உடல்நலம் சரியில்லை என்று அவசரமாகக் கூப்பிட்டதால் சென்றதாக புனிதா சொல்கிறாள். ”பிஸியாக இருப்பதாக சொல்வது ப்ரியாரிட்டியில் நாம் இருக்கிறோமா இல்லையா என்பதுதான்” என்று பரத் சொல்கிறான்.

பரத்துக்கு புனிதாவை பிடித்திருக்கிறது. அவளது தன்னம்பிக்கையும், தைரியமும் மனதிற்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. ஆனாலும் புனிதா பற்றிய விஷயங்கள் பரத்தை எப்போதும் தாழ்வுணர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. அறிவிலும், வருமானத்திலும் தான் புனிதாவிற்கு சரியான இணை இல்லையோ என்கிற சந்தேகமே பரத்திற்கு இத்தகைய குழப்பங்களை உண்டாக்குகின்றன.

புனிதா தெளிவாக பரத்துக்கு சுயவிளக்கம் கொடுக்கிறாள், ஆனாலும் இது போல் விளக்கம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்ததற்கு வருந்துகிறாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கிஷோரிடம் எச்சரிக்கையாக இரு என்று சொல்கிறான் பரத்.
AKS - 48

பரத்தும், சுந்தரும் பொஸசிவ்னெஸ் விஷயத்தில் ஒரே மாதிரி இருக்கிறார்கள். சுந்தரிடம் காயத்ரி பயத்தினால் எல்லாவற்றையும் மறைக்கிறாள். ஆனால் புனிதா பரத்தின் மீது உள்ள அன்பாலும், அவன் புரிந்து கொள்வான் என்கிற நம்பிக்கையாலும் வெளிப்படையாக அனைத்தையும் சொல்கிறாள்.

புனிதா தன் அம்மாவை போல் பார்த்துக் கொண்டதாக கிஷோர் சொன்னதை சுட்டிக் காட்டி அவன் புனிதாவிடம் ப்ரொபோஸ் செய்யலாம் என்று பரத் கூறுகிறான். கிராமத்தில் சமூகத்தின் அத்தனை கோட்பாடுகளையும் பின்பற்றி வளர்ந்த சுந்தரும், லிவிங் டுகெதர் உறவில் இருக்கும், முற்போக்காகச் சிந்திக்கும் பரத்தும் தங்கள் காதலியிடம், ஆண்களிடம் எச்சரிக்கையாக இரு இல்லாவிட்டால் ப்ரொபோஸ் செய்துவிடுவார்கள் என்கிறார்கள்.

’ஆண்களிடம் எச்சரிக்கையாக இரு’ என்று காலம் காலமாக பெண்களிடம் மட்டும் ஏன் சொல்லப்படுகிறது?
”ஒரு ஆணை பற்றி இன்னொரு ஆணுக்கு நன்றாக தெரியும்” என்று பரத் சொன்னபடி, கிஷோர் புனிதாவிடம் ப்ரொபோஸ் செய்வானா? ஆவலுடன் அடுத்த எபிசோடுக்காக,

காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/television/aks-48-sundar-and-bharath-display-same-traits-when-it-comes-to-relationships

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக