Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

கட்டணக் கொள்ளை: `அதிக கட்டணம் கொடுங்கள்!' டிக்கெட்டை ரத்து செய்த ஆம்னி பேருந்து நிறுவனம்

தமிழகத்தில் மட்டும் 3,000-க்கும் அதிகமான தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன. அதிக விலைக்குக் கட்டணத்தை உயர்த்தும் பேருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இருந்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பேருந்து நிறுவனமும் பொருட்படுத்துவதே கிடையாது என்பதுதான் உண்மை.

புக் செய்திருந்த டிக்கெட்

உதாரணமாகச் சமீபத்தில், சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர், வரும் நவம்பர் 02-ம் தேதி சென்னையிலிருந்து தேவக்கோட்டை செல்வதற்கு ராமு டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் இரண்டு டிக்கெட் புக் செய்திருக்கின்றார். அவர் புக் செய்த அன்று (26.10.2021) இரண்டு டிக்கெட்டுக்கும் சேர்த்து, புக்கிங் சார்ஜ் உட்பட 1,614 ரூபாய் பயணக்கட்டணம் செலுத்தியிருக்கின்றார். இவர் டிக்கெட் புக் செய்த அடுத்த தினமே அந்தப் பேருந்து நிறுவனத்திலிருந்து டிக்கெட் புக் நபரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார்கள்.

``தற்போது அந்த டிக்கெட்டின் விலை அதிகரித்திருப்பதாகவும் ஒரு டிக்கெட்டுக்கு கூடுதலாக 360 ரூபாய் தரவேண்டும்" எனப் பேருந்து நிறுவனம் சார்பில் பேசிய நபர் கூறியிருக்கின்றார். அதற்கு டிக்கெட் புக் செய்த நபர், ``நாங்கள் ஏன் கூடுதல் கட்டணம் தரவேண்டும். நான் புக் செய்த நேரத்தில் என்ன தொகை காட்டியதோ அந்தத் தொகையில் தானே புக் செய்தேன். இப்போது நீங்கள் கட்டணத்தை உயர்த்தினால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்' என்று பதில் கூறியிருக்கின்றார். அதற்கு அந்த பேருந்து நிறுவனமோ, ``அதெல்லாம் கிடையாது. கண்டிப்பாக நீங்கள் கூடுதல் தொகையைத் தரவேண்டும் என்றும். இல்லையென்றால் நீங்கள் பயணம் செய்ய முடியாது" என்றும் கூறியிருக்கின்றனர்.

உயர்த்தப்பட்ட கட்டணம்

டிக்கெட் புக் செய்த நபர் இந்த விவகாரத்தை ஜூனியர் விகடனிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ராமு டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``அவர் முதலில் புக் செய்த டிரிப் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே மற்றொரு பேருந்தில் அவருக்கு இருக்கை ஒதுக்கியிருக்கிறோம். அதனால் தான், கட்டணம் அதிகமாகியிருக்கிறது'' என்று கூறினார்கள். அந்த பேருந்து டிரிப் ஏன் ரத்து செய்யப்பட்டு என்று கேட்டோம், அதற்கு ``இது தீபாவளி நேரம் அந்த டிரிப்பில் கட்டணம் குறைவாக இருந்தது. அதனால் தான் அந்த டிரிப் ரத்து செய்யப்பட்டு, கட்டணம் உயர்த்தப்பட்டு வேறொரு டிரிப்பாக மாற்றப்பட்டுவிட்டது. அவருக்கு மட்டுமின்றி இன்னும் 8 நபர்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தெரிவித்தோம். அவர்கள் அனைவருமே மீீதித் தொகையைத் தர ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்'' என்று கூறினார்கள்.

நாம் ராமு டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசிய சிறிது நேரத்தில், டிக்கெட் புக் செய்த நபரைத் தொடர்பு கொண்ட அந்த பேருந்து நிறுவனம். ``நீங்கள் என்ன பத்திரிகையில் எல்லாம் புகார் அளித்துள்ளீர்கள். உங்களின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுவிட்டது. உங்களின் கட்டணம் திரும்ப வந்துவிடும்" என்று கூறியிருக்கின்றார்கள். அவர்கள் சொன்னது போலவே, அவர் புக் செய்திருந்த இரண்டு டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டதாக அவரின் செல்போனுக்கு தகவல் வந்தது. அதில், டிக்கெட் புக்கிங் சார்ஜ் போக மீதம் 1,534.80 ரூபாய் அவரின் கணக்கிற்கு வரும் என்ற தகவல் வந்திருந்தது.

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்

பண்டிகை நாள்களில் எப்படியென்றால், எவ்வளவு கட்டணம் உயர்த்தினாலும், டிக்கெட் புக் செய்தவர்கள் வேறு வழியில்லாது, கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி பயணம் செய்துதான் ஆகவேண்டும் என்பதை நன்கு அறிந்துகொண்ட தனியார் பேருந்து நிறுவனங்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் செய்துகொண்டிருக்கின்றது. தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தல் புகார் தெரிவிக்க அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த 1800 425 6151 தொடர்பு எண்ணில் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. பின்னர் இந்த கட்டணம் கொள்ளை தொடர்பாக யாரிடம் தான் முறையிடுவதோ தெரியவில்லை.

Also Read: ஆம்னி பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பது யார்..?

அனைத்து தனியார் பேருந்து நிறுவனமும் இப்படிச் செய்வது கிடையாது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டேதான் இருக்கின்றது என்பதுதான் உண்மை. தீபாவளி சமயத்தில் தனியார் பேருந்துகள் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை ஒரு முடிவுக்குக் கொண்டுவருமா அரசு.?



source https://www.vikatan.com/news/travel/article-about-private-omni-bus-company-demanding-high-ticket-price

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக