Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

Doctor Vikatan: ஓமிக்ரான் பாதித்தவர்களைத் தனியே வைத்து சிகிச்சை அளிக்கச் சொல்வது ஏன்?

ஓமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவுமே தவிர, அதன் வீரியம் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அப்படியிருக்கையில் ஒருவேளை தமிழத்துக்குள் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் தனியே வைத்து சிகிச்சை அளிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருப்பது ஏன்? வீரியம் குறைவான தொற்றுக்கு ஏன் பயப்பட வேண்டும்?

- அப்துல் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

``ஓமிக்ரான் என்பது உருமாறிய கொரோனா வைரஸ் வகை. சார்ஸ் கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, மியூ என ஏகப்பட்ட உருமாறிய வைரஸ் வகைகளைப் பார்த்துவிட்டோம். வைரஸின் பரப்பில் உள்ள புரதப் பகுதியில் ஏற்படும் மாறுதல்களையே உருமாற்றம் என்று சொல்கிறோம். அதை ஜீனோடைப்பிங் என்ற பிரத்யேக சோதனையின் மூலம் உறுதிசெய்வோம். ஓமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டபோது 35-க்கும் மேலான முறை உருமாறியிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். சாதாரண சளி, காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் முதல் ஹெச்.ஐ.வி உள்ளிட்ட எல்லா வைரஸ்களும் உருமாறுவது இயல்பு. ஓமிக்ரான் உருமாற்றமானது வைரஸின் ஸ்பைக் புரோட்டீன் பகுதியில் ஏற்பட்டது. ஸ்பைக் புரோட்டீன் பகுதியில் நிகழ்ந்திருக்கும் இந்த உருமாற்றம் காரணமாக, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் ஓமிக்ரான் தொற்று பாதிக்க வாய்ப்புண்டு.

Also Read: ஓமிக்ரான்: ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு குணமானவர்களையும் பாதிக்குமா புது வேரியன்ட்? - FAQ

தடுப்பூசியின் பாதுகாப்பிலிருந்து அந்தத் தொற்று தப்பிக்கலாம். அது நிச்சயம் அப்படித் தப்பிக்குமா என்பது குறித்த புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை. ஒருவேளை அப்படித் தப்பித்தால் இந்த வைரஸானது மிக வேகமாகப் பரவும்.

உலகம் முழுக்க பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. அதன் விளைவாக அவர்களில் பலரின் நடவடிக்கைகளிலும் மாற்றங்களைப் பார்க்கிறோம். `தடுப்பூசிதான் போட்டாச்சே... இனிமே எங்கே வேணா போகலாம், மாஸ்க் இல்லாம இருப்போமே....' என்று அவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடும். அந்த நிலையில் ஒருவேளை ஓமிக்ரான் பரவத் தொடங்கினால் அதன் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும். அதைத் தடுக்க வேண்டும் என்றால் எப்போதும்போல கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் பரவினால், அதன் விளைவாக தீவிரமான நோய்கள் பாதிக்குமா என்பதே பலரின் கேள்வியும். கொரோனாவின் முந்தைய அலைகளில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளையும், இணைநோய் உள்ளவர்களுக்கு அந்த பாதிப்புகள் சற்று தீவிரமாக இருந்ததையும் பார்த்திருக்கிறோம்.

COVID-19 patient/ Representation Image

நுரையீரல் பாதிக்கப்பட்டு, கோவிட் நிமோனியா பாதித்து ஐசியூ வரை சென்றவர்களையும் பார்த்தோம். ஒமிக்ரானும் அதே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துமா என்று பலரும் கேட்கிறார்கள். இன்றுவரை தினமும் கோவிட் பாதித்தவர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவர்களில் யாரும் தீவிர பாதிப்புக்குள்ளாவதில்லை. காரணம் தடுப்பூசி. தடுப்பூசி போடப்பட்டதால் அவர்களது உடலில் ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது. அது தரும் பாதுகாப்பால் நோய் தீவிரமாவது தடுக்கப்படுகிறது. அதே ஆன்டிபாடி, ஓமிக்ரான் தொற்றிலிருந்தும் பாதுகாக்குமா என்பது குறித்த தகவல்கள் நம்மிடம் இல்லை. இந்த உருமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டு வெகு சில நாள்களே ஆவதால் இன்னும் 2- 3 வாரங்களுக்குப் பிறகு சரியான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஓமிக்ரான் பாதிப்பு தீவிர பாதிப்பை ஏற்படுத்தினால் அப்போது ஓமிக்ரான் வீரியமானது என்று புரிந்துகொள்ளலாம். தடுப்பூசி போடாதவர்களுக்குத் தீவிர பாதிப்பைக் கொடுத்தால் அதை வேறு மாதிரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே முந்தைய அலைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கே தீவிர பாதிப்புகள் ஏற்படுவதைப் பார்த்தோம். இதுவரை நாம் கேள்விப்பட்டவரை ஓமிக்ரான் பாதித்தவர்களுக்கு அதன் வீரியம் அதிகமாக இல்லை. தென் ஆப்பிரிக்காவில் தீவிர பாதிப்புக்குள்ளான இருவர் தடுப்பூசி போடாதவர்கள்.

ஓமிக்ரான் தொற்று வந்தால் அவர்களை ஏன் தனியே வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு வருவோம். இதற்கு முன் டெல்டா வைரஸ் வந்தபோதும் உலகம் முழுவதும் அப்படித்தான் தனித்து வைத்துச் சிகிச்சை கொடுத்தோம்.f

Covid 19 Outbreak

Also Read: Doctor Vikatan: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தொற்று; வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாமா?

அது அந்த வைரஸ் உருமாற்றத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கும்வரைதான். அந்தத் தெளிவு வந்துவிட்டால் இப்படித் தனியே வைத்துச் சிகிச்சை கொடுக்க மாட்டார்கள். அதுவரை அந்தத் தொற்று மற்றவர்களுக்குப் பரவிவிடாமலிருக்கவே இந்த ஏற்பாடு.

`தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஓமிக்ரான் தொற்று வரலாம் என்கிறீர்களே... பிறகு எதற்கு தடுப்பூசி' என்று சிலர் கேட்கலாம். இதற்கு முன் பரவிய டெல்டா வைரஸும் அப்படி தடுப்பூசி போட்டவர்களுக்கும் வந்திருக்கிறது. ஆனால் யாரும் தீவிர நோய் பாதிப்புக்கு ஆளாகவில்லை. அதே மாதிரிதான் ஓமிக்ரான் தொற்றிலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசியின் நோக்கம் என்பது வைரஸையே தடுப்பதல்ல.... அதனால் ஏற்படும் தீவிர நோய் நிலையையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் தவிர்ப்பதே."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/why-people-who-contract-omicron-variant-covid-19-are-treated-seperately

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக