Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

`ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!’ - அரசுக்கு கடிதம் எழுதிய திருப்பூர் கான்ட்ராக்டர்

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ‘பவர் பில்டர்ஸ்’ நிறுவனம். இந்த நிறுவனமானது தமிழக அரசின் நெடுஞ்சாலை துறையில் பதிவு பெற்ற முதல் வகுப்பு குத்தகைதாரராக இருந்து பல கான்ட்ராக்டுகளை எடுத்து செய்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒப்பந்ததாரருக்கான பதிவினை புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே, தொடர்ந்து டெண்டர்களில் கலந்து கொண்டு பணிகளை எடுத்துச் செய்ய முடியும். அந்தவகையில், 2019-2020 ஆம் ஆண்டிற்காக ஒப்பந்ததாரர் பதிவினை புதுப்பிக்க பவர் பில்டர்ஸ் நிறுவனம் விண்ணப்பிக்க, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்த பிறகே பதிவு புதுப்பிப்பு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் தரப்புக்கு ஆதரவாகப் போகாததாலும், அதிகாரியின் பழிவாங்கும் நோக்கமும் தான் இதற்கெல்லாம் முழுக்காரணம் என பகிரங்கங்கமான குற்றச்சாட்டை பவர் பில்டர்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து வைத்துள்ளனர்.

நல்லா கவுண்டர்

இதுகுறித்து பவர் பில்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான நல்லா கவுண்டர் அவர்களிடம் பேசினோம். “எங்களது நிறுவனமானது கிளாஸ்-1 குத்தகைதாராராக இருந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளின் பல டெண்டர்களை எடுத்து செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தராதர் பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்கின்ற அடிப்படையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான பதிவை புதுப்பித்துக் கொள்ள, பதிவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் 07.08.2019 அன்று சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தோம்.

அதிகாரிகள் நாங்கள் அனுப்பிய ஆவணங்களை நன்றாக ஆய்வு செய்யாமல், பொய்க் காரணங்களைக் கூறி எங்களது விண்ணப்பத்தை நிராகரித்தனர். ஏற்கனவே இருந்த எங்களுடைய பதிவை தற்காலிகமாக ரத்து செய்ததோடு, ரத்து செய்த தகவலை நெடுஞ்சாலைத்துறையின் எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்தனர். பதிவு நடப்பில் இல்லையென்றாலே, எந்தவொரு ஏலத்திலும் கலந்துகொள்ள முடியாதே!... அப்படியிருக்க திட்டமிட்டே எங்களை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளனர்.

மாதிரி படம்

நாங்கள் இரண்டு வருடங்களாக எந்த வேலைகளையும் செய்யவில்லை. எந்த டெண்டரிலும் கலந்து கொள்ளவில்லை என்று காரணம் கூறி எங்களுடைய பதிவை நீக்கம் செய்துள்ளனர். ஆனால், 26.07.2017 அன்று கோவையில், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற 3 ஏலத்தில் கலந்து கொண்டதற்கான வைப்புத் தொகை செலுத்திய வங்கி வரைவோலை நகலை இணைத்து அனுப்பியிருந்தோம். அதனை நினைவுபடுத்தி, மீண்டும் ஒருமுறை 30.10.2019-ல் கடிதம் எழுதி அந்த வங்கி வரைவு ஓலை ஒளி நகலையும் சேர்த்து அனுப்பியிருந்தோம். இருந்தும் சுவற்றில் அடித்த பந்தைப் போல 15.11.2019 அன்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக பதில் அனுப்பினர். தொடர்ந்து எங்களது தரப்பு விளக்கத்தை தெரியப்படுத்தி 13.12.2019 அன்று மறுபடியும் கடிதம் எழுதினோம்.

Also Read: பணம் தராமல் இழுத்தடித்த திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் - கற்களைப் பெயர்த்து வசூலித்த கான்ட்ரக்டர்!

அதன்பிறகு ஏலத்தில் கலந்து கொண்டதற்கான சான்றுகளோடு, ரூ.500-ஐ கட்டணமாக வங்கி வரைவு ஓலை அனுப்பச் சொன்னார்கள். அனுப்பினோம். ஆனால், பதில் கடிதத்தில் அபராதத் தொகை உரிய வடிவில் இல்லை என ஏதேதோ காரணங்களைச் சொல்லி பதிவு புதுப்பித்தல் நிராகரிக்கப்படுகிறது என பதில் கொடுத்தார்கள். பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு, முறையீட்டிற்குப் பிறகு 6.10.2020 அன்று புதுப்பித்தல் மனுவை சமர்ப்பியுங்கள் என்று ஒரு கடிதம் அனுப்பினார்கள். பலமுறை ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதால் மீண்டும் ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டிய சூழல் எழவில்லை என பதில் அனுப்பினோம். பல கடிதங்கள், பல பதில்கள் என 2 வருட போராட்டத்திற்குப் பிறகே பதிவு புதுப்பிக்கப்பட்டது.

திருப்பூர் பூலவாடி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்கு 18.5.2018 அன்று நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்டோம். சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் (நெ) அலுவலகத்தில் தான் இந்த ஏலம் நடைபெற்றது. அப்போது அங்கு கண்காணிப்பு பொறியாளராக இருந்தவர் வளர்மதி என்பவர். அதுமட்டுமில்லாமல், 19.12.2018 அன்று மேற்படி அலுவலகத்தில் 4 வேலைகளுக்கு ஏலம் நடைபெற்றது. எங்களை 2.30 மணி வரை காக்க வைத்துவிட்டு, அதன்பிறகு ஏலப்பெட்டியை வளர்மதி அவர்கள் தனது அறையிலேயே வைத்து உள் தாளிட்டு பூட்டிக் கொண்டார். 3 மணிக்கு ஏல நேரம் முடியும் வரை திட்டமிட்டு எங்களை ஏலத்தில் கலந்துகொள்ள முடியாதபடி தந்திரமாக விரட்டி அடித்துவிட்டார். இந்த ஏலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வைக்கப்பட வேண்டுமென கலெக்டர், தலைமைச் செயலாளருக்கு அப்போதே கடிதம் அனுப்பினோம்.

மாதிரி படம்

இப்படி நாங்கள் பலமுறை சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் (நெ) அலுவலகத்தில் நடைபெற்ற பல ஏலங்களில் கலந்து கொண்டிருக்கிறோம். அதேபோல, ஒரு குறிப்பிட்ட வேலைக்கான ஏலத்தில் நாங்கள் கலந்துகொண்ட போது, முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்ட குத்தகைதாரருக்கு அதனை விட்டுக் கொடுக்கச் சொல்லியும், அமைச்சர் தரப்பை சந்திக்கச் சொல்லியும் வளர்மதி எங்களிடம் கேட்டார். அதனை நாங்கள் பொருட்படுத்தவேயில்லை. இதனையெல்லாம் மனதில் வைத்தே திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியால் வன்மத்துடன் எங்கள் நிறுவனத்திற்கு இரண்டு ஆண்டுகளாக பதிவை புதிப்பித்துக் கொடுக்காமல், எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்து கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு பெரும் பொருளாதார நஷ்டத்தை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். எனவே கண்காணிப்புப் பொறியாளர் வளர்மதி மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், எனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடாக ஒருகோடி ரூபாயை வளர்மதியின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். அதற்கும் தயாராகி வருகிறோம்!” என்றார்.

சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் (நெ) கண்காணிப்பு பொறியாளராக இருந்த வளர்மதி தற்சமயம், திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளராக இருந்து வருகிறார். இந்த விவகாரம் சம்பந்தமாக விளக்கம் கேட்டு அவரிடம் பேசினோம். “சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவங்க ரெஜிஸ்ட்ரேஷன் ரினிவலுக்கான சரியான ஆவணங்களை இணைக்காம, வெறும் ரினிவல் அப்ளிகேஷனை மட்டுமே கடிதம் மூலமாக எங்களுக்கு அனுப்புனாங்க. அதனால உரிய வடிவில் அப்ளிகேஷனை அனுப்பச்சொல்லி சொல்லியிருந்தோம். ஒரு கான்ட்ராக்டருக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ரினிவல் ரொம்ப முக்கியம்.

Also Read: சாலைப் பணியில் அலட்சியம்: அபராதம், ஒப்பந்தம் ரத்து! - கேரள பொதுப்பணித்துறை அதிரடி

அப்படியிருக்க நேர்ல வந்து என்னென்ன ஆவணங்களை சப்மிட் செய்யணும்னு கேட்டு இருக்கலாமே! வீட்ல இருந்தே கடிதம் மூலமாக அனுப்பி கேட்டா, அதுக்கு என்ன பதிலோ அதைத்தானே கடிதத்துல கொடுக்க முடியும். உரிய வடிவில் இல்லைன்னு கொடுத்திருந்தோம். கோயம்புத்தூர்லயும், எங்க ஆபீஸ்லயும் டெண்டர்ல கலந்துருக்கேன்னு அவங்க சொன்னா, நாங்க அதற்கான ஆவணங்களை தேடி ரினிவல் செய்யணுமா! அப்ளிகேஷனோட அவங்க தானே அட்டாச் செஞ்சிருக்கணும். முறையான ஆவணங்களை அவங்க கொடுத்த பின்னாடி நாங்க ரினிவல் செஞ்சுக் கொடுத்துட்டோம். மற்றபடி வேற எந்த உள்நோக்கத்தோடயும் நான் செயல்படலை” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/contractor-seeking-rupees-one-crore-compensation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக