Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

தொழிலதிபரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கு... மும்பை தாதா சோட்டா ராஜன் விடுவிப்பு!

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு பல ஆண்டுகளாக வெளிநாட்டில் பதுங்கி இருந்த சோட்டாராஜன் இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தி கொண்டு கொண்டு வரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோட்டாராஜன் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் மும்பையில் பதிவாகி இருந்தாலும், மும்பை சிறைகளில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளால் சோட்டாராஜன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோட்டாராஜன் மீது இருக்கும் அனைத்து வழக்குகளையும் மும்பை போலீஸார் சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டனர். அவ்வழக்குகள் மும்பை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 2002-ம் ஆண்டு விரேந்திர ஜெயின் என்ற தொழிலதிபரிடம் மர்ம நபர்கள் இரண்டு பேர் போன் செய்து சோட்டாராஜன் பெயரை சொல்லி ரூ.25 லட்சம் மிரட்டி பணம் கேட்டனர்.

சோட்டாராஜன்

இது தொடர்பாக தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில் சோட்டாராஜன், அவரின் கூட்டாளிகள் பண்டி பாண்டே, பிரின்ஸ் சிங் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் சோட்டாராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார், `தனது மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை. சிபிஐ ஆதாரமாக எதையும் எடுத்து வரவில்லை. போலீஸார் தாக்கல் செய்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்கனவே இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த பண்டி பாண்டே, பிரின்ஸ் ஆகியோரை கோர்ட் விடுவித்துவிட்டது. சோட்டாராஜனுக்கு இவ்வழக்கில் நேரடி தொடர்பு கிடையாது. ராஜன் யாருக்கும் போன் செய்து மிரட்டவில்லை. ராஜன் பெயரை சொல்லி குற்றவாளிகள் மிரட்டி பணம் கேட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Also Read: 'மும்பை தாதா சோட்டா ராஜன் இறந்துவிட்டதாக வதந்தி': எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதீப், ``குற்றவாளிகள் சோட்டாராஜன் பெயரைச்சொல்லித்தான் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இது ஒன்றே சோட்டாராஜனுக்கு எதிரான குற்றத்திற்கு போதுமானது” என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கில் இருந்து சோட்டாராஜனை விடுவித்து உத்தரவிட்டார். இதே கோர்ட்தான் கடந்த அக்டோபர் 28-ம் தேதி சோட்டாராஜனை கொலை முயற்சி வழக்கில் இருந்து இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது. சோட்டாராஜன் விடுவிக்கப்பட்டு இருப்பது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மற்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பதால் சோட்டாராஜன் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளியில் வர முடியாது” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/judiciary/mumbai-dada-chhota-rajan-acquitted-of-extorting-money-from-businessman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக