Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

`திமுக ஆட்சியில் மர்மதேசமாக தமிழ்நாடு; அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்!’ - சி.வி.சண்முகம் காட்டம்

விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று (03.12.2021) மதியம் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 மாத காலமான நிலையில், இன்று தமிழ்நாடு மர்மதேசமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. உயர் அதிகாரிகள் முதற்கொண்டு கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் வரை அனைவரும் ஒரு அச்ச உணர்வோடு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டுள்ள நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிர்வாகத்தை யார் செயல்படுத்துகிறார்கள் என்பது முதலமைச்சருக்கு தெரியுமா... தெரியாதா... என்று தெரியவில்லை. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பழிவாங்குவதே அவர்களின் ஒரே கொள்கை. தமிழகத்தை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும், கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்தவேண்டும், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கம் முதலமைச்சருக்கு சிறிதளவும் இல்லை. ஏதோ ஒரு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மக்கள் மத்தியிலும் நடித்துக் கொண்டுள்ளார்கள்.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - விழுப்புரம்

அமைச்சர்கள், இருக்கிறார்களா... செயல்படுகிறார்களா... கோட்டைக்கு செல்கிறார்களா... அல்லது ஏதும் இல்லையா என்பதும் தெரியவில்லை. இந்தநிலையில், எதிர்க்கட்சியை பழிவாங்க வேண்டும் என்பதை மட்டும் தான் நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். இவர்கள் தான் அரிச்சந்திரன் வீட்டிற்கு பக்கத்துவீட்டார் போல எங்களை குறை சொல்லி, எங்கள் நிர்வாகத்தின் மீது பழி சொல்லிக்கொண்டு உள்ளார்கள். நிர்வாகம் நடத்துவதற்கு துப்பில்லாத இந்த அரசு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 6 மாத காலம் ஆகியும் எங்களையே குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். எங்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் சரி அதை சட்டரீதியாக சந்திப்பதற்கு அதிமுக தயாராக இருக்கிறது.

Also Read: `கட்சி என்றிருந்தால், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்!' - ஒப்புக்கொள்கிறார் அதிமுக அன்வர் ராஜா

ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு யாருடைய தயவில் வந்தது? அரசு ஊழியர்களின் தயவில்லாமல்... அவர்கள் பிச்சை போடவில்லை என்றால்... திமுக அரசு இன்று ஆட்சியிலேயே இல்லை. ஏனென்றால் எங்களுக்கும் அவர்களுக்குமான வாக்கு வித்தியாசம் 3% தான். பெருவாரியான அரசு ஊழியர்கள் திமுக-விற்கு வாக்கு அளித்தார்கள். அவர்களின் தயவில் இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்போடுவது மட்டுமின்றி, அனைத்து அரசு அதிகாரிகளையும் பழிவாங்கும் நோக்குடன் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக அச்சுறுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினுடைய தனிப்பட்ட கைக்கூலியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ஏன் இதை சொல்கிறேன் என்றால்... லஞ்ச ஒழிப்புத்துறை என்பது தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. யாராக இருந்தாலும் சரி, புகார் வரும் பட்சத்தில் அவர்களை விசாரித்து, புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு அதிகாரம் மிகுந்த அமைப்பு. கந்தசாமி தலைமையிலான இந்த லஞ்ச ஒழிப்புத்துறை எப்படி செயல்பட்டுக் கொண்டுள்ளது என்பதை ஊடகங்கள், பத்திரி்கைகள் வாயிலாக பார்த்திருப்பீர்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது இந்த துறை சோதனை நடத்திக் கொண்டிருந்த போதே... லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைவர் கோட்டைக்கு சென்று முதலமைச்சரை சந்திக்கிறார். எதற்காக சந்தித்தார்..? 'முன்னாள் அமைச்சர் மீது சோதனை செய்து, அவரை அன்றே கைது செய்ய வேண்டும்' என்பதுதான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளும் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பணி. ஆனால் இவர்களுக்கு எந்த ஆவணமும் அங்கு கிடைக்கவில்லை என்பது பெரும் ஏமாற்றம். இந்த அதிகாரியே நேரில் சென்று முதலமைச்சரை சந்தித்தாரோ... இல்லை, முதலமைச்சரே நேரில் வரவழைத்து மிரட்டினாரோ தெரியவில்லை. எந்த முகாந்திரமும் இல்லாததால் கைது செய்ய வந்தவர்கள் அப்படியே சென்றுவிட்டனர்.

மு.க.ஸ்டாலின்

Also Read: ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்த பிரபல ரெளடி?! - சர்ச்சைக்கு மாவட்டப் பொறுப்பாளர் சொல்வதென்ன?

இன்று தமிழகத்தில், அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் மிரட்டப்படுகிறார்கள். பணி செய்வதா, ராஜினாமா செய்வதா, இல்லை தற்கொலை செய்துக்கொள்வதா.. என்று தெரியாமல் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் நடைபெறாத துயரச்சம்பவம் இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது. சுமார் 35 ஆண்டு காலமாக தமிழகத்தில் பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் வெங்கடாசலம். தைரியமானவர், எந்த விஷயமானாலும் பளிச்சென்று நேராக சொல்லக்கூடியவர். அப்படிப்பட்டவர் பணி ஓய்வுக்குப் பிறகு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்டவரை, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த அரசு ராஜினாமா செய்யச் சொல்லி அச்சுறுத்தியது. தன் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கிருந்தால் கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கத்தில் மிரட்டியது. நேர்மையான அவரோ 'ராஜினாமா செய்ய முடியாது' என கூறினார். ஆனால் காரணம் ஏதுமின்றி இந்த ஆட்சியில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடந்தது.

பல ஆண்டுகளாக அரசு துறையில் வேலை செய்து வந்த அவரது வீட்டில் வெறும் 11 லட்சம் பணத்தையும், 4 கிலோ தங்கம், சில சந்தன பொருட்களையும் எடுத்து வழக்குப் போட்டார்கள். இன்றைய நாட்களிலே இது சாதாரணமானது. ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, துரைமுருகன் என பலர் மீதும் பல வழக்குகள் இருக்கிறது. நீதிமன்றத்தில் தினம்தினம் வழக்குகளை சந்திக்கிறார்கள். தைரியமான இந்த நபர், இவ்வழக்கை எண்ணி அச்சப்படுபவரும் இல்லை. திடீரென இவர் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அந்த நேரத்தைப் பார்த்தால் இன்னும் சந்தேகம் எழுகிறது. சகஜமாக காலையில் எழுந்து சாப்பிட்டிருக்கிறார், மதியம் சாப்பாடு தயார்செய்து வைத்திருக்கிறார்கள். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் என்ன நடந்தது? என்ன அச்சுறுத்தல் அவருக்கு கொடுக்கப்பட்டது?

சி.வி.சண்முகம்

வேலூருக்கு நியமிக்கப்பட்ட ஒரு பெண் அதிகாரியின் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்னர் ரெய்டு நடக்கிறது. 2.25 கோடி ரூபாய், கோடிக்கணக்கில் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றபடுகிறது. ஆனால் அவர் அப்போது கைது செய்யப்பட்டாரா? தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாரா? மேல் நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டதா? என்றால் ஏதுமில்லை. இதுவே ஒரு கடைநிலை ஊழியர் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியிருந்தார் என்றால் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பார்கள். இந்த விஷயத்தில் ஏன் அப்படி இல்லை.

Also Read: கைவிரித்த அரசியல் வி.வி.ஐ.பி?! - வெங்கடாசலம் தற்கொலை பின்னணி!

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இந்த பெண் அதிகாரி வீட்டில் கைப்பற்றப்பட்ட தொகை 20 கோடி. அதில், 2.25 கோடி ரூபாயை கணக்கு காட்டிவிட்டு மீதியை அந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபரிடம் கொடுத்துவிட்டனர். அதனால்தான் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, அடுத்த 10 நாட்களிலேயே அந்த பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர், முன்னாள் அமைச்சர்கள் மீது அவர்களை பழி சொல்ல சொன்னார்கள். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், 1.5 மாதங்கள் கழித்து அந்தப் பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட 2வது நாளிலேயே தான் வெங்கடாசலம் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு கொடுக்கப்பட்ட அச்சுறுத்தலால் தான் தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் மர்மம் இருக்கிறதா..?

வெங்கடாசலம்

இந்த அரசின் மீது நம்பிக்கையே இல்லை. எப்போதெல்லாம் திமுக தலைமையை சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டு வருகிறதோ அப்போதெல்லாம் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு வந்தபோது அண்ணாநகர் ரமேஷ் தற்கொலை, கனிமொழி மீது குற்றச்சாட்டு வந்தபோது சாதிக் பாட்ஷா தற்கொலை.

Also Read: சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசினாரா..? - வைரல் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ விளக்கம்!

அரசு ஊழியர்கள் என்பவர்கள் அரசின் நிர்வாகப் பணிகளை சட்டபூர்வமாக செய்யும் பணியாளர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் இன்று அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இது மிகவும் அபாயகரமான சூழ்நிலை. உதாரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் ஒன்றியத்தில் நடைபெற்ற ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தல். அந்த அரசு அதிகாரி, தான் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக தேம்பி தேம்பி அழுகிறார். அவ்வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வெங்கடாசலம் மரணத்தில் மர்மம் உள்ளது. அதை சி.பி.ஐ-க்கு மாற்றி உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cvshanmugam-press-meet-about-dmk-rule-and-government-officials-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக