Ad

வெள்ளி, 3 டிசம்பர், 2021

`நம் நிலை மாறும்... தலை நிமிரும்!' - அறிக்கை மூலம் சசிகலா சொல்ல வருவதென்ன..?

அ.தி.மு.க செயற்குழு கூட்டம், அடுத்தநாளே ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் அறிவிப்பு, உடனடியாக சசிகலாவிடமிருந்து அறிக்கை என தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாள்களாக அ.தி.மு.க-வை மையமிட்டே சுழல்கிறது. அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர்ளின் தேர்வு குறித்த விதிகள் திருத்தப்பட்டிருக்கும் நிலையில், 'நம்‌ தலைவர்கள்‌ வகுத்த சட்டத்‌ திட்டங்களை, அவர்கள்‌ முன்னெடுத்து சென்ற அதே பாதையில்‌, பிறழாமல்‌ நம்‌ இயக்கத்தை கொண்டு செல்வோம்' என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சசிகலா. அதாவது, தற்போது செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு எதிராக மறைமுகமாக தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார் சசிகலா.

அதிமுக செயற்குழு

கடந்த புதன்கிழமை சென்னை இராயப்பேட்டையிலிருக்கும், அ.தி.மு.க தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில், அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, 'அ.தி.மு.க பொன்விழவை எழுச்சியுடன் கொண்டாடுவது, தி.மு.க-வின் பொய்யான வாக்குறுதிகளுக்குக் கண்டனம்' உள்ளிட்ட 11 பொதுத் தீர்மானங்களும், ஓர் இரங்கல் தீர்மானமும், ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. சிறப்புத் தீர்மானத்தில் ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்குப் பதிலாக, அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த விதிகளை, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நினைத்தாலும் மாற்ற முடியாது என்றும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த நாளே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறும் எனவும் அ.தி.மு.க தலைமையால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா. அதில்,

`உங்கள்‌ நம்பிக்கை கண்டிப்பாக வீண்‌ போகாது. நீங்கள்‌ அனைவரும்‌ சோர்ந்து போகாமல்‌ தைரியமாக இருங்கள்‌. ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும்‌, விருப்பு வெறுப்புகளுக்காகவும்‌ செயல்பட்டு கொண்டிருக்‌கின்ற நம்‌ இயக்கத்தைச் சரி செய்து, மீண்டும்‌ அதைத் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும்‌, நம்‌ தலைவர்கள்‌ வகுத்த சட்ட திட்டங்களை, அவர்கள்‌ முன்னெடுத்துச் சென்ற அதே பாதையில்‌, பிறழாமல்‌ நம்‌ இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும். மேலும், அரசியல்‌ எதிரிகளின்‌ கனவுகளையெல்லாம்‌ தகர்த்து, அவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக நம்‌ இயக்கம்‌ வெளிப்படவும்‌, ஒவ்வொரு தொண்டனும்‌ அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்‌ என்று பெருமையோடும்‌, மிடுக்கோடும்‌, கர்வத்தோடும்‌ தன்னை இந்த சமூகத்தில்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ வகையில்‌ நம்‌ இயக்கத்தை விரைவில்‌ மாற்றிக்‌ காட்டுவோம்‌. கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் சந்தோசமாக, கவலையின்றி இருங்கள்‌. உங்களுடன்‌ தோளோடு தோள்‌ கொடுத்து உங்களுக்காக உழைக்க வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்‌.

சசிகலா

அண்மைக்காலமாக எந்தவித காரணமும்‌ இல்லாமல்‌ காழ்புணர்ச்சியின்‌ காரணமாக உதாசீனப்படுத்தப்பட்டவர்கள்‌, ஒதுக்கப்பட்டவர்கள்‌ மற்றும்‌ தாங்களாக ஒதுங்கிக் கொண்டு செயல்படாமல்‌ இருப்பவர்கள்‌ என அனைவரும்‌ கவலைப்படாமல்‌ சிறிது காலம்‌ பொறுத்திருங்கள்‌. உங்கள்‌ மக்கள்‌ பணிகளை தொடர்ந்து செய்யுங்கள், விரைவில்‌ அ.தி.மு.க‌ நிலை மாறும்‌, தலை நிமிரும்‌, இது உறுதி" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையின் மூலம் சசிகலா என்ன சொல்ல வருகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

``எடப்பாடி பழனிசாமி & ஓ.பி.எஸ் இருவரும் தங்கள் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். கட்சியின் விதிகளைத் திருத்திக் கொள்ளலாம். ஆனால், சட்டம் சின்னம்மாவுக்குச் சாதகமாகவும், கட்சித் தொண்டர்கள் சின்னம்மாவுக்கு ஆதரவாகவும் இருப்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது. சின்னம்மாவை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியது தொடர்பாக, அவர் தொடர்ந்திருக்கும் வழக்கில், பொதுக்குழுவை கூட்டியது செல்லாது எனத் தீர்ப்பு வந்துவிட்டால். அதற்குப்பிறகு இவர்கள் கூட்டிய எந்தக் கூட்டமும் செல்லாமல்தான் போகும். அதேபோல, தஞ்சை சுற்றுப்பயணமாக இருக்கட்டும், சென்னையில் மூன்று நாள்கள் மழைக்கால நிவாரணம் வழங்க சென்றபோதும் சரி, சின்னம்மாவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை நாங்கள் அருகிலிருந்து பார்த்தோம்.

Also Read: அதிமுக: `உட்கட்சி விதிகள் திருத்தம், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்!' - பலனடையப்போவது யார்?

'அம்மா நீங்கள் கட்சிக்குள் வரவேண்டும். அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும்' என்பதுதான் அவர்கள் அனைவரின் கோரிக்கையாகவும் இருந்தது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் சின்னம்மாவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. கட்சியிலிருக்கும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் சின்னம்மாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதனால், சின்னம்மா சொன்னதுபோல, இந்த நிலை மாறும். விரைவில் அ.தி.மு.க வலுவான தலைமையின் கீழ் வரும்'' என்கிறார்கள் உறுதியாக.

ஆர்.எம்.பாபு முருகவேல்

ஆனால், அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் பேசும்போது, ``சிட்டி சிவில் கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்திருக்கும் ஒரேயொரு வழக்குதான் இன்னும் நிலுவையிலிருக்கிறது. அந்த வழக்கிலும் தினகரன் ஏற்கெனவே விலகிவிட்டார். சசிகலா மட்டுமே வாதியாக இருக்கிறார். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என நாங்கள் தாக்கல் செய்த மனுவின்படி, எங்கள் தரப்பு விசாரணைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அவர்கள் சார்பில்தான் இன்னும் ஆஜராகாமால் இழுத்தடித்து வருகின்றனர். சட்டரீதியாக அவருக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றால், இவர்களின் கோரிக்கையை 2018-ல் இந்தியத் தேர்தல் ஆணையம், 2019-ல் டெல்லி உயர் நீதிமன்றம், 2020-ல் உச்ச நீதிமன்றம், அதே ஆண்டில் அவர்கள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என அனைத்தும் எதற்காக நிராகரிக்கப்படவேண்டும்.

'கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு வேண்டுமானால் தொடுத்துக் கொள்ளலாம்' என உச்ச நீதிமன்றம் சொன்னதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகின்றனர். இந்த வழக்கு நிற்காது என்பதால்தான் வாய்தாவாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு தள்ளுபடி ஆனாலும் இன்னொரு வழக்கு போடுவார்கள். ஆனால், அவர்களால் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்யமுடியாது. மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பவர்கள், சசிகலா நிற்காவிட்டாலும், அவர் சார்பாக வேறு ஒருவரை தேர்தலில் போட்டியிட வைத்து தங்களின் பலத்தை நிரூபித்திருக்கவேண்டும்.

சசிகலா, தினகரன்

ஆனால், மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அறிக்கைகளின் மூலமாகவும், பேட்டிகளின் மூலமாகவும் தங்களுக்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் சசிகலா, அ.தி.மு.க-வை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார். தற்போதைய தலைவர்கள் ஒற்றுமையாக கட்சியை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொண்டர்களும் அதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். சசிகலாவுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/whats-behind-the-sasikala-statement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக